உஸ்தாத் முஹம்மத் மஹ்தி ஆகிப் -தஃவாவும் ஜிஹாதும் ஒன்று சேர்ந்த செயல் வீரர்-

FB_IMG_1506213937729

இந்தக் கட்டுரை உஸ்தாத் முஹம்மத் மஹ்தி ஆகிப், அவரது ஆளுமை, இயக்க வாழ்வு, சிந்தனை, செயற் பரப்பு, அவர் எடுத்த முடிவுகள், அவரது அரசியல் செயற்பாடுகள் போன்ற விடயங்களை மதிப்பீடு செய்யும் கட்டுரையல்ல. நம் முன்னால் சத்தியத்துக்காக தனது முழு ஆயுளையும் அர்ப்பணித்து வாழ்ந்த அந்த ஆளுமை குறித்த ஒரு பொதுவான அறிமுகமே இது.

“ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே ஆகவேண்டும்; அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செயல்க)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை, மயக்கத்தை அளிக்கக் கூடிய (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.” (ஆல இம்ரான் : 3:185)

இஸ்லாத்தின் உயர் தூதை உலகெங்கும் ஒலிக்கச் செய்வதற்கு ஆண்டாண்டு காலமாக ஓயாமல் உழைத்த மிகப் பெரும் ஆளுமையின் ஆத்மா கடந்த செப்டம்பர் 22ம் தேதியோடு தனது ரப்பின்பால் மீண்டு விட்டது. உலக இஸ்லாமிய இயக்கங்களின் தாய் இயக்கமாகக் கருதப்படும் அல்இஃக்வானுல் முஸ்லிமூன் அமைப்பின் ஏழாவது சர்வதேசப் பொது வழிகாட்டி உஸ்தாத் மஹ்தி ஆகிப் அவர்கள் தனது 89வது வயதில் அல்லாஹ்வின்பால் மீண்டு சென்றுவிட்டார்கள். ரஹிமஹுல்லாஹ்; வல்ல அல்லாஹ் தனது மிகப் பெரும் கருணையை அவர் மீது பொழிவானாக!

எகிப்தின் சர்வாதிகாரச் சிறைகளில் அப்துல் பத்தாஹ் சீசியின் அரசால் தொடர்ந்தும் மருத்துவச் சிகிச்சைகள் மறுக்கப்பட்டு வந்த நிலையில் உஸ்தாத் மஹ்தி ஆகிப் கடந்த இரு வருடங்களுக்குள் பல முறைகள் கவலைக்கிடமான முறையில் மரணத்தின் வாசலைத் தொட்டு விட்டு மீண்டதை முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை சார்ந்த செய்தித் தளங்களூடாக அறிந்து வந்திருக்கிறோம். இந்நிலையில் சுகயீனக் கோரிக்கை மூலமாக சிறையை விட்டும் சீசி அரசிடம் மன்னிப்புப் பெற்று வரக்கூடிய சந்தர்ப்பம் வழங்கப்பட்டும், இறை பாதையில் திடவுறுதி பூண்ட அந்த ஆளுமை எந்த வகை சமரசத்தையும் எதிர்பார்க்காது இறுதிவரைக்கும் கொண்ட கொள்கையில் உறுதியோடு வாழ்ந்து மரணத்தை சுவைத்தது.

ஆணவம் மிகுந்த அதிகாரத்தின் கொடுங்கோல் சிறைக்குள் சித்திரவதைகளுக்கு மத்தியில் மரணித்த அவரது முடிவை இறை பாதையில் நிகழ்ந்த ஷஹாதத் மரணமாக வல்ல அல்லாஹ் பொருந்திக்கொள்ள வேண்டும்.

இஃக்வானிய வரலாற்றுக்கே உரித்தான தியாகங்களும் சிறைச் சித்திரவதைகளும் இவரது வாழ்வின் இறுதிக் கட்டங்கள் வரைக்கும் தொடர்ந்து வந்தது. தனது வாழ்வில் எகிப்தின் ஆட்சியாளர்களாக வாய்த்த அப்துல் நாஸர் துவங்கி அன்வர் ஸாதாத், ஹுஸ்னி முபாரக் என கடைசியாக அப்துல் பத்தாஹ் சீசி வரைக்கும் சிறைக் கொடுமைகளுக்கு ஆளாகியே வந்திருக்கின்றார். அவரது 89 வருட இவ்வுலக ஆயுளில் சுமார் 25 வருடங்களுக்கும் மேற்பட்ட காலத்தை கொடூர சர்வாதிகாரக் கறைகள் படிந்த சிறைக்குள் கழித்திருக்கிறார்.

இக்கொடுமைகளின் உச்ச கட்டமே அன்னாரது ஜனாஸாத் தொழுகைக்கும் முழு எகிப்திலும் தடை விதிக்கப்பட்டமையாகும். அவரது ஜனாஸாவை சுமப்பதற்கும் அடக்கம் செய்வதற்கும் அவரது மனைவி மற்றும் பிளைகளுக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டமை அவர் மீது பிரயோகிக்கப்பட்ட அதீத அடக்குமுறைக்கு சான்றாகும். மீண்டும் மீண்டும் சிறைவாசமும் சித்திரவதைகளுமாக இறுதிக் காலத்தில் நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளோடு உலகின் வயது முதிர்ந்த அரசியல் கைதியாக மருத்துவச் சிகிச்சைகள் முற்றாக மறுக்கப்பட்டு இறுதியாக ஜனாஸாத் தொழுகையும் கூட எகிப்திலே தடை செய்யப்பட்ட நிலையில் உலகெங்கிலும் எண்ணற்ற நாடுகளிலே கோடிக்கணக்கான மக்கள் அவருக்கான மறைவான ஜனாஸா தொழுகை நடாத்தியமை அவருக்கு அல்லாஹ் இவ்வுலகில் நமது கண்கள் காணப் பொழிந்த பேரருளாகும்.

உஸ்தாத் மஹ்தி ஆகிப் அவர்கள் இஃக்வானுல் முஸ்லிமீன் அமைப்பு நிறுவப்பட்ட அதே 1928ம் ஆண்டில் ஜூலை மாதம் 12ம் தேதி எகிப்தின் திக்ஹலியா பிராந்தியத்தில் உள்ள கஃப்ர்இவழ் ஸனீத்தா என்ற ஊரில் பிறக்கிறார். சொந்த ஊரிலேயே ஆரம்பக் கல்வியைப் பெற்ற பின்பு இடைநிலைக் கல்விக்காக இஃக்வான்களது கோட்டைகளுள் ஒன்றாகக் கருதப்படும் எகிப்தின் மன்ஸூரா பிராந்தியத்துக்கு 1940இல் குடும்ப சகிதம் இடம்பெயர்கிறார். அங்கு சென்ற அதே ஆண்டு அவருக்கு இஃக்வான்களோடு தொடர்புகள் ஏற்படுகின்றது. அங்கே இஃக்வான்களது ஆரம்பகால தஃவா பாசறைகளில் சிறப்பாக வார்த்தெடுக்கப்படுகிறார்.

இமாம் ஹஸன் அல்பன்னாவின் தாக்கம் அவரில் அதிகமாக இருந்ததாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுவர். அவரது மரணமும் நல்லடக்க நிகழ்வும் கூட இமாம் பன்னாவை பெரிதும் ஒத்திருந்ததைப் பலரும் சுட்டிக் காட்டியிருந்தனர். அன்னவர்களது பலஸ்தீனப் போராட்டத்தின் மீதான தணியாத தாகத்துக்கு இஸ்லாமிய அறிஞரும் பலஸ்தீனத்தின் ஆரம்ப காலப் போராளியுமான ஷெய்க் முஹிப்புத் தீன் அல்கதீப் அவர்களது சிந்தனைகள் இவரில் செலுத்திய தாக்கமே காரணமாகும்.

உஸ்தாத் மஹ்தி ஆகிப் சமகாலத்தைய இஸ்லாமிய தஃவாப் பரப்பில் பன்முக ஆளுமைகளைத் தன்னில் வெளிப்படுத்தியவர்; அதற்கேற்றால் போல் அவருக்குக் கிடைத்த அனுபவங்களும் கள வாய்ப்புக்களும் அமைந்தன. 1948 இல் பலஸ்தீனத்தின் யூத ஆக்கிரமிப்புக்கு எதிரான ஜிஹாதியப் போராட்ட களங்களில் முன்னணிப் பங்கெடுத்தார். சுயெஸ் கால்வாய்ப் போராட்டத்தை வழிநடாத்துவதிலும் பெரும் பங்காற்றினார். இமாம் ஹஸன் அல்பன்னா அவர்கள் நேரடியாக நிர்வகித்த இஃக்வான்களது மாணவர் பிரிவுப் பொறுப்பையும் இயக்கம் மிகக் கடுமையான நெருக்கடிகளை சந்தித்த 1952-54 காலப் பகுதிகளில் வகித்திருந்தார். தவிரவும் சர்வதேச ரீதியில் சவூதி அரேபியா, மாலி,  ஜெர்மனி, அவுஸ்திரேலியா, மலேசியா போன்ற பல்வேறு நாடுகளிலும் தஃவாவை வலுவூட்டுவதிலும் தஃவா நிறுவனங்களை அமைப்பதிலும் குறிப்பாக மாணவர் அணியை வழிநடாத்துவதில் முழுத் திறனுடன் செயல்பட்டிருக்கிறார்.

ஆரம்ப காலம் தொட்டே தஃவா பயிற்சி முகாம்களில் முன்மாதிரி மிகுந்த சிறந்த பயிற்றுவிப்பாளராகத் தொழிற்பட்டிருக்கிறார். இதனாலே இவர் ஜமாஅத்துல் இஃக்வானுல் முஸ்லிமீனின் உடற் பயிற்சிப் பிரிவின் பொறுப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார். உடல் திறன் விருத்தியில் சிறப்புத் தகுதி பெற்றவராகத் திகழ்ந்த உஸ்தாத் மஹ்தி ஆகிப் பலஸ்தீனப் போராட்டம், சுயெஸ் போராட்டங்களில் நேரடியாகப் பங்கேற்று பின்நாட்களில் பலஸ்தீன ஆயுத எதிர்ப்புப் போராட்டத்தினை நிறுவுவதில் மிக முக்கிய பங்கெடுத்திருக்கிறார். ஹமாஸின் ஆயுதப் பிரிவான இஸ்ஸுத்தீன் அல்கஸ்ஸாமின் தலைமைகளுள் அநேகர் உஸ்தாத் மஹ்தி ஆகிப் அவர்களது மாணவர்களாக இருந்து உருவானவர்கள் எனக் கூறப்படுகிறது. 85 வயதுகளைத் தாண்டிய பின்னரும் நாளாந்தம் சுமார் 10 km க்கும் மேலால் ஓட்டப் பயிற்சி பெற்று வந்ததாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுவதிலிருந்து அத்துறையில் இறுதி வரைக்கும் தணியாத தாகத்தோடு செயற்பட்டிருக்கிறார் என்பதை விளங்கமுடிகின்றது.

உஸ்தாத் மஹ்தி ஆகிப் பெரும் நூல்களையும் சிந்தனைப் பொக்கிஷங்களையும் தந்துவிட்டுச் செல்லவில்லை. மாறாக அவர் ஒரு களச் செயற்பாட்டாளர்; புத்தகம் எழுதுபவர்களை உருவாக்கிய ஒரு பயிற்றுவிப்பாளர் என்ற அடையாளமே அவருக்குரியது. 1940 இல் இஃக்வான்களோடு இணைந்து கொண்டது தொடக்கம் இறுதி மூச்சு வரைக்கும் சுமார் 77 க்கும் அதிகமான வருடங்கள் தஃவாப் பாதையில் அவரது உழைப்பு, அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான தொடர்ந்தேர்ச்சைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. இஃக்வானிய இயக்க வரலாற்றில் முதன் முறையாக உயிர் வாழும் போதே அமைப்பின் தலைமை வழிகாட்டிப் பொறுப்பை அடுத்த தலைமைக்கு வழங்கி புதிய முன்மாதிரிக்கு வித்திட்டவராகவும் அவர் காணப்படுகிறார்.

அவர் சத்தியத்தின் பாதையில் திடவுறுதி கொண்ட ஆளுமை; வயது முதிர்வுகளால் ஏற்படும் இயல்பான தளர்வுகள் எதுவும் சத்தியம் குறித்த அவரது நோக்கை எவ்விதத்திலும் பாதித்துவிடவில்லை. 90 வயதை அண்மித்திருந்தும் அசத்தியத்தின் முன்பு இளைஞனாய்ச் செயற்பட்ட அவர் சத்தியத்தை சுமப்பதில் இன்றைய இளைஞர்களுக்கு மிகப் பெரும் முன்மாதிரி. அவருக்கு நெருக்கமான மூத்த இயக்க உறுப்பினர்கள் அவருடனான தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் போது “ஸஹாபாக்கள் வாழ்ந்து விட்டுச் சென்ற முன்மாதிரிகளைத் தம் கண் முன்னே காட்டிவிட்டுச் சென்றவர்.” என உணர்வு ததும்பக் கூறுகின்றனர்.

அவரது இறுதிக் கணப் பொழுதுகள் அமைந்தது பற்றி அவருக்கு நெருக்கமானவர்கள் எழுதியவை சியோனிஸமும் அவர்களது அடியாட்களான எகிப்தின் சர்வாதிகார அரசும் அந்த மாபெரும் போராளியை இவ்வுலகில் எவ்வாறெல்லாம் முடக்கி வைக்கப் பார்த்ததது என்பது தெளிவாக்குகின்றது.

அவர் இறுதி நாட்களில் கடுமையாக சுகயீனமுற்றிருந்தார். எனினும் அவருக்கு மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்படுவதோ தொடர்ந்தும் தடுக்கப்பட்டிருந்தது. மரணமுற்ற பின்பும் அவரது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் மாத்திரமே ஜனாஸாவுக்குரிய கடமைகளை செய்து தொழுது, அடக்கம் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது. அவர் மரணத்தை அண்மித்துக் கொண்டிருந்த கணத்திலும் கூட அவர்களது குடும்ப நண்பர் வழக்கறிஞர் முஹம்மத் ஸாலிமுக்கு மாத்திரம் காவல் துறைக் கெடுபிடிகளுக்கு மத்தியில் வழங்கப்படிருந்தது. குடும்ப உறுப்பினர்களுடன் சேர்த்து வெறும் ஒன்பது பேர் மாத்திரமே அவரது ஜனாஸாத் தொழுகையில் பங்கேற்ற போதிலும் முழு உலகிலும் அன்னாருக்காக மறைவான ஜனாஸாத் தொழுகைக்கும் கோடிக்கணக்கான உள்ளங்களின் பிரார்த்தனைக்கும் உரியவராக அல்லாஹ் அவரை ஆக்கினான்.

அவரது வாழ்க்கைக் குறிப்புக்களில் இன்னும் சில:
-1951 இல் தனது சட்டத் துறைப் பட்டத்தை கெய்ரோ பல்கலைக்கழகத்தில் பெற்றுக் கொண்டார்.
-1951 இல் ஆங்கிலேயருக்கு எதிரான சுயெஸ் கால்வாய் போரில் ஒரு தளபதியாகப் பங்கேற்றார்.
-1954 இல் மூத்த இஃக்வான்கள் பலருடன் மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. 20 வருட சிறை வாழ்வின் பின்பு அன்வர் ஸாதாத்தின் காலப்பிரிவில் விடுதலை செய்யப்படுகிறார்.
-அதே ஆண்டில் வாமி எனைப்படும் இஸ்லாமிய இளைஞர்களுக்கான உலக அமைப்புக்கு ஆலோசகராக சவூதி பயணம்.
-80 களில் ஜெர்மனியின் மியூனிச் நகரில் உள்ள இஸ்லாமிய நிலையத்தின் பணிப்பாளராக நியமனம் பெறுகிறார்.
-1987 இல் எகிப்து பாராளுமன்றத் தேர்தலில் தெரிவாகி மக்கள் பிரதிநியாகப் பாராளுமன்றம் நுழைகிறார்.
-1987 இல் இஃக்வான்களது உயர் வழிகாட்டல் சபையான மக்தபுல் இர்ஷாதின் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு 2009 வரை பணியாற்றினார்.
-1992 இல் கம்பியூட்டர், எலக்ட்ராணிக் பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்து இஸ்லாமிய நிறுவனம் துவங்கப் பார்த்தார் என்ற குற்றச்சாட்டுடன் கைரத் ஷாத்திர், ஹஸன் மாலிக் போன்றோரோடு மீண்டும் சிறை செல்கிறார்.
-2004 இல் இஃக்வானுல் முஸ்லிமூன் அமைப்பின் பொது வழிகாட்டியாகத் தேர்வு செய்யப்பட்டு 2010 வரைக்கும் அப்பொறுப்பில் இருந்தார்.
-2009 இல் ஜோர்தானின் இஸ்லாமிய மூலோபாயக் கற்கைகள் நிறுவனத்தின் கணிப்பீட்டில் அவர் முஸ்லிம் உலகின் செல்வாக்கு மிக்க 50 பேரில் 12வது ஆளுமையாகத் தெரிவானார்.

வல்ல அல்லாஹ் அவரைப் பொருந்திக் கொண்டு, ஜன்னத்துல் பிர்தவுஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்கட்டும்.

“நிச்சயமாக எவர்கள்: “எங்கள் இறைவன் அல்லாஹ்தான்” என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து, “நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் பட வேண்டாம் – உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்” (எனக் கூறியவாறு) இறங்குவார்கள்.” (புஸ்ஸிலத்: 30)

அறிஞர் சித்திலெப்பை விதைத்த சிந்தனைப் புரட்சி

z_p43-SIddi

 

“சீதன முறை ஒழிக்கப்பட வேண்டும். பணம் படைத்தவர்க்ளுக்கு வட்டிக்கு கொடுப்பது போன்ற சூது நிரம்பிய கொடுக்கல் வாங்கல்களிலிருந்து நமது சமூகம் மீட்டுப் பாதுகாப்பட வேண்டும். ஓர் இனமாக நாம் எழுந்து நிற்பதற்கு சமூகத்தைப் பீடித்திருக்கும் இத்தகைய தளைகளிலிருந்து மீள வேண்டும். அத்தகைய முற்போக்கு சிந்தனைகளுடன் சுதந்திரத்திற்காக மேலெழ முடியுமாக இருக்கும். சமூகம் முழுதும் பெரும்பான்மையானவர்களிடத்தில் பீடித்திருக்கும் அறிவற்ற தனம் போன்றவற்றிருந்து விடுபடுவதன் மூலமாக முஸ்லிம்களுக்கு ஒரு சமுதாயமாக முன்னோக்கி வர முடியும். அதற்காக நம்மை அர்ப்பணிக்க வேண்டும்.” இது 1862 இல் முஸ்லிம் நேசனில் கூறியவை.

 

நாம் இன்று இங்கு இவ்விடத்தில் ஒன்று கூடியிருப்பது அன்றைய பிரித்தானிய ஆட்சியாளர்களிடமிருந்து மக்களை விழிப்புணர்வூட்டி சுதந்திரத்தின் பக்கம் தட்டியேழுப்பிய இலங்கையின் முன்னோடி அறிஞர் சித்திலெப்பை அவர்களது 120வது நினைவு தினத்துக்காகும்.

19ம் நூற்றாண்டின் முதல் கூறுகளில் ஆங்கிலேயர்கள் முழு இலங்கையையும் ஆக்கிரமித்தது அவர்களிடமிருந்த முழுமையான ஆயுத பலப் பிரயோகத்தையும் பிரயோகித்த பின்பாகும்.

பிரித்தானியருக்கு முன்பு 1505 இல் இலங்கைக்கு வரும் போர்த்துக்கேயர்களுக்கு கரையோரப் பகுதிகளை ஆக்கிரமிக்க முடிந்தது. சுதந்திரமாக இருந்த தேசத்தையும் ஆக்கிரமிக்க முயற்சித்தார்கள். எட்டு அல்லது ஒன்பது யுத்த முயற்சிகளை முயன்றும் அவர்களால் மலையக இராச்சியத்தை ஆக்கிரமிக்க முடியாமல் போனது. அதன் பின் அதிகாரத்துக்கு வந்த ஒல்லாந்தராலும் கூட பல்வேறு முறைகளில் தாக்குதல்களை மேற்கொண்டும் மலையக தேசத்தை ஆக்கிரமிக்க முடியாமல் போனது. ஆங்கிலேயர்களும் ஆரம்பித்தில் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் அதுவும் முடியாது போனது.

1815 இல் மலையக உடன்படிக்கையின் பின் ஆங்கிலேயர்கள் குறுகிய காலத்தில் முழு இலங்கையையும் ஆக்கிரமித்துக் கொண்டார்கள். இதன் விளைவாக 1818 இல் சுதந்திரத்துக்கான முதலாவது ஆயுதப் கிளர்ச்சி இடம்பெற்றது. இக்கிளர்ச்சியானது மலையகத்திலே இருந்த தேசாபிமானிகள் மத்தியில், சிங்கள பெரும்பான்மையினர் மத்தியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் குழுக்களும் இருந்ததாக இலங்கையில் செய்யப்பட்ட ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. சிரேஷ்ட கல்வியியலாலரான தென்னகோன் விமலானந்தவின்  ஆய்வினூடாக சிங்கள தேசாபிமானிகளோடு தமிழ், முஸ்லிம் தேசாபிமானிகளும் இணைந்து சுதந்திரத்துக்கென போராடினார்கள் என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியும்.

மலையக இராச்சியத்தின் கீழே பல்வேறு இனங்களும் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடனும் ஒருவரோடு ஒருவர் இணைந்தும் சமாதான பூர்வமாக நல்லிணக்கத்துடன் வாழ்ந்தனர் என்பதற்கான ஓர் உதாரணம் தான் மலையகத்தின் எசல பெரஹர நிகழ்வுக்கான ‘ராஜகாரிய முறை’ (தொண்டர் வேலை) யிலே முஸ்லிம் மக்களும் இணைந்திருந்ததாகவும் தற்போது கண்டி, மீரா மக்காம் பள்ளிவாசல் கிடைக்கப்பெற்றதும் இத்தகைய நல்லிணக்கத்தின் விளைவாகவே ஆகும் என வரலாறு கூறுகின்றது.

1848 எழுச்சியின் பின் நாம் எழுச்சி பெறுவதற்கு ஆயுத ரீதியில் முயற்சிக்கவில்லை. 19ம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் இந்நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் இரண்டாவது அத்தியாயம் துவங்குகின்றது. அது ஓர் இயக்கம் மூலமாக பரிணமிக்கிறது. 1818, 1848 களின் ஆயுத எழுச்சிகளின் பின்னரான காலத்தில் மீண்டும் எழுச்சி பெறுவது கலாசாரம் மற்றும் சமூக எழுச்சிகள் வழியாகவே ஆகும். உலகிலே காலனித்துவத்துக்கு உட்பட்டிருந்த ஆசியா, ஆபிரிக்கா, லத்தீன் அமேரிக்கா உள்ளிட்ட எல்லா பிரதேசங்களிலும் காலனித்துவ ஆட்சியாளர்களுக்கு எதிராக அந்த அந்த நாடுகளில் சுதேச மக்கள் தமது நாடுகளில் காலநித்துவ ஆட்சியாளர்கள் அந்த சுதேச மக்களின் கலாசாரம், மொழி, மதம் மற்றும் உரிமைகளை சிதைத்தமையால் வந்த விழிப்புனர்வினாலே ஆகும் என ஆபிரிக்காவை சேர்ந்த பிரான்ஸ் பெனன் என்பவர் கூறியிருக்கிறார்.

இந்தப் பண்பானது இலங்கை, இந்தியா உட்பட எல்லா ஆசிய, ஆபிரிக்க நாடுகளுக்குமே பொதுவான பண்பாகும்.நாம் இன்று நினைவுகூர்ந்து கொண்டிருக்கும் சித்திலேப்பை அவர்களது பணிகளை நோக்க வேண்டியதும் இப்பின்னணியிலேயே ஆகும். இந்நாட்டின் பெரும்பான்மை சிங்கள மக்கள், பௌத்த மக்களுக்குள் அநகாரிக்க தர்மபால, பியதாச சிறிசேன, ஹிக்கடுவே சிறி சுமங்கள தேரர், மிகெட்டுவத்தே குனானந்த தேரர் போன்றவர்கள் எந்த வகையில் காலனித்துவ ஆதிக்கக்காரர்களது ஆக்கிரமிப்புக்களால் சிதைக்கப்பட்ட பௌத்த உணர்வு, சிங்கள உணர்வைத் தட்டியெழுப்ப தமது பேச்சாற்றல், அமைப்புரீதியான இயங்குவது ம்ட்டுமன்றி பத்திரிக்கை நடாத்துதல் மூலமும் ஆற்றலை உபயோகப்படுத்தினர். சிங்கள பௌத்தயா, உடரட்ட தருணயா, சிங்கள ஜாத்திய, சிங்கள பலய, ருஹுனு ஹன்ட, சரசவி சந்தரச போன்ற பல்வேறு பத்திரிகைகளையும் ஆரம்பித்தது தூங்கிப் போயிருந்த இந்த சிங்கள சமூகத்தைத் தட்டியேழுப்பவே ஆகும்.

இந்த தேசிய விடுதலைக்கு முக்கியமான அம்சம் எதுவெனில் காலனித்துவவாதிகள் சிதைத்து விட்ட மதம், மொழி, கலாசாரம், சுதேச பழக்க வழக்கங்கள் போன்றவற்றை மீளக் கையளிப்பதற்கே ஆகும். இதற்கென அவர்கள் வலிமை மிக்க மிஷனரிகளுக்கு எதிராக தீர்க்கமாக போராட வேண்டியிருந்தது. இவற்றுள் முக்கியமான மைல்கல்லாக 1868 இடம்பெற்ற பாணந்துறை விவாதத்தைக் குறிப்பிடலாம்.

இந்த விவாதத்தை இரண்டு மதங்களுக்கு இடையிலான விவாதமாகப் பார்ப்பதை விடவும் காலனித்துவ ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒரே அணியில் நின்ற போராட்டமாக பார்க்கலாம். மிகெட்டுவத்த குனாநந்த தேரர் அணிக்கு மாற்றீடாக பாணந்துறை பள்ளியின் பிரதான மதகுரு நின்றார். அதனை டைம்ஸ் ஒப் சிலோன் பதிவு செய்திருந்தது. இதனை ஜோன் கெப்பர் என்ற எழுத்தாளர் அமெரிக்கா வரைக்கும் எடுத்து சென்றார்.

இதன் மூலமாக கேர்ணல் ஸ்டீல் ஒல்கொட் எனும் அமெரிக்கர் கூட இலங்கையின் தேசிய விவகாரமொன்றில் இணைந்துகொள்ளும் நிலை ஏற்பட்டது. ஒல்கொட் அவர்கள் இந்த நாட்டுக்கு வந்ததோடு இந்த நாட்டின் தேசிய வேலைத் திட்டத்துக்கு பாரியதொரு சர்வதேச பரிணாமம் கிடைத்தது. அதன் மூலமாக சிங்கள தேசப்பற்றாளர்களில் அநகாரிக தர்மபால போன்றவர்கள் உருவாக வழிசமைத்தது.

இப்போது நான் இலங்கையின் மற்ற பிரதான இனக் குழுவான இந்து சமூகத்தில் உருவான எழுச்சியலைகள் குறித்து குறிப்பிட விரும்புகிறேன். கரையோரமெங்கும் காலனித்துவவாதிகள் கைப்ப்ற்றியதோடு மாத்திரமல்லாமல் அங்கெல்லாம் தேவலயங்க்களை அமைத்தனர். அங்கு அவர்களுடைய மதகுருக்களை அழைத்து வந்து தம்முடைய ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதற்கு எத்தனித்தார்கள். இலங்கையிலே முதன் முறையாக சொந்த மொழியில் பத்திரிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது தமிழ் மொழியிலாகும். அதனை ‘உதய தாரகை’ என்று சொல்வார்கள். அது பதிப்பிக்கப்பட்ட விதம் ஒரு மிஷனரியின் பிரசாரப் பதிப்பாகத் தான். இதன்போது ஆறுமுக நாவலர் போன்றோர் தமிழர்களின் மொழி, பண்பாடு, இந்து உணர்வு போன்றவை மிஷனரிகளால் தாக்குதலுக்கு உட்படுவதை எதிர்த்து பணியாற்றத் தொடங்கியிருந்தனர். இதன் போது இந்தியாவிலே ஏற்பட்டிருந்த தேசிய எழுச்சிகள் மற்றும் விவேகானந்தர் போன்றோரின் சிந்தனைகளின் பாதிப்பு ஆறுமுக நாவலிரடம் இருந்தது. மிஷனரி முறைமைகளுக்கு எதிராக இந்து பாடசாலைகள், தமிழ்-இந்து கலாசார நிலையங்கள் போன்றவை ஆரம்பிக்கப்பட்டும் உதயபானு, சைவ நீதி போன்ற பத்திரிகைகள் ஆரம்பிக்கப்பட்டு நடாத்தப்படுவதற்கு அவர் காரணகர்த்தாவாக இருந்தார். தெற்கிலே போன்று வடக்கிலேயும் இவ்வாறுதான் காலனித்துவத்துக்கு எதிரான போராட்டங்கள் ஆரம்பித்தன.

இத்தகையதொரு பின்னணிக் காரணிகள் இருக்கையிலேயே சித்திலேப்பை அவர்கள் காலனித்துவ ஆட்சிக் காலப்பகுதியில் பிறக்கிறார்கள். இலங்கையின் மேற்குப் பிராந்தியத்தின் அளுத்கம பிரதேசத்தை சேர்ந்த அன்னவர்களுடைய தந்தையவர்கள் ஒரு சிறந்த வாழ்க்கைக்காக வேண்டி காலனித்துவப் பகுதிகளை விட்டும் மலையகப் பிரதேசத்துக்கு இடம்பெயர்ந்தார். இந்நிலையில் மலையக ராச்சியம் காலணித்துவவாதிகளிடம் வீழ்ந்ததுடன் மிஷனரிகள் மூலமாக தனது கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்து செல்ல முடியுமாக அவருக்கு இருந்தது. குறைந்த தொகையினருக்கே கிடைக்கும் சலுகைகளோடு முஸ்லிம் சமுதாயத்தின் முதலாவது சட்டத்தரணியாக சித்திலேப்பை அவர்களுக்கு உருவாக முடிந்தது. தனது திருமணத்தின் பின்பு ஐந்து பிள்ளைகள் கொண்ட அவரது குடும்பத்துக்கு வசிப்பதற்கென உதவத்தையில் மலைகளுக்கு மத்தியில் ரம்மியமான வசதியான வீடும் அமைத்துக் கொள்ள முடியுமாக இருந்தது.

கண்டி நகரின் ஊராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படும் அன்னவர்கள் அதன் மூலமாக பிரபல்யம் பெறவும் இலகுவாக மக்கள் செல்வாக்குப் பெறவும் முடியுமாக இருந்தது. 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்த நாட்டின் தேசிய போராட்டத்துக்கு விசாலமான பரிமாணமும் சர்வதேச கவனமும் இருந்தது. விசேடமாக இதனை நாம் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் கண்டுகொள்ள முடியும். 19ம் நூற்றாண்டில் எகிப்திலே ஆங்கிலேயரின் காலனித்துவத்துக்கு எதிராக செயற்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட ஒறாபி பாஷாவுக்கு இந்நாடு அடுத்த புகலிடமாகியது. 1883 களோடு காலனித்துவத்துக்கு எதிராகப் போராடல், முன்னேற்றம், சுதந்திரம், தன்மானத்தின் முக்கியத்துவத்தை ஒறாபி பாஷா இந்நாட்டு முஸ்லிம்களுக்கு உணர்வூட்டினார். சித்திலேப்பை உட்பட பிரதான முஸ்லிம் தேசப்பர்றாளர்கள் விழிப்புணர்வு பெற்றது இவ்வாறே ஆகும்.

இப்பின்னணியிலே சித்திலேப்பை 1882 இலே முஸ்லிம் நேஷன் என்ற சஞ்சிகையை ஆரம்பித்தார். பின்னர் அது பத்திரிகையாக பரிணாமம் பெற்றது. பின் அது நின்று போக ஞான தீபம் என்ற பத்திரிகையை மீளவும் ஆரம்பித்தார். அவர்கள் இதன் மூலம் மிஷனரி கல்வி முறைக்கு உட்படுகின்ற முஸ்லிம்களது தனித்துவம் கெடுகின்றது என்பதை கண்ணுற்று அவற்றுக்கு மாற்றீடாக முஸ்லிம் பாடசாலைகள் அமைக்கப்படுவதற்கான தலைமைத்துவத்தை வழங்கினார். கண்டி முஸ்லிம் வித்தியாலயம் மட்டுமல்லாது, திருகோணமலையிலும் முஸ்லிம் வித்தியாலயங்களை ஆரம்பித்து ஈடு இணையற்ற பங்களிப்பை வழங்கினார். அன்னவர்கள் எழுத்தாளர், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் என்பவர்ருக்கு மேலதிகமாக அன்னவர்கள் பிரமிக்கத்தக்க்க ஒரு நாவலாசிரியர். அக்காலத்தில் காலனித்துவத்துக்கு துதி பாடிய சில முஸ்லிம் தலைவர்களுக்கு மாற்றீடாக காலனித்துவத்துக்கு எதிராக உணர்வூட்டிய தலைவராக அறிஞ்ர் சித்திலெப்பை காணப்படுகிறார். அதற்காக சாதாரண மக்களுக்கும் புரிகின்ற பாஷையில் மக்கள் மயப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். சுதந்திரம், பற்றிய பிரக்ஞையை விதைத்துவந்தார்.

இன்று நாம் 69 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கையில் 19ம் நூற்றாண்டிலேயே சுதந்திரத்தைப் பற்றி மக்களுக்கு சொல்லிக் கொடுத்த, உணர்வூட்டிய நூற்றாண்டாக இந்த நூற்றாண்டை நான் காண்கிறேன். தலைவர்களில் முக்குயமானவரகளாக நான் காண்பது அநகாரிக தர்மபால, ஆறுமுக நாவலர், மற்றும் சித்திலேப்பை ஆகியோராவர். அவ்வகையில் இவர்களுக்கென சர்வதேசப் பின்புலத்தை வழங்க்கியவர்களாக கேர்னல் ஸ்டீல் ஒல்கொட், சுவாமி விவேகானந்தர் மற்றும் ஒறாபி பாஷா ஆகியோர் காணப்பட்டனர். சுதந்திரத்தை அனமக்கு சொல்லிக் கொடுத்து நவீன சமுதாயமாக இந்த சமூகத்தை மாற்றி யமைத்தது. சித்திலேப்பை சொல்லி சென்றது போல் ஆக்கபூர்வமான சமூகமாக இந்த சமூகத்தை மாற்றியமைத்தது எது? ஒரு மலர்த்தட்டில் இருக்கும் பல்வேறு மலர்கள் போலவே இந்த சமூக மக்களும் நறுமணம் கமழும் சமுதாயமாக மாற வேண்டுமென்பதே இந்த நமது முன்னோடிகளுக்கு நாம் செய்யும் உபகாரமாகும்.

 

பேராசிரியர் ரோஹன தர்ஷன் பியதாச (வெகுஜன ஊடக பிரிவு, களனி பல்கலைக்கழகம்)

தமிழில்: எம்.எஸ். ஸியாப் முஹம்மத்

இஸ்லாமிய அரசியல் சிந்தனையாளர் உஸ்தாத் ஃபஹ்மி ஹுவைதி

aaaaa

 

இஸ்லாமிய உலகு இன்று பல அரசியல் விற்பன்னர்களைக் கண்டுகொண்டிருக்கின்றது. இதே இஸ்லாமிய உலகு பின்னடைவுக்கு உட்பட்டு சின்னாபின்னப்பட்டு தம்மைச் சூழ சதிவலைகள் பின்னப்படுவதை அறியாத காலம் ஒன்றிருந்தது. இவ்வாறான நிலைமைகளை வெளிச்சம் போட்டுக் காட்ட தகுந்த அறிஞர் குலாமொன்று இல்லாதிருந்த சந்தர்ப்பமொன்றில் இஸ்லாமிய உலகுக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷமாக அரசியல் சிந்தனையாளர் உஸ்தாத் ஃபஹ்மி ஹுவைதி காணப்படுகிறார்கள். அத்தகைய ஒரு சிந்தனைப் போராளியாக, தலைசிறந்த பத்தி எழுத்தாளராக, இஸ்லாமிய உலகின் நோய்களை மிகச் சரியாக இனங்கண்டு அடையாளப்படுத்துபவராக இன்றும் நமக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கும் எகிப்து தேசத்தைச் சேர்ந்த அரசியல் சிந்தனையாளர் உஸ்தாத் ஃபஹ்மி ஹுவைதி குறித்துத் தேடி வாசித்தவற்றின் சாரமாகக் கீழ்வரும் எழுத்துக்களை வடிக்கின்றேன்.

பிறப்பும் இளமைக் காலமும்:

உஸ்தாத் ஃபஹ்மி ஹுவைதியவர்கள் கி.வ. 1937ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ம் திகதி எகிப்தின் ‘அல்கிஸா’ மாநிலத்தின் அஸ்ஸப் எனும் பிரதேசத்தில் பிறக்கிறார்கள். ஆரம்பத்திலேயே இவருக்கு இஸ்லாமியப் பின்னணி கிடைக்கிகிறது. இவரது தந்தை அப்துர்ரஸ்ஸாக் ஹுவைதி முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் ஆரம்பகட்ட உறுப்பினர்களுள் ஒருவராவார்.

இவர் பிறப்பதற்கு முந்தைய நூற்றாண்டில்தான் கவர்ணர் முஹம்மத் அலி பாஷாவினால் மதச்சார்பற்ற சிந்தனைகளுக்கான விதைகள் எகிப்திய மண்ணில் தூவப்பட்டிருந்தன. இதன் உச்சகட்ட அறுவடைகள் பெறுவதற்கான வாய்ப்புக்கள் பின் வந்த ஆங்கிலேய காலனித்துவக் காலப்பகுதிகளில் (கி.வ. 18882-1922) இன்னும் ஊன்றிக் கிடைத்தன. இவ்வாறே கி.வ. 1924 இல் நிகழ்ந்த கிலாபத் வீழ்ச்சி எகிப்தோடு சுருங்காமல் முழு இஸ்லாமிய உலகுக்கும் முக்கிய நிகழ்வாகும்.

கல்வி வாழ்வும் தொழில் வாழ்வும்:

உஸ்தாத் ஃபஹ்மி ஹுவைதி அவர்களின் ஆரம்பக் கல்விகள் தொடர்பில் போதிய தகவல்கள் கிடைக்கவில்லையாயினும் அவர் கெய்ரோ பல்கலைக்கழகத்தில் கி.வ. 1960 இல் சட்டத்துறையில் பட்டம் பெற்றிருக்கிறார். குடும்பம் இஃக்வானியப் பின்னணி கொண்டிருந்தமையால் பட்டம்பெற்ற 23 வயதுக்குள்ளாலேயே ஓரிரு தடவைகள் சிறைவாசத்தையும் அனுபவிக்க நேரிடுகிறது. இந்த சிறைவாழ்க்கை தன் பிற்கால வாழ்விலும் சிந்தனைகளிலும் பாரிய தாக்கம் செய்ததாக உஸ்தாத் ஃபஹ்மி ஹுவைதி அவர்களே குறிப்பிடுவார்கள்.
தன் இளமையைக் கழித்த அன்றைய நாசரிய எகிப்து சூழலும் பெற்ற சட்டத்துறைக் கல்வியும் இணைந்து சமூக-அரசியல் விவகாரங்களில் முனைப்பான பார்வையுள்ளவராக இவரை ஆக்கியது. தொடர்ந்து வந்த காலப்பகுதிகளில் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் பத்திகளும் கட்டுரைகளும் எழுதத் தொடங்கினார். சிக்கலான அரசியல் நிலமைகள் பற்றி தொடர்ந்தும் எழுதி வந்த அவர் காலப்போக்கில் தெளிந்த சமூக-அரசியல் பார்வைகொண்டவராக மாறினார். தற்கால இஸ்லாமிய அரசியல் சூழலில் சிறந்த பங்களிப்பை நல்குவதில் இப்பின்னணிகள் களமமைத்துக் கொடுத்தன.

அவர் ஆரம்ப காலங்களில் எழுதிய பத்திரிகைகள் ‘அல்அரப்’ மற்றும் ‘அல்அஹ்ராம்’ என்பனவாகும். கி.வ. 1958 இல் அல்அஹ்ராமின் ஆய்வுப் பிரிவில் இணைந்து எழுதத் துவங்கிய அவர் இன்று வரைக்கும் எழுதிக் கொண்டிருக்கிறார். அல்அஹ்ராமின் ஆசிரியர் குழுச் செயலாளராக பதவியுயர்வு பெறும் வரைக்கும் 18 ஆண்டு காலம் அல்அஹ்ராமில் எழுதியிருக்கிறார். பின்பு கி.வ. 1976 இல் குவைத்தின் அல்அரப் சஞ்சிகையில் இணைந்து கொள்கிறார்.

பின்பு கி.வ. 1983 இல் இங்கிலாந்திலிருந்து வெளிவந்த ‘அராபியா’ ஆங்கில சஞ்சிகையின் பொறுப்பை ஏற்று திறம்பட நடத்துகிறார். பின்பு கி.வ. 1985 இல் மீளவும் எகிப்து திரும்பி அல்அஹ்ராம் பத்திரிகையில் வாராந்தப் பத்திகள் எழுதத் தொடங்கினார்.

சிந்தனைகள்:

உஸ்தாத் ஃபஹ்மி ஹுவைதி அவர்கள் பட்டப்பின் படிப்பு, கலாநிதிக் கற்கை எனத் தன்னை மேம்படுத்திக் கொண்ட ஒரு அறிஞரல்லர். மாறாக அவர் தொடர்ந்தேர்ச்சியான எழுத்துக்கள், உரைகள், மாநாடுகள், பட்டறைகள், செயலமர்வுகள் எனத் தன்னை வளர்த்துக் கொண்டவர் எனலாம்.
உஸ்தாத் ஃபஹ்மி ஹுவைதியின் கருத்துக்களுள் சமத்துவம் குறித்து முன்வைக்கும் கருத்துக்கள் முக்கியமானவை. “குர்ஆன்-ஸுன்னாவின் அடிப்படையில் மனிதர்களிடையே சகோதரத்துவமும் சமத்துவமும் அடிப்படையானவை. அவர்களிடையே சிறப்புக்களேற்படும் எனின் அது மறுமையில் வேறொரு அளவுகோளின்படியே தீர்மானிக்கப்படும்.” (முவாதினூன் லா திம்மிய்யூன். ப:99)
இவ்வாறு தான் ‘தாருல் ஹர்ப்’ என்ற கருத்தியலையும் மறுக்கின்றார். முஸ்லிம் நாடுகள், மத நல்லிணக்கம் என்ற வகையில் மாற்று மதங்களுக்கும் வழிபாட்டிடங்கள் அமைக்க இடம்கொடுப்பது குறித்தும் பேசுகிறார். (முவாதினூன் லா திம்மிய்யூன். ப:200)
உஸ்தாத் அவர்களின் தந்தை அப்துர்ரஸ்ஸாக் ஹுவைதி முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பிலே அங்கத்துவம் வகித்த போதிலும்; ஃபஹ்மி ஹுவைதி ஆரம்பத்தில் சிறிது காலம் மாத்திரமே இயக்கத் தொடர்போடு இருந்திருக்கிறார். பின்னர் சிறிது காலம் மேற்கின் சிந்தனைகளைக் கற்று; பின்னர் சுதந்திரமான சிந்தனையாளராகத் தன்னைத் தகவமைத்துக் கொண்டார். அவர் தன்னை ஓர் இஸ்லாமியவாதியாக அடையாளம் செய்வதை எப்போதும் தவிர்த்தே வருகின்றார்.

அல்அரப் சஞ்சிகையின் பொறுப்பாசிரியராகத் தான் நியமிக்கப்பட்டதிலிருந்து அதுகாலவரையிலும் இருந்த சிந்தனைப் போக்கு மேலும் வளம் பெற்ற நவீன சிந்தனையாளராகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டார். அவ்வகையில் ஆரம்பமாக இயக்கப் பின்னணி, பின்னர் சட்டக்கல்வி மற்றும் மத்தியகிழக்கின் சிக்கல் மிகுந்த அரசியல் சூழ்நிலை அனுபவங்கள், பின்பு மேற்கத்திய சிந்தனைகளின் வெறுமை மிகுந்த அடிப்படைகளான சடவாதம் மற்றும் மதச்சார்பின்மை எனப் பல்துறைகளையும் நன்கு புரிந்துகொண்ட ஆளுமையாக அவரை அடையாளப்படுத்த முடியும்.

உஸ்தாத் ஃபஹ்மி ஹுவைதி ஓர் இஸ்லாமிய அரசியல் சிந்தனையாளர் என்ற வகையில் அவர் முன்வைக்கும் அரசியல் கருத்துக்களில் சுன்னி-ஷீஆ பிளவுகளை இல்லாமல் செய்து அரசியல் ரீதியாக இணைக்கும் புள்ளிகளை வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அவர் மிகுந்த தாராளாப் போக்குடனும் தர்க்க ரீதியான நியாயங்களுடனும் எழுதி வெளியிட்ட ‘ஈரான் மினத் தாஃகில்’ என்ற நூல் குறிப்பிடத்தக்கது.
உஸ்தாத் ஃபஹ்மி ஹுவைதியிடம் புலம்பெயர் பத்திரிகையாளர் அஹ்மத் பஹாவுத் தீனின் தாக்கம் பரவலாக உள்ளதை அவர் எப்போதும் மறைத்து வைத்ததே இல்லை. அவ்வாறே பத்திரிகையாளர் முஹம்மத் ஹுஸ்னீன் ஹய்கலின் தாக்கத்தையும் அவதானிக்க முடியும்.
இமாம் ஜமாலுத்தீன் ஆப்கானி வழிவந்த இஸ்லாமிய சிந்தனைப் பள்ளியின் முக்கிய பிரமுகராக அடையாளம் செய்ய முடியுமானவராக இவர் இருக்கின்றார். அவ்வகையில் பிரதிகளை மாத்திரம் முற்படுத்தும் ஸலபி முகாம் எப்போதும் இவரது விமர்சனத்துக்குட்பட்டே வந்திருக்கின்றது. குறிப்பாக எகிப்திய அரசியல் களத்தில் ஸலபிக்களின் நுழைவை இவர் ஆரம்பம் முதலே கடுமையாகச் சாடி வந்தார்.

உஸ்தாத் ஃபஹ்மி ஹுவைதியின் அறிவாக்கங்கள்:

உஸ்தாத் அவர்கள் ஆரம்பத்திலிருந்தே தன் எழுத்துக்களில் சிவில் சமூகத்துக்கான குரல்களை ஓங்கி ஒலிக்கச் செய்திருக்கிறார். இதற்கு ‘முவாதினூன் லா திம்மிய்யூன்’ (குடிமக்களே… சிறுபான்மையினர் அல்லர்) போன்ற நூற்கள் சிறந்த சான்றுகளாகும்.

எகிப்தின் முபாரக் யுக சர்வாதிகாரக் கொடுங்கோல் காலப்பிரிவிலும் நீதியான ஆட்சியமைப்பு நோக்கிக் குரல் எழுப்பி ‘மிஸ்ர் துரீது ஹல்லன்’ (எகிப்து தீர்வொன்றை விரும்புகிறது) எனும் நூலை எழுதினார்.

இவை தவிரவும் சர்வதேச முஸ்லிம் உம்மாவின் பல்வேறு அங்கங்கள் பற்றி ஆப்கானிஸ்தான், சீனா எனப் பல்வேறு தேச முஸ்லிம்கள் குறித்தும் நூல்கள் எழுதியிருக்கிறார்.

அவர் எழுதிய நூல்களின் பட்டியல் வருமாறு:
1. அல்குர்ஆன் வஸ்ஸுல்தான். (அல்குர்ஆனும் அதிகாரமும்)
2. அஸ்மதுல் வஃயித் தீனி. (மார்க்க உணார்வின் நெருக்கடி நிலை)
3. முவாதினூன் லா திம்மிய்யூன். (குடிமக்களே… சிறுபான்மையினர் அல்லர்)
4. ஹத்தா லா தகூன ஃபித்னா. (பிரச்சினைகள் இல்லாதிருப்பதற்கு)
5. அல்இஸ்லாம் வத்திமோக்ராதிய்யா. (இஸ்லாமும் ஜனநாயகமும்)
6. அத்ததய்யுன் அல்மன்கூஸ். (அரைகுறை மதமாற்றம்)
7. அல்முஃப்தரூன்: ஃகிதாபுத் ததர்ருப்ஃ அல்அல்மானி ஃபில் மீஸான். (மதச்சார்பற்றோரின் வரம்பு மீறிய வாதங்கள் குறித்த அளவீடு)
8. இஹ்காகுல் ஹக். (சத்தியத்தின் ஸ்திரம்)
9. அல்மகாலாத் அல்மஹ்ளூரா. (தடைசெய்யப்பட்ட ஆக்கங்கள்)
10. மிஸ்ர் துரீது ஹல்லன். (எகிப்து தீர்வொன்றை விரும்புகிறது)
11. தஸ்யீஃபுல் வஃயி. (உணர்வு மோசடி)
12. அனில் ஃபஸாத் வஸனீனிஹி. (சீரழிவுகளும் காரணிகளும்)
13. ஃகுயூலுனா அல்லதீ லா தஸ்ஹுலு. (கனைக்காத குதிரைகள்)
14. தாலிபான்: ஜுன்துல்லாஹ் ஃபில் மஃரகா அல்கலத். (தாலிபான்: பிழையான போராட்ட்த்தில் அல்லாஹ்வின் படை)
15. ஹதஸ் ஃபி ஆப்கானிஸ்தான். (ஆப்கான் நிகழ்வுகள்)
16. அல்இஸ்லாம் ஃபிஸ்ஸீன். (சீனாவில் இஸ்லாம்)
17. ஈரான் மினத் தாஃகில். (ஈரான்: அதன் உள்புறமிருந்து…)

இந்நூல்கள் அனைத்தும் அரசியல் கண்ணோட்டத்தில் மக்கள் பிரச்சினைகளையும் அவற்றின் இஸ்லாமிய நிலைப்பாடுகளையும் ஊடாடிச் செல்கின்றன. இவை தவிர அவரது எழுத்துக்களும் உரைகளும் ஆயிரக்கணக்கில் நூல்வடிவம் பெறாமல் இருக்கின்றன.
அவர் 1958இல் துவங்கி இன்று வரைக்கும் 56 வருடங்களுக்கும் மேலாக எழுதி வரும் முக்கிய பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளை கீழ்வருமாறு பட்டியல்படுத்தலாம்:
1. அல்அஹ்ராம். (எகிப்து)
2. அல்வதன். (குவைத்)
3. அஷ்ஷர்க் அல்அவ்ஸத்.
4. அல்அரபி. (குவைத்)
5. அல்மஜல்லா.
6. அல்ஹிர்ஸ் அல்வதனி. (ஸவூதி அரேபியா)
7. அந்நூர். (குவைத்)
8. அல்முஸ்லிம் அல்முஆஸிர்.
9. அல்புனூக் அல்இஸ்லாமி.
10. அல்மவ்திப். (லெபனான்)
11. அல்முஃக்தார் அல்இஸ்லாமி.

இவை தவிரவும் எகிப்தின் சமகால சிந்தனை ஜாம்பவான்களான கலாநிதி முஹம்மத் இமாரா, அரசியல் சிந்தனையாளர் தாரிக் அல்பிஷ்ரி போன்றோர் உட்பட இன்னும் பலரோடு இணைந்து கூட்டு முயற்சியாக வெளியிட்டு வரும் ‘அத்தன்வீர் அல்இஸ்லாமி’ நூல் வரிசைகள் குறிப்பிடத்தக்கது. இவ்வமைப்பினூடாக இஸ்லாமிய உலகின் மிகப் பெரும் மூளைகளை ஒன்றிணைத்து மேற்குலகின் சிந்தனைகளுக்கு மாற்றாக இஸ்லாமிய மாதிரிகளை முன்வைப்பதில் உஸ்தாத் ஃபஹ்மி ஹுவைதி தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

அதேநேரம் சமகால இஸ்லாமிய அறிஞர்களுடனும் நெருக்கமான தொடர்பு வைத்திருக்கின்றார். கலாநிதி யூஸுப் அல்கர்ளாவி, ஷெய்க் முஹம்மத் அல்கஸ்ஸாலி போன்றோரை மிகவும் மதிப்புடன் நோக்குபவராக ஃபஹ்மி ஹுவைதி அவர்கள் காணப்படுகிறார்கள்.

சூடான் இஸ்லாமிய சிந்தனையாளர் ஹஸன் அத்துராபி

06qpt999

 

மார்ச் மாதம் ஈடு செய்ய முடியாத இரு அறிவுத்துறை ஜாம்பவான்களை இஸ்லாமிய உலகம் அடுத்தடுத்து இழந்து நின்றது. மார்ச் நான்கில் பேரறிஞர் கலாநிதி தாஹா ஜாபிர் அலவானி அவர்களது மரணச் செய்தியின் அதிர்ச்சி தணியத் துவங்கும் முன்பே சூடான் பேரறிஞர் இஸ்லாமிய அரசியல் சிந்தனையாளர் ஹஸன் அத்துராபி அவர்களது மரணச் செய்தி மார்ச் 5 அன்று நம்மை வந்தடைகின்றது.

நளீமிய்யாவில் கற்கும் காலத்தில் கலாநிதி ஹஸன் துராபி குறித்து அரசியல் செய்திகள், நிலவரங்களூடாகத் தெரிந்திருந்த போதும் அவரது புத்தகங்களோ அல்லது சிந்தனைகளோ பெரியளவு எமக்கு அறிமுகமாயிருக்கவில்லை. குறைந்தபட்சம் அவரது நூல்கள் கூட இலங்கை சூழல்களில் பெற்றுக்கொள்ளக் கூடியவாறு இருக்கவில்லை. எனினும் நளீமிய்யாவிலிருந்து பட்டம் பெற்ற பின் ஒரு தேவைக்காக சூடான் இஸ்லாமிய இயக்கத்தின் வரலாறு குறித்து தொகுத்தெழுத வேண்டியிருந்ததால் குறுகிய காலத்தினுள் துராபி அவர்கள் குறித்த பெரியதொரு அறிமுகம் கிடைத்தது. அந்தளவுக்கு சூடான் இஸ்லாமிய இயக்க வரலாற்றில் பிரித்துப் பார்க்கவே முடியாத தன்னிகரற்றதோர் ஆளுமையாக மிளிர்ந்தார்கள்.

சர்ச்சைக்குரிய புரட்சிகர சிந்தனையாளர், இடையறாத அரசியல் செயற்பாட்டாளர், சூடானின் இஃக்வானுல் முஸ்லிமூன் இயக்க நிறுவனர்களுள் ஒருவர், அதன் தலைமைப் பொறுப்பை வகித்தவர், கார்ட்டூம் பல்கலைக்கழக வேந்தர், சூடான் சட்டமா அதிபர், பல அமைச்சுப் பொறுப்புக்களை வகித்தவர் என நிறைய அடையாளங்கள் கலாநிதி ஹஸன் துராபி அவர்களுக்கு இருக்கின்றது.

1932 ஆம் ஆண்டில் பலமான தரீக்கா பின்புலம் கொண்ட குடும்பமொன்றில் பிறந்த துராபி அவர்கள் சிறு வயதிலேயே அல்குர்ஆனை மனனமிட்டதொடு பல கிராஅத் முறைமைகளையும் கற்றுக் கொண்டார். அதேநேரம் இஸ்லாமிய கலைகளைக் கற்கின்ற, கற்றுக்கொடுக்கின்ற ஒரு சூழல் வாய்த்தமை இஸ்லாமியக் கலைகளில் ஆழ்ந்த பரிச்சயம் ஏற்படுவதற்கான சூழலை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. சூடானின் பாரம்பரியக் கல்வி முறைகளின் பின்னர் M.A. பட்டப்பின் படிப்பை ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும்(1957), பாரிசின் ஸோபோர்ன் பல்கலையில் முனைவர் பட்டத்தையும்(1964) நிறைவு செய்தார்.

அரபு மொழி மட்டுமல்லாது பன்மொழிப் புலமை அவர் பெற்றிருந்த விஷேட திறமையாகும். ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மனி மொழிகளில் அவர் புலமை பெற்றவராகத் திகழ்ந்தார். ஆரம்ப காலத்தில் இஃக்வானுல் முஸ்லிமூன் இயக்கத்துடன் இணைந்து அதன் தலைமைப் பீடம் வரைக்கும் செயற்பட்ட துராபி பின்னர் 1970 தோடு அதிலிருந்து விலகி தனது பாணியிலான வித்தியாசமான செயற்பாட்டாளராக விளங்கினார். 1989 உமர் பஷீர் ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றுவதிலும் அவருக்கு உறுதுணையோடு இருந்தார். பிற்பட்ட காலங்களில் அவரோடும் முரண்பட்டு ஓரிரு வாரங்கள் சிறைவாசமும் அனுபவித்தார்.

இஸ்லாமிய விவகாரங்கள், வணக்க வழிபாடுகள், பெண்கள் குறித்து, சமூக விவகாரங்கள் தொடர்பில், புத்துயிர்ப்பு, அரசியலமைப்பு, ஆட்சி, இஸ்லாமிய விவகாரங்கள், அரசியல் என இன்னோரன்ன  தலைப்புக்கள் தொடர்பில் ஏராளமான நூல்களுக்குச் சொந்தக்காரர் அவர்.

கலாநிதி துராபி அவர்களுடைய பல இஜ்திஹாதுகள், கருத்துக்கள் இஸ்லாமிய அறிஞர்களது கருத்துக்களுக்கு முரண்பட்டமையானது; குறிப்பாக கலாநிதி துராபி விமர்சிக்கப்படவும் பொதுவாக இயக்கத்தின் சிந்தனைகள் விமர்சிக்கப்படவும் ஏதுவாயிற்று. அவரது உரைகள், நூல்கள், சிந்தனைகள் பல அமைப்புக்களில் வெளிவந்துள்ளன. அவரது முக்கிய நூல்களைக் கீழ்வருமாறு பட்டியலிடலாம்:

  • தஜ்தீதுல் ஃபிக்ரில் இஸ்லாமி -1982 (இஸ்லாமிய சிந்தனையைப் புனரமைத்தல்)
  • தஜ்தீதுத் தீன் -1984 (மார்க்கத்தைப் புனரமைத்தல்)
  • மன்ஹஜிய்யது தஷ்ரீஃ -1987 (சட்டவாக்க முறைமை)
  • அல் முஸ்தலஹாத் அஸ்ஸியாஸிய்யா ஃபில் இஸ்லாம் -2000 (இஸ்லாமில் அரசியல் கலைச் சொற்கள்)
  • அஷ்ஷஆஇர் அத்தீனிய்யா வஸ்ஸலாத் (மார்க்க கிரியைகளும் தொழுகையும்)
  • அத்தப்ஸீர் அத்தவ்ஹீதி (ஸூரா அன்கபூத் வரை எழுதப்பட்ட அல்குர்ஆன் விளக்கவுரை)
  • அஸ்ஸியாஸா வல்ஹுக்ம் (அரசியலும் ஆட்சியும்)
  • அல்மர்அ பைன தகாலீதில் முஜ்தமஃ வ தஆலீமித் தீன் (சமூக சம்பிரதாயங்களுக்கும் மார்க்க போதனைகளுக்கும் இடையில் பெண்)
  • ழரூறதுன் நக்த் அத்தாத்தி லில் ஹரக்கா இஸ்லாமிய்யா (இஸ்லாமிய இயக்கத்தின் சுய விமர்சனத்துக்கான அவசியம்)

கலாநிதி ஹஸன் துராபி அவர்கள் சமகால இஸ்லாமிய அறிஞர்களில் அதிகம் விமர்சனத்துக் காட்பட்டவர்களில் ஒருவராவார். கமால் முஸ்தபா என்பவர் எழுதிய நவீனகால முஃதஸிலாக்கள் எனும் நூலில் அவரும் ஒருவராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். ஹஸன் துராபி ஒருபோதும் விமர்சனத்துக்கு அப்பாட்பட்டவராக முடியாது. என்றபோதிலும் அவரது சிந்தனை, செயற்பாட்டு வேகம் போன்றன அவரை ஒரு மிளிர்ந்த ஆளுமையாக நமக்குக் காண்பிக்கின்றன.

அவரது எழுத்துக்கள் அனைத்தையும் தாண்டி இன்னும் ஆய்வுக்கு  உட்படுத்தப்பட வேண்டிய வகையறா என்றே நாம் அணுக வேண்டும். விமர்சனங்களைக் கண்டு முற்றிலும் புறக்கணித்து விடுவது அவரது அர்ப்பணிப்புக்களுக்குக் கொடுக்கும் மரியாதையாக அமைந்துவிடாது; அது அறிவுபூர்வமான அணுகுமுறையும் அல்ல. எல்லாம் வல்ல அல்லாஹ் அவரைப் பொருந்திக் கொள்ளவேண்டும்.

கலாநிதி தாஹா ஜாபிர் அல்வானி

hqdefault

 

இம்மாதம் நான்காம் தேதி இஸ்லாமிய உலகின் முக்கிய ஆளுமைகளுள் ஒருவரும் சிந்தனையாளருமான கலாநிதி தாஹா ஜாபிர் அல்வானி அவர்களை இஸ்லாமிய உலகம் இழந்தமை அதிர்ச்சியையும் செய்வதறியா திகைப்பொன்றையும் உடனடியாகத் தோற்றுவித்தது.

கலாநிதி தாஹா ஜாபிர் அல்வாணி அவர்கள் அறிவுப் பாரம்பரியம் மிகுந்த குடும்பமொன்றிலே இது போன்றதொரு மார்ச் மாதம் 4ம் தேதி இராக்கின் ஃபலூஜா நகரிலே 1935ம் ஆண்டில் பிறந்தார்கள். அவ்வாறான தினமொன்றிலேயே கெய்றோவிலிருந்து வாஷிங்டன் நோக்கித் திரும்புகையில் கடந்த வாரம் வபாத்தானார்கள்.

இஸ்லாமிய உலகிலே அடுத்தடுத்து தோன்றப்போகும் தலைமுறைகள் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டிய ஆளுமைகளுள் ஒருவராக கலாநிதி அவர்கள் விளங்குகிறார்கள். 1940களில் கல்வி பெறத் துவங்கிய தாஹா ஜாபிர் அல்வானி இராக்கின் முக்கிய அறிஞர்களிடம் ஆரம்ப, இடைநிலைக் கல்விகளைக் கற்றார்கள். பின்னர் உயர் கல்வியைத் தொடர்வதற்காக அல்அஸ்ஹர் கலாபீடத்திலே இணைந்து உஸூலுல் ஃபிக்ஹிலே கலாநிதிப் பட்டம் பெறும்வரைக்கும் தம் கல்வியை அங்கு தொடர்ந்தார்கள்.

அவரது கல்வி நடவடிக்கைகளின் வெளிப்பாடுகள் 1950களிலிருந்தே எழுத்துக்களாகவும் பேச்சுக்களாகவும் வெளிப்பட்டன. இக்காலப்பிரிவுகளில் சதாமுக்கும் அவரது பாத் கட்சிக்கும் எதிரான துணிகர செயல்பாடுகளினால் 1969 காலப்பிரிவில் இராக்கை விட்டும் வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார்.

பின்பு தொடர்ந்து 10 ஆண்டுகள் சவூதி ரியாதில் உள்ள இப்னு சுஊத் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகக் கடமை புரிந்தார்கள். பின்பு அமெரிக்காவில் குடியேறத் தீர்மானித்த கலாநிதியவர்கள் அங்கு இஸ்லாமிய சிந்தனைக்கான சர்வதேச நிறுவனத்தின் ஸ்தாபிதத்தில் முக்கிய பங்காற்றினார்கள். 1988 முதல் 1996 வரை அதனை தலைமையேற்று வழிநடாத்தியும் சென்றார்கள். அவ்வாறே ராபித்தத்துல் ஆலமில் இஸ்லாமி அமைப்பை நிறுவுவதிலும் அவரது பங்களிப்பு காத்திரமானது. இது தவிரவும் பல சர்வதேச மற்றும் பிராந்திய மட்டங்களிலான அமைப்புக்களை நிறுவுவதிலும் வழிநடாத்துவதிலும் முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள்.

கலாநிதி தாஹா ஜாபிர் அல்வானி அவர்கள் காலஞ் சென்ற சமயம் அறிஞரொருவர் தனது செய்தியில் அமெரிக்காவின் உஸூலுல் ஃபிக்ஹ் தூண் வீழ்ந்துவிட்டதென்று கருத்துத் தெரிவித்திருந்தார். உண்மையில் தாஹா ஜாபிர் அல்வானி அவர்களது உஸூல் ஃபிக்ஹ் (இஸ்லாமிய சட்டவாக்க முறைமைகள்) துறையில் இக்காலத்தின் ஜாம்பவானாகவே வாழ்ந்தார். அவரது கலாநிதிப் பட்ட ஆய்வும் கூட இமாம் ஃபக்ருத்தீன் ராஸி அவர்களது உஸூல் ஃபிக்ஹ் களஞ்சியமான ‘மஹ்ஸூல்’க்கான திறனாய்வாகவே இருந்தது. உஸூல் ஃபிக்ஹ்க்கு அப்பால் ஃபிக்ஹுல் அகல்லிய்யாத், முகாரனதுல் அத்யான், ஸுன்னா குறித்த புதிய சிந்தனைகளைப் பெறுவதிலும் கவனம் செலுத்தினார். இறுதிக் காலப்பகுதியில் அல்குர்ஆன் மற்றும் அதன் சிந்தனைகள் பற்றிய ஆய்வுகளிலேயே தன் நேரத்தை செலவழித்தார்; அத்துறையிலேயே 10 புத்தகங்கள் வரைக்கும் எழுதினார்; அத்தொடரில் இன்னும் 8 புத்தகங்கள் பதிப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றமை முக்கிய தகவலாகும். மேலும் அவரது விரிவுரைத்தொடர்கள் பலவும் பதிப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அவர் எழுதிய முப்பதுக்கும் மேற்பட்ட  சிறப்பான புத்தகங்களில் முக்கியமான சிலதை கீழ்வரும் பட்டியளில் உள்ளடக்கலாம்:

  1. இமாம் ராஸியின் அல்மஹ்ஸூல் ஃபி உஸூலில் ஃபிக்ஹ் புத்தகத்தைத் திறனாய்வு செய்து வெளியிட்டார்கள். ( இதுவே அவரது கலாநிதிப் பட்ட ஆய்வும் கூட)
  2. அல்அஸ்மா அல்ஃபிக்ரிய்யா வ மனாஹிஜுத் தஃங்யீர் – சிந்தனைச் நெருக்கடியும், மாற்றத்திற்கான வழிமுறைகளும்.
  3. அதபுல் இஃக்திலாஃப் ஃபில் இஸ்லாம் – இஸ்லாமில் கருத்து வேருபாட்டுக்கான ஒழுங்குவிதிகள்.
  4. லா இக்ராஹ ஃபித் தீன் – மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை என்ற இப்புத்தகம் ரித்தத் குறித்துப் பேசும் புத்தகமாகும்.

அடுத்து மிக முக்கியமாக அவர் முன்னெடுத்த சிந்தனைப் போராட்டமாக IIIT (இஸ்லாமிய சிந்தனைக்கான சர்வதேச நிறுவனம்) இன் அடிநாதமான அறிவை இஸ்லாமிய மயப்படுத்தும் செயற்றிட்டத்துக்காக அவர் முக்கிய பங்காற்றினார். இதற்கான நிறுவன வெளியீடான ‘இஸ்லாமிய்யத்துல் மஃரிஃபா’ (இஸ்லாமிய மயப்படுத்தல்) சஞ்சிகைக்கு ஆசிரியராக நின்று வழிநடாத்தினார்.

அவரது முக்கிய கருத்துக்கள் – சிந்தனைகள் – ஆக்கங்களில் ஸூரத்துல் அன்ஆமுக்கான தஃப்ஸீர் பரவலான கவனயீர்ப்பைப் பெற்றதோடு தஃப்ஸீர் குறித்த புதிய பார்வையையும் சிந்தனைகளையும் கொடுத்தது. உம்மத்தின் சுய விமர்சனத்துக்கான அழைப்பும் நோய்களுக்கான நிவாரணிகளை முன்வைத்தமையும் அவரது முக்கிய சிறப்பம்சமாகும். அவரது அதபுல் இஃக்திலாஃப் நூலில் நுபுவ்வத் காலம், ஃகிலாபா ராஷிதா தொட்டு தாபிஈன்கள் என கருத்து வேறுபாடுகள் பற்றியும் அவற்றுக்கான காரணிகள் பற்றியும் பேசுவது அலாதியானது. அவர் அல்குர்ஆனின் மையக்கருத்துக்களை விளக்கும் போது மூன்று தலைப்புகளாக (தவ்ஹீத்-தஸ்கியா-சமூகம்) பகுத்து நோக்குவார்.

அவர் எப்போதும் தன்னை அறிவைத் தேடும் மாணவனாகவே அறிமுகப்படுத்துவதற்கு மிகுந்த விருப்புக் கொண்டவராகக் காணப்பட்டதாக அவருக்கு நெருக்கமானோர் கூறுகின்றனர். அவருக்குக் கிடைக்கும் எந்த சந்தர்ப்பத்தையும் அறிவைத் தேடுவதற்கான வாய்ப்புக்களாக வரையறையின்றிப் பயன்படுத்திக் கொள்வதற்குப் பிரியமுடன் இருந்தார். அத்தோடு அமெரிக்காவில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பைக் கட்டியெழுப்புவதிலும் தன்னை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்திக் கொண்டார்.

கலாநிதி தாஹா ஜாபிர் அல்வானி தனது குடும்பம் முழுதையும் அறிவுத்துறையில் ஈடுபடுத்தியவர்; இவரது மனைவி முனா அபுல் ஃபல்ழ் ஒரு கலாநிதி. அவ்வாறே பிள்ளைகளான ஸீனத், ருக்கையா, அஹ்மத் உள்ளிட்ட அனைவருமே கலாநிதிப் பட்டத்தை நிறைவு செய்து இன்று புலமைத்துவ வட்டாரங்களில் அதிக பங்களிப்பு செய்வோராக தந்தை வழியில் முனைப்புடன் செயலாற்றுகின்றனர்.

அல்லாஹ் அன்னாரது பணிகளை அங்கீகரித்து அவரது மறுவுலக வாழ்வை அவனது திருப்தியைப் பெற்றதாக ஆக்கியருள வேண்டும்!!!

 

தகவல்கள்: www.yanabeea.com, www.sadaalahdas.com, www.alwasatnews.com

இவர் தான் கர்ளாவி…

10559677_880368715336527_8266170595164680539_n

மூலஆக்கம்: இஸ்மாஈல் இப்ராஹீம் (ஷெய்ஃக் கர்ளாவியின் மாணவர்களுள் ஒருவர். மற்றும் அவரது அலுவலக உத்தியோகத்தர்)

தமிழில்: எம்.எஸ்.எம். ஸியாப்

இமாம்களின் சூரியன்; ஒளி பொருந்திய அறிஞர்; ரப்பானிய ஆசான்; சத்தியத்தின் உதவியாளர்; நற்பண்பாடுகளின் வழிகாட்டி; இக்காலத்தின் தன்னிகரற்ற தனித்துவ ஆளுமை; நடுநிலைமையின் சிகரம்; அழைப்பாளர்களின் இமாம்…அவர்.

இவையெல்லாவற்றையும் புகழ்வதில் அளவு கடந்து செல்வதாகவோ அல்லது பெரும் ஷெய்ஃக்மார்களை நேசிப்பதில் வார்த்தைகளை வீணடிப்பதாக நாம் கருதக்கூடும். ஆனாலும் நான் யதார்த்தத்தில் இவ்வாறெல்லாம் தத்தமது ஷெய்ஃக்மார்களை வர்ணிப்போரிடம் நான் மன்னிப்புக் கோருகிறேன். நான் எனது ஷெய்ஃக் அவர்களைக் கண்ட போது அவர்தான் இவ்வாறு வர்ணிக்கப்படத் தகுதியானவராக நான் கருதினேன். அவர்தான் இத்தகைய புகழ் வார்த்தைகளுக்கு சாலப் பொருத்தமானவர். இத்தகையவர்தான் கர்ளாவி…

இதே கர்ளாவிதான் அறிவுத்துறை ஆக்கங்களையாக்கியும் தஃவா-உபதேச உரைகள் நிகழ்த்தியும் ஃபிக்ஹ்-ஃபத்வாக்கள் வழங்கியும் மாநாடுகள்-அறிவு மன்றங்களில் பங்கெடுத்தும் ஆய்வுரைகள்-விரிவுரைத் தொடர்கள் நிகழ்த்தியும் அறிவமைப்புக்கள்-நிறுவனங்கள்-ஃபிக்ஹு மன்றங்களில் பங்கெடுத்தும் இஸ்லாமுக்குப் பணிபுரிவதற்காகத் தன்னுடைய முயற்சியைச் செலவளிப்பவர். இதே கர்ளாவிதான் சிறிதாகவும் நடுத்தர அளவிலும் மட்டுமல்லாமல் கலைக்களஞ்சிய அளவுகளிலும் என இருநூறை அண்மித்த நூல்களின் சொந்தக்காரர். இவர்தான் தன் 32வது வயதில் ‘அல்ஹலால் வல்ஹராம்’ எனும் நூலைத் தொகுத்தவர்.அன்றிலிருந்து இன்று வரைக்கும் 56 வருடங்களாக ஓயாது எழுதிக் கொண்டேயிருக்கின்றார். இமாம் ஷல்தூதுடைய காலத்தில் அஸ்ஹரில் ஆசிரியராக இருந்தார்.பின் அஸ்ஹர் பல்கலையில் கலாநிதி முஹம்மத் அல்பஹியுடைய காலத்தில் கல்விப் பிரிவில் பணியாற்றினார். அவரது நூல்கள் மக்களது தேவைக்காக பல்வேறுபட்ட மொழிகளிலும் மேற்கு நாடுகளில் மொழிபெயர்க்கப்படுகின்றன.

 

ஷெய்ஃக் அல்கஸ்ஸாலி கூறுவது போன்று இதற்கு முன்பு எப்போதுமே இஸ்லாமிய வரலாற்றில் தொகுக்கப்படாத ஃபிக்ஹுஸ் ஸகாத் களஞ்சியத்தின் ஆசிரியர் அவர். அவ்வாறுதான் பெரும் கலைக்களஞ்சியமான ஃபிக்ஹுல் ஜிஹாதின் சொந்தக்காரர் அவர். இவ்வாறே உலகம் பூராகக் கிழக்கு மேற்கெங்கும் பரவிவிட்டிருக்கும் பல தொகுப்புக்களின் சொந்தக்காரர் அவர்.

இமாம் கர்ளாவி அவர்கள் மென்மையான அமைதி சுபாவமுள்ள மனிதர். மெல்லிய இதயம்; நெருங்கிய உள்ளம்; தூய ஆத்மா; இனிய உணர்வுகள்; கண்ணியமிக்க நடத்தைகள்; மலர்ச்சியான முகம்… அனைத்தும் கொண்டவர்.

இதே கர்ளாவி பற்றி; அவரது சிந்தனைகள் குறித்து; அவரது ஃபிக்ஹ் பற்றி; அவரது தஃவா, இஸ்லாஹ் பணி குறித்து; அவரது அறிவாக்கங்கள், முயற்சிகள் பற்றி என நூற்றுக்கணக்கான முதுமானி மற்றும் கலாநிதிப் பட்டங்களுக்கான ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றது. அவை எகிப்திய பல்கலைக்கழகங்களான அஸ்ஹரிலும்தான் கெய்ரோவிலும்தான் ஐன் ஷம்ஸிலும் ஏனைய சர்வதேச அளவிலான இராக், மொரோக்கோ, லெபனான், பாகிஸ்தான், இந்தியா, மலேசியா, சீனா,இந்தோனேசியா மற்றும் அதற்கப்பாலும் தான்…

அறிவு மன்றங்களும் ஃபிக்ஹு மஜ்லிஸ்களும் போட்டியிட்டுக் கொண்டு அவருக்கு அங்கத்துவம் வழங்கி அவரது பங்கேற்பை அவாவி நிற்கும்.

இதே கர்ளாவி அவர்களைத்தான் அவரது ஆசான்மார்களும் சகபாடிகளும் மாணவர்களும் போற்றுகின்றனர். ஹஸனுல் பன்னா, மஹ்மூத் ஷல்தூத், முஹம்மத் அல்பஹி, அப்துல் ஹலீம் மஹ்முத், முஹம்மத் அல்கஸ்ஸாலி, அபுல்ஹஸன் நத்வி, அபுல் அஃலா மவ்தூதி, முஸ்தபா சிபாயி, முஸ்தபா ஸர்க்கா, அலி தன்தாவி,முஹம்மத் அல்முபாரக், உமர் அல்அமீரி, மஃரூப் அத்துவாலீபி, அப்துல் அஸீஸ் பின் பாஸ், அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் ஆலுஷ் ஷெய்ஃக், அப்துல்லாஹ் பின் மனீஃ, அப்துல்லாஹ் பின் ஸைத் ஆலு மஹ்மூத், அப்துல்லாஹ் அல் அன்ஸாரி, அப்துல்லாஹ் பின் துர்க்கி, நிழாம் யஃகூபி, அப்துஸ் ஸத்தார் அபூ குத்தா,அப்துல் ஃபத்தாஹ் அபூ குத்தா, முஹம்மத் அவாமா, அதீப் ஸாலிஹ், பைஸல் மவ்லவி, முஹம்மத் ஃபத்ஹி உஸ்மான், முஹம்மத் இமாரா, அஹ்மத் அஸ்ஸால்,தாரிக் அல்பிஷ்ரி, பஹ்மி ஹுவைதி… உட்பட இன்னும் ஏராளமானோர்.

இதே கர்ளாவிதான் தனது மார்க்கத்திற்காகவும் தன் தாய்நாட்டூக்காகவும் தியாகங்கள் புரிந்தவர். தன் இளமைப் பராயத்திலேயே தவுர் சிறைச்சாலையில் மன்னர் பாரூக்கின் காலத்தில் சிறைப்படுத்தப்பட்டு சித்திரவதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டவர். பின் அப்துல் நாஸரின் காலத்தில் அரசியல் கைதியாகப் பல தடவைகள் சிறைவாசம் அனுபவித்தவர். பின் அல்லாஹ்வுடைய பாதையில் அவனது மார்க்கத்தின் பணியாளராக அவரது வீட்டை விட்டும் புறப்பட்டவர். சற்றுச் சில தினங்களுக்கு முன்னால் சர்வதேசப் பொலிஸான இண்டர்போல் அமைப்பு சர்வதேசக் குற்றவாளிகளுடன் இணைத்து அவரையும் இன்னும் சில அறிஞர்களையும் தனது தேடப்படுவோர் பட்டியலில் இணைத்துள்ளது. அப்படியாயின் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டும், உயிருடன் கொளுத்தப்பட்டும் சித்திரவதைப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த போதெல்லாம் இந்த இண்டர்போல் எங்கே இருந்தது..? குழதைகள், பெரியவர்கள் என்று பாராது கொல்லப்பட்ட போதெல்லாம் இண்டர்போல் எங்கிருந்தது???

முதலில் இண்டர்போல் முபாரக்கின் ஆட்சியின் களவாணிகள் ஒருவர் பின் ஒருவராக நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுக் கொண்டிருப்பது குறித்துப் பதிலளிக்க வேண்டும். அவர்கள் தான் 30 வருடங்களாக நாட்டை சீர்குலைத்து அங்கு குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்தவர்கள். இறுதியில் மோசடியிலும் இஸ்ரேலுக்கு எண்ணெய் விற்பதிலும் திளைத்திருந்த ஹுஸ்னி முபாரக் நிரபராதியாக்கப்பட்டு விட்டான். அவன் பட்டப் பகலிலே ஆயிரக்கணக்கானோரை அநியாயமாகப் படுகொலை செய்தவன். இதேநேரம் எகிப்திய நீதித் துறை(!) வினைத்திறன் மிக்க வயதுகளில் உள்ள இளைஞர்களையும் யுவதிகளையும் கொடுந்தண்டனைகள் வழங்கி உள்ளே தள்ளிக் கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் அவர்கள் ‘ராபிஆ’ சின்னத்தைக் காண்பித்ததாம். அல்லது முர்ஸியின் படத்தையோ ஷரீஆ சுலோகங்களையோ வைத்துக் கொண்டிருந்தார்களாம். 78 குழந்தைகளையும்கூட 5 வருடம் – 10 வருடம் என கடூழியச் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்திருக்கிறார்கள். சும்மா வெறும் ஒரே நொடியில் நூற்றுக்கு மேலால் நூறு என எவ்வித சான்றும் இல்லாது அவர்களுக்கும் பேசுவதற்கோ தம் பக்க நியாயங்களை எடுத்துவைப்பதற்கோ சில சொற்ப அவகாசங்களையாவது வழங்காது மரண தண்டனைத் தீர்ப்புக்களை வழங்கிக் கொண்டேயிருக்கிறார்கள்.

கொடுங்கரம் கொண்ட இந்த நீதிமன்றங்களுக்கு சித்திரவதைப்படும் அப்பாவிகளின் ஓலங்கள் கேட்பதேயில்லை. எமக்கென அல்லாஹ்வையன்றி வேறு துணையோ பலமோ வேறேதுமில்லை.

இது அபாண்டங்களை சித்து விளையாட்டுக்களையும் கொண்ட தீர்ப்பு; இது உலகம் முழுதும் போற்றப்படும் சர்வதேச உரிமைச் சட்டங்களை எள்ளிநகையாடும் தீர்ப்பு; இது அச்சட்டங்களை உலகின் பார்வைக்குக் கேலிக்கூத்தாக்கிவிட்ட தீர்ப்பு; இது நீதியின் தீர்ப்பல்ல… இது இராணுவக்கெடுபிடிகள் நிறைந்த ஓர் அமைப்பின் தீர்ப்பு. இவ்வகையான தீர்ப்புக்கள் குறித்து கண்ணியமிக்க நிறுவனங்கள் பதில் கூற முடியுமா?

முன்மாதிரி மிகுந்த பொறுப்பாளர்

sbnamer

 

நீங்கள் ஒவ்வொருவரும் உங்களது பொறுப்புக்கள் குறித்து விசாரிக்கப்படுவீர்கள்

 

அது உமர்(ரழி) அவர்களது ஆட்சிக் காலம்… இஸ்லாம் பல பிரதேசங்களுக்கும் மிக வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது. ஒருமுறை ஃகலீபா அவர்கள் தமது ஆட்சியின் கீழ் சிரியாவின் ஹிம்ஸ் பிரதேசத்துக்கு மக்களின் குறை கேட்பதற்காகப் பயணிக்கிறார்கள். அங்குள்ள மக்கள் தமக்கென நியமனம் செய்யப்பட்டிருக்கும் கவர்ணர் குறித்து முறைப்படத் துவங்குகிறார்கள்.

ஹிம்ஸ் வாசிகள்: அமீருல் முஃமினீன் அவர்களே! நாங்கள் அவர் குறித்து நான்கு முறைப்பாடுகளை வைத்திருக்கிறோம்.

ஃகலீபா உமர்: உங்கள் முறைப்பாடுகளைக் கூறுங்கள்..!

ஹிம்ஸ் வாசிகள்: கவர்ணர் அவர்கள் சூரியன் உச்சமடைந்து பகல் பொழுது ஆகும்வரைக்கும் மக்களாகிய எங்களிடம் வருவதில்லை.

ஃகலீபா உமர்: அடுத்து..

ஹிம்ஸ் வாசிகள்: நாம் இரவில் ஏதும் தேவைகளுக்கு அழைத்தால் எமக்கு செவிசாய்ப்பதில்லை.

ஃகலீபா உமர்: இன்னும் இருக்கிறதா?

ஹிம்ஸ் வாசிகள்: ஆம். அவருக்கு மாதத்தில் ஒரு நாளில் அவர் வீட்டை விட்டு வெளியேறவே மாட்டார். எம்மால் அவரைப் பார்க்கவும் முடியாது.

ஃகலீபா உமர்: அடுத்து என்ன குறை?

ஹிம்ஸ் வாசிகள்: அவ்வப்போது இவர் மயங்கிக் கீழே விழுந்து விடுகிறார்.

ஃகலீபா உமர் (தனக்குள் முணுமுணுத்தவராக): யா அல்லாஹ்! நான் அவரைப் பற்றி நலவுகளைத்தானே அறிந்துவைத்திருக்கிறேன். அல்லாஹ்வே! உனது நல்லடியானாகத்தான் அவரைக் பார்க்கிறேன்.

ஃகலீபா உமர் உடனே கவர்ணரை அழைக்கிறார்கள். அப்போது ஹிம்ஸ் கவர்ணர் ஸஈத் இப்னு ஆமிர்(ரழி) அவர்கள் அங்கே ஆஜராகிறார்கள்.

ஃகலீபா உமர்: ஸஈதே! மக்கள் உன்னைப் பற்றி இவ்வாறெல்லாம் முறைப்படுகிறார்களே… இதன் உண்மைத் தன்மை என்ன?

ஸஈத் இப்னு ஆமிர்: அமீருல் முஃமினீன் அவர்களே! நான் இவற்றுக்கான காரணங்களைக் கூற சங்கடப்படுகிறேன். நிச்சயமாக எனது வீட்டு வேலைகளுக்காக பணியாட்கள் எவருமே இல்லை. நான்தான் மாவு அரைத்து புளிக்கச் செய்து ரொட்டியை சுட்டு சாப்பிட்டு விட்டு ழுஹா தொழுதுவிட்டு வருவதற்கிடையில் பகல் பொழுதாகிவிடுகின்றது.

ஃகலீபா உமர்: புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே! இரண்டாவது காரணி என்ன?

ஸஈத் இப்னு ஆமிர்: எனது பகல் பொழுது முழுவதும் மக்களுக்குச் சொந்தமானது. அதனால் எனது ரப்புக்கு என் இரவுப் பொழுதுகளை ஒப்படைத்து விடுகிறேன். அப்போது எனது நேரத்தை மக்களுக்கு அளிக்க நான் விரும்புவதில்லை.

ஃகலீபா உமர்: மூன்றாவதாக உமக்குக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு உமது பதில் என்ன ஸஈத்!?

ஸஈத் இப்னு ஆமிர்: எனக்கு அணிவதற்கு ஒரே ஒரு ஆடைதான் உள்ளது. மாதத்தில் ஒருநாள் அதனை நான் கழுவிவிட்டு உலரும் வரைக்கும் காத்திருக்கவேண்டி ஏற்படுகிறது. அதனால் எனக்கு அந்நாளில் வெளியிறங்கி வர முடிவதில்லை.

ஃகலீபா உமர்: அப்படியாயின், அவ்வப்போது நீர் மயக்கமடைந்து வீழ்வதாக மக்கள் கூறுகின்றனரே…

ஸஈத் இப்னு ஆமிர்: ஆம்… உண்மைதான். நான் இஸ்லாமைத் தழுவும் முன்பு ஃகுபைப் பின் அதி(ரழி) அவர்கள் கொல்லப்படுவதை என் கண்களால் பார்த்தேன். குறைஷிகள் அவரை அறுத்து, வெட்டி, குற்றுயிராக ஆக்கிவிட்டிருந்தனர். ரத்தம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கையில் காபிர்கள் அவரிடம் ‘ஃகுபைபே! இவ்விடத்தில் உனக்குப் பதிலாக முஹம்மத் இருந்திருக்கலாமே என நினைக்கிறாய்தானே..’ எனக் கேட்க ‘இங்கு நானும் என் குடும்பமும் பாதுகாப்பாக இருக்க முஹம்மத் மீது ஒரு முள் குத்துவதற்குக் கூட விடமாட்டேன்.’ என ஃகுபைப் ஆக்ரோஷமாகப் பதிலளிக்கிறார்கள். கோபமடைந்த காபிர்கள் அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றனர். ஒரு சாட்சியாக இருந்து அவரைக் காப்பாற்றாமல் வேடிக்கைபார்த்துக் கொண்டிருந்தேன் என்ற எண்ணமும் கைசேதமும் ஏற்படும் போதெல்லாம் அல்லாஹ்வின் தண்டனையை நினைத்து உள்ளம் நடுங்கி விடுகிறது. என்னை அறியாமல் அவ்விடத்திலேயே மயங்கி விழுந்துவிடுவேன்.

அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த ஃகலீபா உமர் “அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். நான் ஸஈத் மீது வைத்திருந்த நம்பிக்கைக்குக் களங்கம் ஏற்படவில்லை.” எனக் கூறுகிறார்கள்.

* * * * *

ஸஈத் இப்னு ஆமிர் அவர்கள் கலீபா உமரின் ஃகிலாபத்தின் போது நியமிக்கப்பட்ட கவர்ணர்களில் மிகுந்த உலகப் பற்றற்ற வாழ்க்கையைத் பின்பற்றி வந்தவர் ஆவார். அவர் கவர்ணராக நியமனம் செய்யப்பட்ட நிகழ்வும் சுவாரஷ்யமும் இறை நினைவும் தரக்கூடியது.

ஒரு முறை உமரவர்கள் ஹிம்ஸ் பகுதியிலிருக்கும் வசதியற்றவர்கள் குறித்த கணக்கெடுப்பை மேற்கொள்கிறார். அங்கே ஸஈத் என்ற பெயரும் இடம்பெறுகிறது. திகைப்படைந்த ஃகலீபா உமர் மக்களிடம் விசாரிக்கிறார்கள். ”யார் இந்த ஸஈத்?” என மக்களிடம் கேட்கிறார்கள். மக்கள் “அவர்தான் எங்களது அமீர்.” என்றனர். “என்ன? உங்கள் அமீர் ஏழையா?” என்ற உமரின் கேள்வியில் அதிர்ச்சி இருந்தது. “ஆமாம். அல்லாஹ்வின் மேல் ஆணையாக, பல நாட்கள் அவரது வீட்டு அடுக்களை நெருப்பின்றி இருப்பது எங்களுக்குத் தெரியும்.” என்று அவர்கள் நிச்சயப்படுத்தினர். உமர் அழுதார். மாநிலம் ஆளும் கவர்னர் ஏழையா? தடுக்க இயலாமல் உமர் அழுதார்.

பின் அவரது செலவுத் தொகைக்கு ஆயிரம் தீனார்களை ஃகலீபா உமர் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளக் கொடுக்கிறார்கள். அதனை மறுத்து தன்னைவிடத் தேவையுடையோருக்கு அளிக்குமாறு வேண்ட, ஸஈதுக்கு உமர்(ரழி) அவர்கள் தூதர்(ஸல்) அவர்களது ஹதீஸொன்றை உரைக்கிறார்கள்: “எவரொருவர், தான் கேட்காமலும் மனது விருப்பப்படாமலும் ஏதோவொன்று கிடைக்கப்பெறுகிறாரோ; அவ்விடயம் அல்லாஹ்வினால் அளிக்கப்பட்ட ரிஸ்க்காகும். எனவே, அதனை அவர் ஏற்றுக்கொள்ளட்டும்.”

பின்பு அந்த ஆயிரம் தீனார்களைப் பெற்றுக்கொண்டு ஹிம்ஸ் வந்து சேர்ந்ததும், மனைவியிடம் “நாமிருக்கும் நகரில் வர்த்தகத்தில் நல்ல இலாபம் கிடைக்கிறது. பணத்தை நல்லதொரு வியாபாரத்தில் முதலீடு செய்யலாமே… பின்பு அதன் இலாபத்தை நமக்கு அனுபவிக்கலாம் தானே…” என ஆலோசனை கேட்கிறார். மனைவியும் உடன்பட தன்னிடமிருந்த தீனார்கள் முழுவதையும் ஹிம்ஸிலிருந்த ஏழைகளுக்கும் தேவையுடையோருக்கும் பிரித்துப் பகிர்ந்தளித்துவிடுகிறார்.

அவரின் மனைவி வியாபாரத்தின் இலாபம் குறித்துக் கேட்கும் போதெல்லாம், “அதற்கொரு குறைவும் இல்லை? அது பிரமாதமாய் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதன் இலாபமும் பெருகி வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது” என்று கூறிவிடுவார்.

ஸஈத் இப்னு ஆமிர்(ரழி) பற்றி சில குறிப்புக்கள்:

  • முழுப்பெயர்: ஸஈத் இப்னு ஆமிர் இப்னு ஹுஸைம் இப்னு ஸுலாமான் இப்னு ரபீஆ அல்குர்ஷி அல்ஜுமஹி.
  • முக்கிய நபித்தோழர்களில் ஒருவர். பல சிறப்புக்கள் நிறைந்தவர். உலகப் பற்றற்ற வாழ்க்கைக்குப் பெயர் போனவர்.
  • ஃகைபர் யுத்தத்திற்கு முன்னரான காலப்பகுதியில் இஸ்லாமை ஏற்றுக்கொண்டார். மதீனாவுக்கு ஹிஜ்ரத் மேற்கொண்டவர்.
  • சொந்த வீடு கூட இல்லாமல் வாழ்ந்துவந்தவர் எனக் கூறப்படுகிறது.
  • தூதர்(ஸல்) அவர்களின் தர்பிய்யத்-ஆன்மீகப் பயிற்றுவிப்புக்களால் அதிகம் தாக்கம்பெற்றவர்.
  • உலகப் பற்றற்ற, பேணுதலான வாழ்வுகொண்டவர். அதேநேரம் தலைமைத்துவ ஆற்றல் மிக்கவர்.
  • இவர் ஹிஜ்ரி 18 அல்லது 19 இல் வபாத்தானதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.

ஸஈத் இப்னு ஆமிர்(ரழி) அவர்கள் அறிவித்த ஹதீஸ்கள் சில:

நபியவர்கள் கூறியதாக ஸஈத் இப்னு ஆமிர்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ஏழைகள் மறுமையில் புறாக்கள் போன்று விரைந்து வருவார்கள். அவர்களிடம் ‘விசாரணைக்காக நில்லுங்கள்!’ எனக் கூறப்படும். அவர்கள் அதற்குக் கூறுவார்கள் ‘அல்லாஹ் எம்மை விசாரிக்கும் அளவுக்கு எதுவும் தரவில்லையே…’ அப்போது அல்லாஹ் கூறுவான்: ‘எனது அடியார்கள் உண்மை உரைத்தனர்.’ உடனடியாக ஏனைய மக்களுக்கு எழுபது ஆண்டுகள் முன்னரே சுவனத்தில் நுழைந்துவிடுவார்கள்.”

நபியவர்கள் கூறியதாக ஸஈத் இப்னு ஆமிர்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “சுவனவாசிகளில் ஒரு பெண் பூமியிலுள்ளோருக்குக் காட்சியளிப்பாளாயின் முழுப் பூமியும் கஸ்தூரி வாசணையால் நிரம்பி சூரிய, சந்திர ஒளிகளும் போக்கப்பட்டுவிடும்.”

பதீயுஸ்ஸமான் ஸஈத் நூர்ஸி – ஓர் எளிய அறிமுகம்

bediuzzaman_said_nursi_2

இது வரைக்கும் நான் வாசித்துள்ள ஆளுமைகளுள் ஸஈத் நூர்ஸி போன்று எவரையும் தேடித் தேடி வாசித்ததில்லை. ஏதோ இனம்புரியாதவகையில் அவர் மீதான ஓர் ஈடுபாடு அவர் பற்றி என்னை அதிகம் வாசிக்கச் செய்தது. எனவே அவர் பற்றி வாசித்ததுள் சிலதைப் பகிர்ந்துகொள்ள‌ விரும்பியதன் விளைவாகவே கீழ்வரும் எழுத்துக்கள் அமைகின்றன‌.

நமது தஃவா வெளிகளில் ஷஹீத் செய்யித் குதுப்(ரஹ்), இமாம் ஷஹீத் ஹஸ‌னுல் பன்னா(ரஹ்), மெளலானா மெளதூதி(ரஹ்), மெளலானாஇல்யாஸ்(ரஹ்) போன்றோரது சிந்தனைகள், தஃவா வழிமுறைகள் அறிமுகமான‌ அளவிற்கு துருக்கி தேசத்தின் மாபெரும்சிந்தனையாளரும் அங்கு இன்று நிகழ்ந்து வரும் பாரிய நிலைமாறுதல்களுக்கான ஆரம்ப அடித்தளங்களை இட்டவருமான பதீயுஸ்ஸமான்ஸஈத் நூர்ஸீ மற்றும் அவரது சிந்தனைகள் பற்றிய போதிய பரிச்சயம் இல்லாமலேயே இருக்கின்றது.

உலகம் வரலாற்றுப் போக்கில் பல்வேறு ஏற்ற இறக்கங்களை வந்துள்ளது. சமூகங்கள் எழுச்சிகண்டிருக்கின்றன. வீழ்ந்து அழிந்து போயிருக்கின்றன. அவ்வகையில் பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகள் முழு உலகிலும் தலைகீழ் மாற்றங்கள் நிகழ்ந்த காலப்பகுதிகளாக அமைந்தன.


இவ்வகையில் உலகளாவிய முஸ்லிம் உம்மத்தைப் பொறுத்தளவில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்கூறுகள், இருபதாம்நூற்றாண்டின் ஆரம்பக்கூறுகள் மிக முக்கியத்துவம் மிகுந்த அதேநேரம் வேதனைகள் நிறைந்த காலப் பிரிவுகளாகவும் அமைந்திருந்தன.முஸ்லிம்கள் அறிவுத்துறைகளில் படு வீழ்ச்சியடைந்து; இஸ்லாமிய ஃகிலாபத் வீழ்ந்து; இஸ்லாமுக்குக்கு எவ்விதப் பெறுமானமும்வழங்காத தேசியவாத, சோஷலிஸப் பெயர் கொண்ட, கம்யூனிசப் பெயர்கொண்ட மற்றும் மதச்சார்பற்ற‌, மத எதிர்ப்புக் கொண்டகொடுங்கர ஆட்சிகள் தோற்றம்பெற்ற‌ காலப் பகுதிகளாகும்.மேலே குறித்துக்காட்டப்பட்ட அனைத்து அவலங்களையும் தன்வாழ்நாளிலேயே வேதனைகளாக அனுபவித்தவராக‌ உஸ்தாத் பதியுஸ்ஸமான் ஸஈத் நூர்ஸி அவர்கள் காணப்படுகிறார்கள்.

பிறப்பும் இளமைப்பருவமும்:

உஸ்தாத் ஸஈத் நூர்ஸி அவர்கள் இன்றைய துருக்கி தேசத்தின் கிழக்கு அனடோலியா பிரதேசத்தின் பிட்லீஸ் நகரின் அண்மையிலுள்ள‌ நூர்ஸ்எனும் கிராமத்தில் கி.பி. 1877 ஆம் ஆண்டு பிறக்கிறார்கள். இவரது குடும்பம் மிகுந்த ஆன்மீகப் பின்னணி கொண்டதாக‌ விளங்கியது.அவரது ஆளுமை வளர்ச்சியில் முக்கிய தாக்கம் செலுத்திய‌ விடயமாக அவரது குடும்பப் பின்னணி காணப்பட்டது. “நான் பல்வேறுஆசிரியர்களிடமும், நூல்களை வாசித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட‌ அறிவுடனும் இணைத்து எனது தாய் இளமையில் எனது உள்ளத்தில்விதைத்த விதைகள் மூலம் தோன்றிய வேர்களை மூலமாகவும் கொண்டே பெரு விருட்சமாக வளர்ந்தேன்” என ஸஈத் நூர்ஸி அவர்கள்தன‌து சுய சரிதையிலே பதிவு செய்கிறார்கள். அவரது தாயார் இபாதத்துக்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். அவரது தந்தையும் கூடகுடும்பத்துக்காக ஆகுமான முறைகளில் உழைப்பதில், ஹராம்-ஹலால் பேணுவதில் மிகக் கண்டிப்பானவராக‌ இருந்தார். பக்தி சிரத்தைமிகுந்த மக்களைக் கொண்ட அவரது கிராம சூழலும் அவரில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஸஈத் நூர்ஸியவர்கள் சிறு வயதிலேயே அல்குர்ஆனை மனனம் செய்திருந்ததோடு இஸ்லாமியக் கலைகள் மாத்திரமன்றி கணிதம்,வானவியல், தத்துவம், வரலாறு, புவிச்சரிதவியல், பெளதிகவியல், இரசாயனவியல், நவீன‌ தத்துவங்கள் ஆகிய அறிவுத்துறைகளில் ஆழ்ந்தஈடுபாடு கொண்டிருந்ததோடு அவற்றை துறைபோகக் கற்றிருந்தார். சிறு வயது முதலே வயதுக்கு மீறிய அறிவு முதிர்ச்சி நூர்ஸிஅவர்களிடத்தில் வெளிப்பட்டது.

தனது கல்வி பெறுகையைத் தன் ஒன்பதாவது வயதில் தனது மூத்த சகோதரரான முல்லா அப்துல்லாஹ்வுடன் இணைந்து அருகிலுள்ளஹிஸன் எனும் கிராமத்து மத்ரஸாவில் இணைந்து கொண்டதுடன் ஆரம்பித்தார். எனினும் அவ‌ர் கொண்டிருந்த அதீத புலமையின்காரணமாக தனது ஆசிரியர்மாருடன் முரண்பட்டுக்கொண்டு அடிக்கடி மத்ரஸாவிலிருந்து வெளியேறவோ அல்லதுவெளியேற்றப்படவோ வேண்டிய நிலைமைகளுக்குள்ளாகினார். இதனால் அடிக்கடி மத்ரஸாக்கள் மாறிக் கொண்டிருக்க வேண்டியநிலையிலிருந்தார்.

அப்போது துருக்கிய கிராமங்கள் வழியே சுற்றித்திரிந்து கொண்டு வெறுமனே ரொட்டித் துண்டுகளையும் காட்டுப் பழவர்க்கங்களையும் உண்டு வாழப் பழகுகின்றார். பனி கவ்வும் கடும் குளிர்காலங்களிலும் ஆறுகளிலே மூழ்கிக் குளித்தெழுவார். அறிவு விருத்திக்காக அவ்வப்போது ஆங்காங்கே பட்டணங்களில் இடம்பெறும் உலமாக்களுக்கு மத்தியிலான விவாதங்களில் கலந்துகொண்டு தன் அறிவைவிருத்தி செய்து கொள்வார். இவ்வாறு பல்வேறு விநோதப் பழக்கங்களுடன் முறையான‌ கற்றல் இன்றித் திரிந்து கொண்டிருந்த அவரைசரியாக இனங்கண்டு சன் மார்க்கக் கல்வியைப் புகட்டியவராக ஷெய்ஃக் முஹம்மத் ஜலாலி என்பவர் கருதப்படுகிறார்.

ஸஈத் நூர்ஸியின் சிந்தனைகள்

ஸஈத் நூர்ஸி முழு இஸ்லாமிய உலகையும் பீடித்திருந்த‌ முதன்மை நோயாக ஈமானில் ஏற்பட்டிருந்த சறுக்கலையே கருதினார்.மதச்சார்பின்மைக்கும், சடவாததுக்கும் உலகில் எந்த இடமும் கிடையாதென ஆணித்தரமாக வாதிட்டார்.

ஸஈத் நூர்ஸி அவர்களினது வாழ்வு முழுவதினதும் கனியாக எமக்கு அவரது சிந்தனைகளை இன்றளவும் தந்து கொண்டிருப்பது அல்குர்ஆனுக்கான தனித்துவமான தஃப்ஸீராக விளங்கும் ரிஸாலா-யே-நூர் ஆகும். இது அக்காலவெளிகளில் கொடிய மதச்சார்பின்மை கோலோச்சிக் கொண்டிருந்த வேளைகளில் இஸ்லாமிய தூதின் உயிர்நாடியான ஈமானைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொடுக்கும் வேலையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டது.

அவர் ரிஸாலா-யே-நூரை எழுதத் தொடங்கும் முன் நிகழ்ந்த ஒரு சம்பவம் நினைவுகூரத்தக்கது. ஒரு நாள் “நான் முழு உலகையும் நோக்கிப்பிரகடனம் செய்கிறேன். கண்ணியமிக்க இறை வார்த்தைகள் பொதிந்த அல்குர்ஆன் பிரகாசம் நிறைந்த, நேர்வழி காட்டக்கூடிய அறிவுக்கருவூலமாகும். அதன் பிரகாசம் ஒருபோதும் மங்காது” என அறைகூவல் விடுத்தார்கள். அதே தினம் அவரது கனவில் தோன்றிய தூதர்(ஸல்)அவர்களிடம் தனக்கு அல்குர்ஆனின் விளக்கத்தைத் தருமாறும் அதன் நிழலில் வாழ அருள்புரியவும் அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறும்வேண்டுகிறார்கள். அதற்கு செவிசாய்த்து தூதரவர்கள் எவரிடமும் இரந்து நிற்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் பதிலளித்தார்கள். முழுஉலக செல்வங்களையும் பெற்ற திருப்தியோடு விழித்த இமாமவர்களின் உள்ளத்தில் அல்குர்ஆனிய அறிவும் விளக்கமும் ஆழமாகப்பதிந்தது.

பதீயுஸ்ஸமான் குறித்து 1995ம் ஆண்டில் நடந்த சர்வதேச ஆய்வு மாநாடொன்றிலே இன்றைய துருக்கிய ஜனாதிபதியும் அன்றைய இஸ்தான்பூல் மேயருமான ரஜப் தையிப் எர்தோகான் இவ்வாறு பதீயுஸ்ஸமானை அடையாளப்படுத்தினார்: “ஸஈத் நூர்ஸி இன்னும் தோண்டியெடுக்கப்படாத புதையல்; பதீயுஸ்ஸமான் இவ்வுலகிற்கு வந்த காலகட்டத்தில் நமது நிலைமை தலைகீழாக இருந்தது.பதீயுஸ்ஸமான் நம் சமூகத்தின் நோயினைத் துல்லியமாகக் கண்டறிந்து; நமது விமோசனத்துக்கான வழி இறை நம்பிக்கையே என நம்பினார். அந்த இறை நம்பிக்கையை சில விதங்களில் மறுவரையறை செய்து வழங்கினார். முஸ்லிம்களும் இஸ்லாமிய உலகும் காப்பாற்றப்பட வேண்டுமென்றால் அவர்களுடைய ஆன்மாக்களில் இறைநம்பிக்கையின் முழுமாற்ற மூச்சை மீண்டும் ஊத வேண்டும் எனக் கூறினார்.”

உஸ்தாத் ஸஈத் நூர்ஸி பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்பவராகக் காணப்பட்டார்கள். லிபியாவுக்குப் பயணம் செய்து அங்கு ஸனூஸிஇயக்கத் தலைவரை சந்தித்தார்கள். இது பிற்காலத்தில் தனது மாணவர்களை ஒழுங்கமைக்க‌ உதவியதாக ஸஈத் நூர்ஸியவர்கள்பிற்காலத்தில் குறிப்பிட்டார்கள். அவர்கள் இஸ்லாமின் எதிரிகளோடு யுத்த முனையில் நேரடியாகக் களமிறங்கிப் போராடுற்கும் இந்தத் தொடர்புகள் தான் உந்துசக்தியாக அமைந்திருக்கலாம். குறிப்பாக முதல் உலக மகா யுத்த காலப் பகுதியில் துருக்கியை ஆக்கிரமிக்க வந்தரஷ்ய படையினருக்கெதிராக‌த் தன் மாணவர்களுடன் இணைந்து மேற்கொண்ட ஆக்கிரமிப்புக்கெதிரான யுத்தம் பிரபல்யம் மிக்கது.இதன்போது அவர் சிறைப் பிடிக்கப்பட்டு ரஷ்யாவிலும் சிறையில் இருந்தார். பின் அங்கிருந்து விடுவிக்கப்பட்டு கிழக்கு ஐரோப்பாவினூடாக துருக்கியை வந்தடைந்தார். இதனை விடுத்து பல முறைகள் கமாலிஸ அரசால் சிறைபிடிக்கப்பட்டும் நாடுகடத்தப்பட்டும் வீண் வழக்குகள் தொடுக்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டுமிருந்தார்.

மிக முக்கியமாக ஸஈத் நூர்ஸி அவர்களின் சிந்தனை ஆளுமையில் தாக்கம் செலுத்தியவர்களாக‌ ஷெய்ஃக் அப்துல் காதர் ஜீலானி மற்றும்ஷெய்ஃக் அஹ்மத் ஸிர்ஹிந்த் ஆகியோர் முக்கியமானவர்களாகக் காணப்படுகிறார்கள். அவர்களது நூல்களை அதிகம் வாசிப்பவராகவும்இமாம் அவர்கள் இருந்தார்கள். அதேவேளை இமாம் கஸ்ஸாலியின் ‘இஹ்யாஉ உலூமித்தீன்’ நூலின் தாக்கமும் அவரது ரிஸாலாயே-நூரில் காணப்படுகிறது.

 

உஸ்தாத் நூர்ஸியவர்கள் இஸ்லாமை நவீன உலகிற்கேற்ப‌ அதனது அறிவியல் மொழியில் முன்வைக்க வேண்டுமெனக் கருதினார். நவீனஅறிவியல் எழுப்பும் ‘இறைவன்’ குறித்த ஐயங்கள் எவ்வித அடிப்படையும் அற்றவை என நிரூபித்தார். தன் சிந்தனைகளுக்கேற்பஇஸ்லாமியக் கலைகளையும் நவீன அறிவியல் கலைகளையும் ஒருங்கிணைத்த பாடத் திட்டம் ஒன்றை உருவாக்கி அதனை ‘மெத்ரெஸெதுஸெஹ்ரா’ எனும் பெயரில் செயலுருப்படுத்த‌ முனைந்த்தார். எனினும் துரதிர்ஷ்டவசமாக உரிய அனுசரணைகள் கிடைக்காது அது இறுதிவரைக்கும் கைகூடாமலேயே போயிற்று.

ஜாஹிலிய்யத் குறித்த அவரது நிலைப்பாடும் எளிமையானது ‘எவர் தன்னையும் தனது ரப்பையும் அறிந்துகொள்ளவில்லையோ அதுதான் ஜாஹிலிய்யத்’ என வரைவிலக்கணப்படுத்தினார். அவ்வகையில் அவர் எவரையும் அக்காலவெளியில் இஸ்லாமை விட்டும் தூரப்படுத்திப் பார்க்கவில்லை.

அரசியலில் நேரடியாக ஈடுபடுவதைப் பொறுத்தளவில் கூட நடுநிலை பேணுதலையே வலியுறுத்தினார். மதமின்றிய அரசியலை மறுத்த அதேநேரம் மதம் கலந்த அரசியல் நயவஞ்சகத்தனமானதாக மாறிவிட்டிருக்கிறது எனவும் அவர் சாடினார். அவரது சிந்தனையில் ஒரு பிரதான அம்சமாக இருந்தது முரண்பாடுகளை விட்டும் தூரமான சமூகமொன்றைத் தோற்றுவிப்பதாகும். அவ்வாறானதொரு சமூக அமைப்புத் தான் இஸ்லாம் வளர ஏதுவான சூழல் என ஆழமாக வலியுறுத்தினார். அவரது நம்பிக்கையைத் தான் நாம் இன்று உலகில் கண்டுகொண்டிருக்கிறோம். இஸ்லாமிய உலகின் மீது தொடர்ந்து மேற்குலகு முரண்பாடுகளைத் திணித்துக் கொண்டிருக்கிறது. இஸ்லாம் வளர ஏதுவான சூழல் மறுக்கப்படுக் கொண்டே இருக்கிறது.

டமஸ்கஸ் பிரசங்கம்

கி.வ. 1914 இலே ஸஈத் நூர்ஸியவர்கள் டமஸ்கஸ் உமைய்யா பள்ளிவாசலிலே வரலாற்றுப்புகழ் மிக்க உரையொன்றை நிகழ்த்தினார்கள். 10,000 பேருக்கு மேல் கலந்து கொண்டஇவ்வுரையிலே இஸ்லாமிய உலகைப் பீடித்திருந்த‌ நோய்களைத் தோலுரித்துக்காட்டினார். அடிமட்டத்திலிருந்து கட்டியெழுப்பப்படும் ஒரு சீர்திருத்தத்தை நோக்கிஅழைப்பு விடுத்தார். மேலும் அறிவுத்துறையில் அமைந்த ஓர் எழுச்சியை நோக்கிஅறைகூவல் விடுத்தார். இப்பிரசங்கம் ‘ஃகுத்பா ஷாமிய்யா’ எனும் பெயரில்பிரபலமடைந்து இன்று வரைக்கும் பதிப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இது’டமஸ்கஸ் பிரசங்கம்’ எனும் பெயரில் தமிழிலும் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்பிரசங்கம் இஸ்லாமிய எழுச்சி குறித்து அவருக்கிருந்த ஆழ்ந்த பிரக்ஞையை வெளிக்காட்டியது. அவ்வுரையில் இஸ்லாமிய உலகின் கல்வி முறைகள் அடிமட்டத்திலிருந்து சீர்திருத்தப்பட வேண்டுமென முழங்கினார். சமயமும் நவீன அறிவியலும் ஒன்றிணைத்த கல்வி வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தினார். அவரது‘மெத்ரெஸெது ஸெஹ்ரா’ திட்டத்தின் சாரம்சமாகவும் இதுவே விளங்கியது. நவீன அறிவியலைக் கற்றுக் கொள்வதனைக் காலத்தின் ஜிஹாத் என அடையாளப்படுத்தினார்.

ரிஸாலாயேநூர்

ஸஈத் நூர்ஸியின் செழுமை மிகு சிந்தனைகளை இன்றளவும் உலகிற்கு வழங்கிக்கொண்டிருப்பது அவரது ரிஸாலா-யே-நூர் தொகுப்புக்களாகும். புனித அல்குர்ஆனுக்கு விளக்கவுரையாக அமைந்த இத்தொகுப்புஅறிவியல் கண்ணோட்டத்துடன் அல்குர்ஆனை அணுகும் அமைப்பில் காணப்படுகிறது. உலகில் பெரும்பாலான மொழிகளுக்குப்பெயர்க்கப்பட்ட அல்குர்ஆன் விரிவுரையாகவும் இத்தொகுப்பே காணப்படுகிறது. எளிய கதைகளை உதாரனங் கூறுவதன் மூலமாகவும்பகுத்தறிவு  ரீதியான விவாதங்கள் என்பன மூலமாக அனைத்துத் தரப்பாருக்கும் புரியும் விதத்தில் ரிஸாலா-யே-நூரின் ன் பாணி அமைந்துகாணப்படும். இறுதியில் ஈமானை நோக்கியே திருப்பப்படும். அல்லாஹ்வின் இருப்பும் ஏகத்துவமும், ஈமானின் யதார்த்தம், கழா-கத்ர் கோட்பாடுகள், நுபுவ்வத், மரணத்தின் பின் மீளெழுப்பல், மானிட நம்பிக்கைக் கோட்பாடுகள், மலக்குமார்கள், முன்னைய இறைவேதங்கள் என ரிஸாலாக்களின் தலைப்புக்கள் விரிந்து செல்கின்றது.

அவ்வகையில் இக்களஞ்சியம் மனிதன் எங்கிருந்து வந்தான்? அவன் எங்கே போகவேண்டும்? விஞ்ஞானமும் மதமும் ஒன்றுபடுமா? மலக்குகள் போன்று மனிதனுக்கு அப்பாற்பட்ட படைப்புக்கள் உண்டா? மரணத்தின் பின்னும் வாழ்வு உண்டா? என்பன போன்ற நவீன மானுட கேள்விகளுக்குப் பதிலளிக்கவிழைகிறது.

ஸஈத் நூர்ஸியின் வாழ்வினதும் அவரது ரிஸாலாவினதும் சிந்தனைப் போக்கின்படி அவரது வாழ்வின் மூன்று முக்கிய கட்டங்களின் பாதிப்புக்களுக்கு உட்பட்டுச் செல்கிறது:

  • 1877-1925: ஆண்டுகளில் அவர் ஒரு சமூகப் போராளியாகத் துடிப்புடன் செயற்பட்ட காலங்கள்.
  • 1926-1949: ஆண்டுகள் அவர் ஒடுக்கப்பட்டும் நாடுகடத்தப்பட்டும் துன்புறுத்தல்களுக்குட்பட்டு வாழ்ந்த காலப் பகுதிகள்.
  • 1950-1960: அங்கீகரிக்கப்பட்ட மக்கள் தலைவராக இருந்த காலங்கள்.

இவற்றுள் பழைய ஸஈதிலிருந்து புதிய ஸஈதாக உருப்பெற்றதாகத் தன்னை உருவகிக்கும்  முதல் உலகப் போர் மற்றும் ஃகிலாபத் வீழ்ச்சியுடன் தொடர்ச்சியாக நாடுகடத்தப்பட்டுக் கொண்டேயிருந்த 1925-1950கள் வரையான காலமே ரிஸாலா-யே-நூரின் பொற்காலமாகும். இப்பகுதியில் தான் ரிஸாலாக்கள் முழு வீச்சுடன் சமூகத்தை அடைந்துகொண்டிருந்தன. ரிஸாலா-யே-நூர் குறித்துக்குறிப்பிடும் அறிஞர்கள்; இஸ்லாமுக்கு மிகவும் இருள் மயமான‌தாகக் காணப்பட்ட ஒரு காலப் பகுதியில் இஸ்லாத்தின் அடிப்படைநம்பிக்கைகளைப் பாதுகாக்கும்   பெரும் பணியைச் செய்த மாபெரும் பொக்கிஷம் என வர்ணிக்கின்றனர்.

இஸ்லாம் தொடர்பான எதுவும் பரப்பப்படுவது குற்றமாகக் கருதப்பட்ட முஸ்தபா கமாலின் கொடிய மதவிரோத ஆட்சியின் கீழால் உஸ்தாத் பதீயுஸ்ஸமான் ஸஈத் நூர்ஸியால் எழுதப்படும் ரிஸாலாக்களின் கையெழுத்துப் பிரதிகள் கீழ்மட்ட நூர் வாசகர்களுக்கு எடுத்துச் செல்லப்படும் பாணி சுவாரசியம் மிகுந்தது. அச்சுப் பிரதியெடுக்கத் தடையென்ற காரணத்தால் கீழ்மட்டங்களில் அது கையெழுத்தாகவே பிரதிபண்ணப்படும். பின்னர் அது நூர்ஜூக்கள் எனப்படும் கீழ்மட்ட மாணவர்கள் வரை தொடர்ந்தேச்சையாகப் பிரதிபண்ணப்பட்டுக்கொண்டே செல்லும். இவ்வாறு அது சிலசமயங்களில் 60,000 வரையான பிரதிகள் வரைக்கும் பிரதிகள் எடுக்கப்பட்டதாகக் குறிப்புக்கள் காணப்படுகின்றன.

நாம் ரிஸாலா-யே-நூர் குறித்து நோக்குவதாயின் அதனை முக்கியமாக 5 பகுதிகளைக் கொண்ட ஒரு களஞ்சியமாக நோக்கலாம். அந்த ஒவ்வொரு பகுதி குறித்தும் மிகச்சுருக்கமாக நோக்குவோம்.

  1. வார்த்தைகள் – The Words – கலிமாத்சஸ்லர்

இது 33 உப பிரிவுகள் கொண்டது. இஸ்லாமிய நம்பிக்கைகள், அதன்பால் மனிதனுக்குள்ள தேவைகள் குறித்துப் பேசுகிறது. இப்பகுதி கலந்துரையாடல், விவாதம், கேள்வி-பதில் என சுவாரசியமாகச் செல்கின்றது.

  1. கடிதங்கள் – Letters –மக்தூபாத்மெக்தூபாத்

இது அவரது மாணவர்களுடனான கடிதப் பரிமாற்றத்துக்கூடான உரையாடல்களை உள்ளடக்கிய சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் பகுதியாகும். இப்பகுதியில் பிரதானமாக மரணம், நபித்துவம், பெற்றோருக்கு உபகாரம் புரிதல், சகோதரத்துவம் குறித்தும் பேசுகின்றது.குறிப்பாக 19 வது பகுதி 300க்கும் மேற்பட்ட தூதர்(ஸல்) அவர்களது அற்புதங்களைக் குறித்துப் பேசுகின்றது.

  1. ஒளிக்கதிர்கள் –The Rays – ஷெஆஆத்ஷுஆலர்

ரிஸாலா-யே-நூரின் இதயம் எனப்படும் பகுதி இதுதான். இங்கு ரிஸாலாக்கள் எழுதபட்டதன் அடிப்படை நோக்கங்கள் விளக்கப்படுகின்றது.

  1. மின்னல்கள்– The Flashes – லெம்ஆத் – லெம்ஆலர்

பிரார்த்தனைகளை உள்ளடக்கிய பகுதியாகும். யூனுஸ்(அலை) மற்றும் அய்யூப்(அலை) ஆகியோரின் சோதனைக் கால பிரார்த்தனைகள் குறிப்பிடத்தக்கவை. இப்பகுதியில் நோயாளர்கள், வயோதிபர்கள் என பிணிகளால் பாதிக்கப்பட்டோருக்கான ஆறுதல் வார்த்தைகளாகக் காணப்படுகின்றன.

  1. அற்புதத்தின் அடையாளங்கள் Signs of Miraculousness – இஷாராதுல் இஃஜாஸ்இஷாராதுல் இஃஜாஸ்

இது சூரத்துல் பாத்திஹாவுக்கான விளக்கவுரை, பிஸ்மில்லாஹ்வுக்கான விளக்கம், சூரத்துல் பகராவின் முதல் 33 வசன்ங்களுக்கான விளக்கங்கள், அல்குர்ஆனின் இலக்குகள், மறுமை நம்பிக்கையோடு தொடர்பான விடயங்கள் மற்றும் முக்கியமாக நாத்திகத்துக்கெதிராக அறைகூவல் விடுக்கும் பகுதி என விரிந்த பகுதியாக அமைந்திருக்கிறது.

பதீயுஸ்ஸமானின் தஃவா தொடர்பான கருத்துக்களிலிருந்து

அவர் தஃவாவை ‘மார்க்கத்தின் ஏவல்களுக்குக் கட்டுப்படுவதையும் இஸ்லாம் அளிக்கும் நிரந்தர சந்தோசத்தை மனிதனுக்கு அளிப்பதற்கும் அழைப்புவிடுத்தல்’ என வரைவிலக்கணப்படுத்தினார். அதனை அவர் அல்குர்ஆனை அடிப்படையாகக் கொண்டே செயல்பட்டார். தஃவாவின் நோக்கமாக அவர் ‘படைப்பாளனையும் அவனது ஏகத்துவத்தையும் அறிவுபூர்வமாகவும் தர்க்க ரீதியாகவும் நிறுவுதல்’ என அடையாளம் செய்தார்.

இஸ்லாமியப் பணியாளார்கள் தமக்குள் பிளவுறுவதையும் அவற்றுக்கான தீர்வினையும் இவ்வாறு அடையாளப்படுத்தினார்:

  • சமூக அங்கீகாரம் அவர்களது இலக்காக மாறிவிடுகின்றமை – வெகுமதியை அல்லாஹ்விடம் மட்டுமே எதிர்பார்த்தல்.
  • மனோ இச்சையின்படி தான் மட்டுமே சரி என செயல்படல் – முரண்பாட்டில் உடன்பாடு கண்டு செயல்படல்.
  • உன்னத நோக்கங்களுக்குத் தவறான வழிமுறைகள் பிரயோகிக்கப்படுகின்றமை – அனத்து சந்தர்ப்பங்களிலும் உளத்தூய்மையை ஏற்படுத்திக் கொள்ளல்.
  • மற்றவர்கள் பற்றிய தூய மதிப்பீடின்மை – பொதுப்புள்ளிகளை இனங்காணல்.
  • ஆதிக்க மனப்பாங்கு – அல்குர்ஆன் கூறுகிறது: “நீங்கள் நன்மையான காரியங்களிலும் இறையச்சத்திலும் பரஸ்பரம் ஒத்துழைத்துக் கொள்ளுங்கள். மேலும் பாவம்மான காரியங்களிலும் வன்மத்திலும் ஒத்துழைக்கவேண்டாம். மேலும் அல்லாஹ்வுக்குக் கட்டுபடுங்கள்”
  • உலக பிரதிபலன்களில் மட்டும் கவனம் குவிதல் – தூதர்(ஸல்) மற்றும் ஸஹாபாக்களின் முன்மாதிரியைப் பின்பற்றுதல்.
  • தாராள மனம், மன்னிக்கும் மனம் இன்மை – மற்றவர்களின் பலவீன நிலையை உணர்தலோடு தன்னை சுயவிமர்சனம் செய்துகொள்ளல் மற்றும் மறுமைப் பிரதிபலனை மட்டும் எதிர்பார்த்தல்.

உஸ்தாத் பதியுஸ்ஸமானின் இறுதிக்காலம்

உஸ்தாத் அவர்களின் இறுதிக் காலத்தைப் பொறுத்தளவில் துருக்கியிலே கொடிய மதச்சார்பின்மை கோலோச்சிய கமாலிஸ அரசு விடைபெற்று அத்னான் மந்திரீஸியின் ஜனநாயகக் கட்சி ஆட்சிபீடமேறியிருந்த காலமாகும். தேசியவாதியாக இருந்த அத்னான் மந்திரீஸி பல்வேறுபட்ட சிந்தனைப் போக்குகளுக்கும் இடமளிப்பவராக இருந்தார். இதனால் இவரது பிரசாரப் பணிகளுக்கு இருந்த கடுமையான தடைகள் தளர்வடைந்தன. வீண் வழக்குகள் அனைத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டார். அவரது எழுத்துக்களை அச்சுக்குக் கொண்டுசெல்லும் வாய்ப்புக்களும் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் 1960 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ம் திகதி தனது 83 வது வயதில் உஸ்தாத் பதீயுஸ்ஸமான் ஸஈத் நூர்ஸி அவர்கள்வபாத்தானார்கள்.

அற்புத மனிதர் ஷெய்ஃக் யூஸுப் அல்கர்ளாவி

1908161_890781667621565_5098629369667684524_n

இஸ்லாமிய உலகில் மட்டுமல்லாது முஸ்லிமல்லாதவர்கள் மத்தியிலும்தான் அறிமுகம் தேவையற்றவர் அல்லாமா யூஸுஃப் அல்கர்ளாவியவர்கள். இஸ்லாமிய உலகின் மிகப்பெரும் அறிவாளுமை அவர்கள்; பல நூற்றுக்கணக்கான நூல்கள்,ஆயிரக்கணக்கான ஃகுத்பாக்கள், ஆய்வு மாநாடுகள், கட்டுரைகள் என நவீன காலத்தில் இஸ்லாமுக்கு, இஸ்லாமிய சிந்தனைக்கு மிகப்பெரும் பங்களித்தவர்; அவர் விட்டுவைத்த துறையேதுமில்லை எனுமளவுக்கு இஸ்லாமியக் கலைகள் ஒவ்வொன்றிலும் துறைபோந்தவர்; முஜ்தஹித் முத்லக் எனும் தரத்தை எட்டியவர்; சமகாலத்திலேயே அவரது மாணவர்களால் இமாம் என அழைக்கப்படும் அளவுக்கு இஸ்லாமியக் கலைகளில் பன்முக வல்லுநர் அவர்; இஸ்லாமிய அறிஞர்களுக்கான சர்வதேசப் பேரவையின் தலைவர் அவர்.

அத்தகைய மிகப்பெரும் இஸ்லாமிய ஆளுமையை கடந்த வாரம் சர்வதேசப் பொலீஸ் என அறியப்படும் ‘இண்டர்போல்’இனால் கைது செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்தோடு அவர் தலைவராக இருக்கும் இஸ்லாமிய அறிஞர்களுக்கான சர்வதேசப் பேரவையும் சில நாட்களுக்கு முன்னால் அமெரிக்க அடிவருடி டுபாய் மன்னர்க் கும்பலினால் பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டது. முழு உலகமும் தலைகுனிய வேண்டிய நிகழ்வுகள் இவை. இவற்றைத் தொடர்ந்து இஸ்லாமிய அறிஞர்களுக்கான சர்வதேசப் பேரவையின் முகநூல் பக்கத்திலே ஷெய்ஃக் அல்கர்ளாவி அவர்களது அலுவலகப் பணியாளர் இஸ்மாஈல் இப்ராஹீம் இமாம் கர்ளாவி அவர்களது உயர்ந்த மனிதப் பண்புகள் குறித்து ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். வார்த்தைக்கு வார்த்தை கண்களில் நீர் பொசியச் செய்யும் ஆக்கம் அது. இஸ்லாமிய அறிஞராகவும் இஸ்லாமிய சிந்தனையாளராகவும் எம்மத்தியில் அறியப்பட்டிருக்கும் அல்லாமா கர்ளாவியின் இன்னொரு அழகிய பக்கத்தை தமிழ் பேசும் உலகு அறிவதற்காகவேண்டி அந்த ஆக்கத்தினை மொழி பெயர்த்து வழங்குகிறோம்.

 

இது அல்லாஹ் ஒருவனுக்காக மாத்திரமே அளிக்கப்படும் சத்தியத்தின் வாக்குமூலம். இதனை என்னிடம் ஷெய்ஃக் கர்ளாவியவர்கள் இதனை எழுதித் தருமாறு அவர் என்னிடம் வேண்டவும் இல்லை. நான் அவருக்கு இதனைக் கொடுத்த பின்பே தவிர அவர் இது பற்றி அறிந்திருக்கவுமில்லை. பின்பு அவர் அவரதுகண்களிலிருந்து நீர்த்துளிகள் கொட்டக் கொட்ட இதனை வாசித்தார்.

யூஸுஃப் அல்கர்ளாவி அவர்கள் இக்காலத்தின் ஃபகீஹ். முஜாஹித்களுக்கெல்லாம் அடையாளப் புருஷர். முரப்பிகளுக்கு அவர் ஒரு முன்மாதிரி. தாஈக்களின்தலைவர். ஃபுகஹாக்களின் தாஈ. நடுநிலைமையின் சிகரம். பல்துறைவயப்பட்ட திறமைகளுக்குச் சொந்தக்காரர். பல் பரிமாணம் கொண்ட ஆற்றல்களுடையவர். மிகஅலாதியாக ஃகுத்பாக்களை மேற்கொள்ளக் கூடிய அற்புத ஃகதீப் அவர். எந்தத் துறையையும் விட்டுவைக்காது நூல்களை எழுதியவர். அற்புதமான புதுமைக் கவிஞர்அவர். உலகம் முழுமைக்குமான ஆளுமையை உள்ளடக்கியிருக்கும் ஜாம்பவான் அவர்.

ஃபகீஹுக்குரிய அறிவுப்பார்வை அவரிடம் உண்டு. ஒரு தத்துவஞானிக்குரிய சிந்தனையும் அவரிடம் உண்டு. கவிதையுள்ளமும் அவரிடம் உண்டு. ஓர்இலக்கியவாதியின் புலமையும் அவரிடம் இருக்கிறது. ஒரு முஃமினுக்கு வேண்டிய பெருமிதமும் அவரிடத்தில் இருக்கிறது. ஒரு யுத்த வீரனுக்குரிய ஆத்மார்த்தமும்அவரிடம் இருக்கிறது. விரிந்த பார்வை கொண்டவர். இம்மார்க்கத்தினதும் இந்த உம்மத்தினதும் தேட்டங்களைத் தன்னிலே சுமந்தவர் அவர். ஈமானிலேபலமிக்கவர். தனது வேலைகளிலே கடின சிரத்தை எடுப்பவர். உம்மத்தினால் மிகுந்த நேசம் பாராட்டப்படுபவர். மனிதர்களை சம்பாதிது வைத்திருப்பவர்.அவர்களுக்குரிய இடத்தைக் கொடுத்து நெருங்கி இதமாகப் பழகுபவர்; அவர்களும் அவரோடு இதமாகப் பழகுவர். மக்களை அவர் விரும்புவார்; மக்களும் அவரைவிரும்புகின்றனர். அவர் செயற்களத்திலுள்ள உலகப்பற்றற்ற ஓர் அறிவாளுமை.

நான் ஒருபோதும் சட்டத்துறை அல்ஃபகீஹ் அல்லாமா யூஸுஃப் அல்கர்ளாவி குறித்தோ அல்லது சிந்தனையாளர் அல்கர்ளாவி குறித்தோ பேசப்போவதில்லை. நான்பேசப்போவதைப் பொறுத்தளவில் அது மக்களில் அதிகமானோரிடம் ஒரு ஆளுமை குறித்து மறைக்கப்பட்டிருக்கும், அல்லது மக்களுக்குத் தெரியாத பக்கங்களுள்ஒரு பக்கம் குறித்துத் தான். அதுதான் யூஸுஃப் அல்கர்ளாவி அவர்களை ஒரு மனிதன் என்ற வகையில் அறிந்துகொள்வதுதான்.

கர்ளாவியவர்கள் தன்னுடன் பழகுபவர்களுடன் எவ்வாறு பழகுவார் என்பதைத்தான் நான் பேசப் போகிறேன். ஒரு முறை கர்ளாவி அவர்கள் தனது அலுவலகத்தின்முன்னாள் பொறுப்பாளருடன் கடுமையாகக் கோப்பட்டுவிட்டார். அவர்தான் சகோதரர் வலீத் அபூ நஜா பின்பு நாம் அஸர் தொழச் சென்றோம். எமது ஷெய்ஃக்அவர்கள் அஸ்ரைத் தொழுது முடித்த்தும் சகோதரர் வலீதிடம் மன்னிப்புக் கோரினார். பின்பு அவரது நெற்றியை முத்தமிட நாடினார். (அரபுகளித்தில் தம்மை விடஉயர்ந்த அந்தஸ்திலுள்ளோரின் நெற்றியை முத்தமிடும் வழக்கம் உள்ளது. இங்கு ஷெய்ஃக் கர்ளாவி அவர்களின் பணிவைத் தான் குறிக்கிறது. –மொழிபெயர்ப்பாளர்) என்றாலும் சகோதரர் வலீத் அதற்கு உடன்படவில்லை. அப்போது எமது ஷெய்கவர்கள் அவரது நெற்றியை முத்தமிட்டே ஆக வேண்டுமெனவிடாப்பிடியாக அவர் பின்னாலேயே செல்ல ஆரம்பித்தார். அவரும் மறுத்துக் கொண்டேயிருந்தார்.

அப்போது அங்கே ஷெய்ஃக் மஜித் மக்கி அவர்களும் உடனிருந்தார். அப்போது அவர் “அவர் கேட்பதனைப் போலச் செய்து விடுவது நீங்கள் பெரியோரை மதித்தல் என்பதற்காக செய்வதை விட சிறந்தது” என வலீத் அவர்களுக்கு அறிவுரை கூறினார். உடனடியாக வலீத் அவர்களோ “நான் அல்லாஹ் மீது சத்தியம் செய்துசொல்கிறேன்… நீங்கள் என் நெற்றியை முத்தமிட்டால் நான் உங்களது காலை நிச்சயம் முத்தமிடுவேன். நாம் உங்களது மாணவர்கள்; உங்களது குழந்தைகள் தானேநாங்கள்” என்றுவிட்டார்கள். அப்போதுதான் ஷெய்ஃகவர்களின் பணிவினை நீங்கள் பார்க்க வேண்டும். அவர் எவ்வாறு தனக்கு நெருக்கமானவர்களுடன்உள்ளத்தைப் பிணைத்திருந்தார்கள்?

யாராக இருந்தாலும் மன்னிப்புக் கேட்பதில் எந்த சங்கடமும் அவருக்கு இருந்ததில்லை.  ஆனால் அவர் அதற்கும் மேலால் மன்னிப்புக் கேட்பதில் சற்று அளவு கடந்து விட்டார். இது பணிவுள்ள மனிதனிடத்திலிருந்தே அன்றி வேறு யாரிடமிருந்தும் வெளிவராத செயல்பாடுதான். இது மட்டுமல்லாது அவர் ஒரு போதும்தன்னைச் சூழவிருப்பவர்களை விட தன்னை மேன்மையாகக் கருதியதேயில்லை.

இன்னொரு சம்பவம் அவரது வாகன ஓட்டுநருடன் இடம்பெற்றது. ஒரு முறை உமர் இப்னுல் ஃகத்தாப் பள்ளிவாசலுக்கு ஃகுத்பாவுக்குச் சென்றுகொண்டிருந்த சமயம்… இடையில் ஃகுத்பாவுக்கு விரைவாகச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் வேகமாகப் போகுமாறு கொஞ்சம் சத்தமாகவே கூறிவிட்டார். முடிவாக ஷெய்ஃக் கர்ளாவியவர்கள் ஃகுத்பாவை முடித்துக்கொண்டு திரும்பி வந்தார். அப்போது வாகன ஓட்டுநரின் தோளில் தட்டிக் கொடுத்துவிட்டு அவரது நெற்றியையும் முகர்ந்தார்; மன்னித்துக் கொள்ளுமாறு வேண்டியதோடு தன் மேல் கோபப்பட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

இவ்வாறெல்லாம் நடந்து கொள்வதற்கு அழகிய பண்பாடுகளும் திட எண்ணமும் கொண்ட மனிதர்களாலேயே அன்றி வேறு யாராலும் முடியாது.

உங்களுடன் ஷெய்ஃக் கர்ளாவியவர்கள் ஏதும் தேவைக்குத் தொடர்பு கொண்டார்கள் எனின் ஒரு போதும் ஸலாம் சொல்லாமல் தனது தேவையைக் கூற மாட்டார்.மேலும் அவரது தேவையை நிறைவேற்ற முன்னால் உங்கள் குடும்பம் குறித்தும் விசாரித்துக் கொள்ளத் தவற மாட்டார். அவரது அலுவலகப் பணியாளர்களோ மாணவர்களுள் ஒருவரோ நோய்வாய்ப்பட்டு விட்டால் அவர்களோடு உடனடியாகவே தொடர்பு கொண்டு நோய் விசாரிப்பார். தொடர்ந்தும் குணமடையும் வரைக்கும் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துக் கொண்டேதான் இருப்பார். நோயாளி வைத்தியசாலையில் என்றால் அங்கு சென்று பார்த்துவிட்டுத் தான் வருவார்.இவ்வாறான ஒரு சம்பவம் அவரது அலுவலகப் பணியாளரின் விடயத்திலும் நிகழ்ந்திருக்கிறது. அதே போல் அவர் அறிந்தவர்கள் பலருக்கும் அவரது மாணாவர்களில் அநேகருக்கும் இந்த அனுபவம் இருக்கிறது.

அவர் தன் சகபாடிகளின் அனைத்து சந்தோசங்களிலும் பங்கெடுப்பார். ஒரு முறை எம் அலுவலக சகாவான ஷெய்ஃக் முஹம்மத் முர்ஸி அவர்கள் தன் மகளின் திருமணத்துக்காக ஷெய்ஃக் கர்ளாவி அவர்களை அழைத்திருந்தார். ஆனாலும் ஷெய்ஃக் முர்ஸி திருமண வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்ததனால் நேரடியாகவே ஷெய்ஃக் கர்ளாவி அவர்களுக்கு திருமண அழைப்பைக் கொடுக்க முடியவில்லை. அதனால் அலுவலகப் பொறுப்பாளர் மூலமாகவே அழைப்பை விடுத்திருந்தார்கள். ஷெய்ஃக் கர்ளாவி அவர்கள் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார்கள். திருமணாத்துக்கும் சென்றார்கள். தானே முன்னின்று திருமணத்தை நடாத்தியும் வைத்தார்கள். சகஜமாக அவர்களோடு நடந்துகொண்டார்கள்.

ஏதாவது ஒரு பிரயாணத்தில் உங்களுக்கு அவரோடு பயணிக்கக் கிடைத்தால் அதற்கு மேலால் ஒன்றுமில்லையென நீங்கள் எண்ணும் அளவுக்கு உங்களை முற்றாகவே அவர் பொறுப்பேற்று பயணிப்பதாக நீங்கள் உணர்வீர்கள். நீங்கள் சாப்பிடும் வரைக்கும் அவர் சாப்பிடவும் மாட்டார். உங்களுக்கு முன்னாலேயே அவரது வேலை முடிந்து விட்டால் உங்களுக்காகக் காத்திருப்பார். அவர் உங்களுக்கு ஆலோசனைகளை  வழங்குவார். அவர் கண்களை விட்டும் நீங்கள் மறைந்திருந்தால் உங்களை ‘ஷெய்ஃக்… ஷெய்ஃக்…’ என்று மதிப்பு மிக்க வார்த்தைகளைக் கூறி அழைத்தவராகத்தான் தேடுவார். உங்களைப் பற்றித் தான் சுற்றியுள்ளவர்களிடம் வினவுவார். மக்களில் நீங்கள் தான் அவருக்கு நெருக்கமானவராக இருப்பீர்கள்.

ஒவ்வொரு முறையும் நான் அவரோடு நாட்டுக்கு நாடு பயணங்கள் செல்லும் போது ஒவ்வொரு நாட்டை அடைந்த பின்னரும் அவர் இவ்வாறு தான் எனக்குக் கூறுவார்: “நான் உங்களைக் கோபப்படுத்தி இருந்தாலோ நோவித்திருந்தாலோ தயவுசெய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்!”

ஒரு முறை நான் அவரோடு மதீனா நகரிலே புனித ரவ்ழா ஷரீஃபுக்கு அருகிலிருக்கும் போது அவருக்காகப் பிரார்த்திக்குமாறு என்னை வேண்டினார், அதேநேரம் அவர் எனக்காகவும்தான் அவர் அறிந்திருந்த குடும்பத்தவர்கள், நண்பர்கள், மாணவர்கள், அயலவர்கள், பணியாளர்கள், வாகன ஓட்டுநர் வரைக்கும் மட்டுமல்லாமல் மரணித்தவர்கள் உயிருடன் இருப்பவர்கள் என அனைவருக்காகவும் தான் பிரார்த்தனை செய்தவராக இருந்தார்.

ஒருமுறை நாம் உம்ராவுக்குச் சென்றிருந்தோம். உம்ரா கிரியைகளை நிறைவேற்றியதன் பின்பு ஒரு ஹோட்டல் அறையொன்றில் தங்கியிருந்தோம். அப்போது அவர்“இப்போது நீங்கள் வீட்டுக்குச் சென்று குடும்பத்தாருடன் இணைந்து கொள்ளுங்கள்” என என்னிடம் கூறினார். அப்போது நான் “இல்லை… நான் உங்களோடேயே தங்கியிருந்து பிறகு வீட்டுக்குச் செல்கிறேனே” எனக் கூறினேன். அதற்கவர் “இல்லையில்லை… நீங்கள் போகத்தான் வேண்டும். போய் வீட்டாரைத் தரிசிக்கத் தான் வேண்டும். நீங்கள் இளைஞர் தானே… வீட்டாரைப் போய் சந்தித்துக் குதூகலாமாக இருங்கள்” எனக் கண்டிப்புடன் கூறிவிட்டார்.

இன்னொரு முறையும் அவரோடு உம்ராவுக்குச் சென்றிருந்த சமயம் அவரோடேயே தொடர்ந்தும் இருந்தேன். அதன் போது நாம் கடந்த உம்ராவின் போது சந்தித்த ஃபிக்ஹுப் பிரச்சினையொன்று தொடர்பாக நாம் கலந்துரையாடிக் கொண்டிருந்தோம். உடனடியாகவே அவ்விட்த்தில் அது தொடர்பான தன்னுடைய ஃபிக்ஹு நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். நான் கூறிய கருத்தை அவர் ஏற்றுக் கொண்டார். கர்ளாவி அவர்களது மாணவர்களுள் ஒருவரான சகோதரர் ஷெய்ஃக் ஸாலிஹை ஒரு முறை ஜித்தாவில் சந்தித்த போது அவர் குறித்த ஃபிக்ஹுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது ஏன் என வினவிவிட்டார். அதற்கு ஷெய்ஃகவர்களோ “நான் இஸ்மாஈலுடைய நிலைப்பாட்டை சரிகண்டு ஏற்றிருக்கிறேன்” என்றார்கள்.

இன்னொரு முறை எனது மனைவி ஷெய்ஃக் கர்ளாவி அவர்களை சந்திக்க வேண்டும் என்ற விருப்பத்தை என்னிடம் சொல்லியிருந்தார். நானும் ஷெய்ஃக் அவர்களிடம் இதற்கென ஒரு நேரத்தை ஒதுக்கித் தருமாறு அவரிடம் கோரினேன். அவர்களும் இதனை வரவேற்று முகமலர்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்கள்.அத்தோடு எமக்கு எந்த நேரத்தில் வர முடியுமென்றும் கேட்டுக் கொண்டார்கள். எனவே நானும் மனைவியும் அலுவலகத்துக்குச் சென்றோம். அவர் என்னையும் என் மனைவியையும் விருந்துபசாரத்துடனேயே அவரது வேலைப் பளு மிகுந்த நேரத்திலும் வரவேற்கத் தயாராகினார்கள். நான் ஒவ்வொரு முறையும் விடை பெற்றுப் போக முயற்சித்த போதிலும் அதற்கு உடன்பட மறுத்துவிட்டார்கள்.  அத்தோடு “இங்கு உட்காருங்கள்” எனக் கூறியதோடு எனது மனைவியிடம் “இவர் உங்களுக்கு ஏதேனும் சொன்னால் என்னிடமே நேரடியாகக் கூறிவிடுங்கள். நான் உங்களது தந்தையின் ஸ்தானத்திலிருக்கிறேன்” என்றுவிட்டார்கள். எனது மனைவி அவரது வார்த்தைகளினால் அளப்பரிய சந்தோசம் அடைந்தார்.

இவர்தான் ஷெய்ஃக் அல்கர்ளாவி. அறிவு மன்றங்கள் ஒவ்வொரு விவகாரத்திலும் அவரது கருத்தை அறிவதற்காகப் போட்டிபோட்டுக் கொள்ளும். அவரது செய்திகளைப் பத்திரிகைகள் முன்பக்கத்திலேயே பிரசுரிக்கும். ஓர் அற்புத மனிதர்; மென்மையானவர்; மக்களால் விரும்பப்படுபவர். தனது மாணவர்களிடமே மன்னிப்புக் கேட்கிறார்; தனது வாகன ஓட்டுநரின் நெற்றியை முகர்கிறார்; நோயாளிகளைத் தேடிச் சென்று நலம் விசாரிக்கிறார்; நண்பர்களுக்காக, நண்பர்களின் குழந்தைகளுக்காகப் பிரார்த்திக்கிறார்; தன்னோடு பணிபுரிபவர்களுக்காக, அவர்களின் குழந்தைகளுக்காகப் பிரார்த்திக்கிறார்.

எங்களுடைய ஷெய்ஃக் அவர்களே! உங்களை அல்லாஹ் பொருந்திக்கொள்ளவேண்டும்; உங்களது ஆயுளை அல்லாஹ் நீடித்து வைக்கவேண்டும்; உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் எந்தப் பிரிவையும் அல்லாஹ் ஏற்படுத்தாமலிருக்க வேண்டும்.

மூல ஆக்கம்: இஸ்மாஈல் இப்ராஹீம் (ஷெய்ஃக் கர்ளாவியின் மாணவர்களுள் ஒருவர். மற்றும் அவரது அலுவலக உத்தியோகத்தர்)

தமிழில்: எம்.எஸ்.எம். ஸியாப்

இமாம் ஹஸன் அல்பன்னா – வாழ்வும் சிந்தனையும்

image

ஒரு முறை முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் உஸ்ரா கட்டமைப்புக்கள் குறித்து ஒரு சகோதரருக்குக் கூறி முடித்ததும், மலைத்தவராக ‘எவ்வாறு தனி மனிதனாக நின்று இத்தகைய அற்புதமான திட்டத்தை வகுத்து மீளவும் உலகில் இஸ்லாமை நிலைநாட்டத் தன்னை அர்ப்பணித்திருக்கிறார். அவருக்கு எந்தளவு அரிய அறிவுப் பின்னணி இருந்திருக்கவேண்டும்! அவருக்கு எந்தளவுக்கு அல்லாஹ்வின் உதவியும் வழிகாட்டலும் இருந்திருக்கிறது! ஸுப்ஹானல்லாஹ்’ என வியந்தார் அவர்.

இமாமவர்கள் பற்றி “இஸ்லாமிய உலகம் வேண்டிநின்ற தக்கதொரு தருணத்தில் வந்து வழிகாட்டி முழு உலகும் இழந்துவிட்ட ஓர் அற்புதத் தலைவர் அவர்.” என்கிறார் ஹகீமுல் இஸ்லாம் என்ற சிறப்புப் பெயர்கொண்ட ஷெய்க் ஜவ்ஹர் அல்தந்தாவி அவர்கள். எமது இமாம் அஷ்ஷஹீத் ஹஸன் அல்பன்னா யூத, அமெரிக்கக் கூலிகளால் கெய்ரோ வீதியொன்றில் சுட்டுக் கொல்லப்பட்ட தினம் பெப்ரவரி 12. உலகில் மீளவும் இஸ்லாம் எழுந்து நிற்பது கண்ட பயந்தாங்கொள்ளிகள் அதன் நிறுவனர் ஒருவரைப் படுகொலை செய்துவிட்டதும் முழு இஸ்லாமிய சிந்தனையையும் குழிதோண்டிப் புதைத்துவிட்டதாய்க் கொண்டாடிக் கூத்தாடினார்கள். ஆனால் ஒரு நிறுவனரை அழித்து விடுவது சிந்தனையை அழித்துவிடுவதாகாது என்பதற்கு இன்றைய உலகு கண்டுகொண்டிருக்கும் அற்புத பண்பாடுகொண்ட அமைப்பான உலக முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு ஒன்றே சான்று.

இமாம் பன்னா வாழ்ந்த 42 வருட வாழ்க்கைக்குள்ளால் அவர் இவ்வுலகுக்குத் தந்து சென்றவை ஏராளம். ஒரு முறை இமாம் பன்னாவுக்கும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் அப்போதைய மாணவர் பிரிவுப் பொறுப்பாளராக இருந்த உஸ்தாத் மன்னாஉல் கத்தானுக்கும் இடையில் இடம்பெற்ற உரையாடல் பிரசித்தமானது. மன்னாஉல் கத்தான் அவர்கள் இமாம் பன்னாவுக்கு இருக்கும் உயிர் அச்சுறுத்தல் குறித்து அறிவுறுத்தி சற்று பணியிலிருந்து ஒதுங்கி, சமூகத்தை விட்டும் மறைந்திருக்குமாறு வேண்டுகிறார். அப்போது அதனை மறுத்துவிட்டு இமாமவர்கள் “இல்லை…! நான் மக்களை விட்டும் ஒதுங்கி மரணத்தைக் கண்டு ஓடிவிட மாட்டேன். எனது பணி இத்தோடு முடிந்து விட்டதென்றால் அல்லாஹ் என்னை எடுத்துக் கொள்வான். இனிமேல் நான் வாழ்வதால் உலகிற்குப் புதிதாக எதுவும் கிடைத்துவிட மாட்டாது.” என உறுதிபடத் தெரிவித்து விடுகிறார்கள். அதற்கு அடுத்தநாளே இமாம் அவர்கள் ஷஹீத் ஆக்கப்பட்டதாக வரலாறு பதிவு செய்கிறது.

கி.வ. 1906 ஆம் ஆண்டு எகிப்தின் இஸ்மாஈலிய்யா பிராந்தியத்தில் மஹ்மூதிய்யா எனும் கிராமத்தில் பிறக்கும் இமாம் ஹஸன் அல்பன்னா அவர்கள் சிறுவயதிலேயே அல்குர்ஆனை மனனம் செய்துவிடுகிறார்கள். பால்ய பருவத்திலேயே தலைமைத்துவப் பண்புகளோடு இருக்கும் அவர்கள் தனது 10 வது வயதில் தன் வயது நண்பர்களுடன் இணைந்து ‘ஜம்இய்யத்து மன்இல் முஹர்ரமாத்’ (ஹராமானவற்றைத் தடுக்கும் சங்கம்) எனும் இயக்கம் ஒன்றைத் தொடங்குகிறார். அதன் மூலமாக மக்களுக்கு ஹராம்கள் குறித்து அறிவுறுத்தத் தொடங்குகிறார். கடிதங்கள் அனுப்பி அவர்களை நேர்வழிப்படுத்தும் முயற்சிக்கிறார். ஆனால் மக்கள் எங்கிருந்து கடிதம் வருகிறது என அறிந்திருக்கவே இல்லை.

இதன்போது நடந்த சம்பவமொன்று சுவாரஷியமானது. இமாம் பன்னா அவர்கள் சிறுவயதில் தரீக்கா ஷெய்க் ஒருவரிடம் பயிற்சி பெற்று வந்தார்கள். அவரது பெயர் ஷெய்க் முஹம்மத் ஸஹ்ரான்; அவர் ஒருமுறை தொழுகையிலே சிறு தவறொன்றை விட்டுவிடுகிறார். அவருக்கும் கடிதம் வருகிறது. கடிதத்தில் ஷெய்க் ஒருவராக இருக்கும் நீங்கள் இத்தவற்றைக் கூட செய்துவிடக்கூடாது என எழுதப்பட்டிருக்கிறது. அப்போது அவர் சுட்டிக்காட்டப்பட்ட விடயம் குறித்து ஃபிக்ஹு ரீதியாக அறிந்திருக்கவில்லை. எனவே அவர் மாணவர்களிடத்தில் வினவுகிறார். அப்போது சிறுவர் பன்னா அவர்கள் குறித்த மஸ்அலா தொடர்பில் பெரும் கலைக் களஞ்சியக் கருவூலமான ஃபத்ஹுல் பாரியின் விளக்கவுரையிலிருந்து தனது ஷெய்கிற்கு வாசித்துக் காட்டுகிறார்கள். இவ்வாறு சிறு வயதிலேயே அபார ஆற்றலும் ஆழ்ந்த வாசிப்பும் தலைமைத்துவப் பண்புகளும் கொண்டவராக இமாம் பன்னா இருந்து வந்தார்கள்.

இமாம் அவர்களுக்கு இப்பின்னணிகள் கிடைக்க அவரது வீட்டு அறிவுச் சூழலும் வாய்ப்பாயிற்று. அவரது தந்தை ஷெய்க் அப்துர் ரஹ்மான் அல்பன்னா அவ்ர்கள் ஒரு முஹத்திஸாகவும் தேர்ந்த வாசிப்பாளராகவும் இருந்தார்கள். அன்னவர்கள் இமாம் அஹ்மத் பின் ஹன்பல்(ரஹ்) அவர்களின் முஸ்னதுக்கு விளக்கவுரையெழுதி ஃபிக்ஹுத் தலைப்புகள் வாரியாகப் பிரித்து 40,000 நபிமொழிகள் கொண்ட அக்களஞ்சியத்தைப் பயனாளர்களுக்கு மேலும் இலகுவாக்கினார்கள். இதைவிடவும் இமாம் ஷாபிஈ மற்றும் இமாம் அபூஹனீபா ஆகியோரின் முஸ்னதுகளையும் இணைத்துத் தொகுத்தும் இருக்கிறார்கள்.

கடிகாரம் திருத்தும் தொழில் செய்யும் அவர் நுணுக்கமான ஆற்றல் கொண்டவராக இருந்தார். அவர் தன் மகன் ஹஸன் அல்பன்னாவிற்கு புத்தகங்களை மனனம் செய்யுமாறும்; அது அறிவின் கலைகளில் ஆழ்ந்த ஞானத்தைத் தருமெனவும் அடிக்கடி உபதேசம் செய்து வந்தார்கள். பிற்காலத்தில் இமாம் பன்னா பற்றி எழுதுவோர் அவர் மனனம் செய்து வைத்திருந்த நூல்களை இவ்வாறு பதிவு செய்கிறார்கள்: மொழி இலக்கணத்தில் ‘மில்ஹதுல் இஃறாப்’ – அகீதாவில் ‘அல்ஜவ்ஹராத்’ – ஹதீஸில் ‘அல்யாகூதிய்யா’ – ஹனபி ஃபிக்ஹிலே ‘ஃபத்ஹுல் கத்தூரா’ – ஷாபிஈ ஃபிக்ஹிலே ‘மத்னுல் ஃகாயா வத்தக்ரீப்’ – வாரிசுரிமைச் சட்டங்களில் ‘அர்ரஹ்பிய்யா’ உட்பட 18,000 க்கும் மேற்பட்ட அரபுக் கவிதைகள் எனப் பெரும் களஞ்சியமொன்றையே தனது மனன சக்திக்குள் உள்வாங்கியிருந்தார்கள்.

இமாம் பன்னா அவர்கள் அதிகம் நூல்களை எழுதவில்லை. இது குறித்து வினவப்பட்ட போது தான் புத்தகம் எழுதுபவர்களை உருவாக்குவதாகச் சொன்ன கூற்றுப் பிரபலமானது. இஃக்வான்களது பணிகளுள் தனிமனித உருவாக்கம் அடிப்படையானது. அத்தோடு இமாம் பன்னா அவர்களின் எழுத்துக்கள் தொகுக்கப்பட்டு வெளிவந்த மஜ்மூஅது ரஸாஇல், முதக்கிராதுத் தஃவா வத் தாஇயா ஆகியவையும் உரைகளின் தொகுப்பான ஹதீஸுஸ் ஸுலஸாவும் அவர்களது ஆக்கங்களில் குறிப்பிட்டுக் கூறத்தக்கவை.

மஜ்மூஅது ரஸாஇல் தொகுப்பே அவர்களது பட்டறிவைப் பறைசாற்றப் போதுமானது. அந்நூலை ஆராயும் இக்கால அறிஞர்கள் அந்நூலின் மூல வேர்களான மஸாதிர்கள் பற்றி விளக்குகையில் 4000 க்கும் மேற்பட்ட உசாத்துணைகளைக் கண்டறிந்திருக்கிறார்கள். அவை இமாம் இப்னு தைமியா(ரஹ்) அவர்களின் 30 க்கும் மேல் பாகங்கள் கொண்ட ‘மஜ்மூஉ ஃபதாவா’ தொடக்கம் இமாம் ஷாதிபி(ரஹ்) அவர்களின் களஞ்சியமான ‘முவாஃபகாத்’ வரைக்கும் பரந்து விரிந்து செல்கிறது. இதுவே போதும் இமாம் ஹஸன் அல்பன்னா(ரஹ்) அவர்களின் இமாலய வாசிப்பையும் சிந்தனை வீச்சையும் விளங்குவதற்கு… அதனை அறிமுகமட்ட வாசகர்களும் புரிந்துகொள்ளக் குறைந்தளவு அவரது ‘உஸூல் இஷ்ரூன்’ இருபது விதிகளையும் வாசிப்பதே போதுமானது.

இமாம் அவர்கள் பற்றிக் குறிப்பிடும் ஷெய்க் அல்கஸ்ஸாலி அவர்கள் இமாமவர்களிடத்தில் பொதிந்திருந்த மூன்று முக்கிய பண்புகளை அடையாளப்படுத்துகிறார்கள்:
ஆழமான அறிவு.
தான் சூழ்ந்திருக்கும் சமூகம் பற்றிய சமூகம் குறித்த மிகச் சரியான கணிப்பீடு.
கள அனுபவம்.

அவர்களது வாசிப்புப் பின்னணி, தினம் தினம் மேற்கொள்ளும் தஃவா பயணங்கள் போன்றன அவரது இத்தகைய ஆளுமைப் பின்னணியாக இருந்திருக்கிறது. ஒரு குறிப்பின்படி அன்றைய எகிப்தில் காணப்பட்ட 4000 கிராமங்களுள் 3000 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இமாம் பன்னா அவர்கள் பயணம் செய்திருக்கிறார்கள். இன்னொரு குறிப்பின்படி அவர்களுக்கு 50 இலட்சங்களுக்கும் மேற்பட்டவர்களது பெயர்கள் மனனமாக இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. இன்னும் பல இலட்சம்பேரது முகவரிகள் கூட மனனமாகியிருந்தன அவருக்கு.

ஷெய்க் ஜவ்ஹர் அல்தந்தாவி அவர்கள் இமாம் பன்னாவைப் பற்றிக் கூறும் போது, “ஹஸன் அல்பன்னா என்னிடத்தில் ஜமாலுத்தீன் ஆப்கானி மற்றும் முஹம்மத் அப்துஹுவை விடவும் விஷேடமானவர். உண்மையில் அவர்  தக்வா, நுண்ணறிவு, அரசியல் சாணக்கியம் என அனைத்தையும் கொண்டிருந்த அற்புதமான கலவை அவர். அலியின் இதயம் அவரிடம் இருந்தது. முஆவியாவின் விவேகமும் அவரிடம் இருந்தது.” என்கிறார்.

கலாநிதி இமாரா “இஸ்லாமை உயிர்ப்பித்து நகர்த்துவதிலும் இந்த யுகத்திக்கேற்ற திட்டத்தை வழங்குவதில் இச்சமூகத்தின் மார்க்கத்துக்கும் உலகிற்குமான புத்துயிர்ப்பான திட்டமிடலை ஆழ்ந்த தெளிவுடன் வினைத்திறனான செயற்றிறனுடன் வழங்குவதில் நடைமுறைக்கு நெருங்கிய செயற்பாட்டுத் திறனோடு வழங்குவதில் ஹஸன் அல்பன்னாவின் வரலாற்றுப் பாத்திரம் முக்கியமானது. அவரது பணி கால மாற்றங்களை உள்வாங்கியது; அனைத்து சவால்களையும் எதிர்கொள்ளக்கூடிய காலத்திற்குப் பொருத்தமான செயல்திட்டம் இது.” என்கிறார்.

இமாம் ஹஸன் அல்பன்னா இதுபோல் ஒரு தினம் 1949 பெப்ரவரி 12ம் திகதி கெய்ரோவில் ராம்ஸஸ் சதுக்கமருகில் வீதியில் வைத்து சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். அப்போது அவரது வயது 42 மட்டுமே… ஜம்இய்யத்து மன்இல் முஹர்ரமாத் அமைப்பைத் துவங்கும் போது அன்னாரது வயது பத்து மட்டுமே; முஸ்லிம் சகோதரத்துவ (இஃக்வானுல் முஸ்லிமீன்) அமைப்பை ஆரம்பம் செய்த போது வயது இருபத்திரண்டு தான். 42 வயதுள் ஷஹீதாகும் போது இவ்வுலகில் அல்லாஹ்வின் மார்க்கம் மேலோங்க அன்னவர்கள் செய்துவிட்டுச் சென்ற பணிகள் மகத்தானவை.

இமாமுஷ் ஷஹீத் ஹஸன் அல்பன்னா அவர்கள் இஃக்வான்களின் பணி பற்றிக் கூறுவதைக் கேளுங்கள்: “உலக சுபீட்சம்தான் இஃக்வான்களின் பணி; மானிடம் முழுதையுமே சீரான இஸ்லாமிய ஒழுங்கின்பால் வழிகாட்டுவதும் அதனை நோக்கி மக்களை அறைகூவுவதும் இஃக்வான்களின் பணியாகும். இஸ்லாம் தவிர வேறொன்றால் மானிட சுபீட்சத்தைக் கொண்டுவந்திட முடியாது.” இதன் மூலம் இஃக்வான்களது தஃவா இலக்கு புவியியலால் முழு உலகு தழுவியது என்பதையும்; முழு மானிட சமுதாயத்தையும் இலக்கு வைக்கும் தஃவா என்பதையும்; இஸ்லாமே ஒரே தீர்வுத் திட்டம் என்பதையும் தெளிவாக முன்வைத்துவிட்டார்கள்.

அல்லாஹ் அன்னவர்களுடைய பணிகளை அங்கீகரித்து அவருக்கு சுவனத்தில் உயர்ந்த அந்தஸ்துப் பெற்றவர்களில் ஆக்கியருள வேண்டும்