ரஜப் மாதம் – ஆன்மீக பருவகாலத்துக்குத் தயாராதல்

காலம், அல்லாஹுத் தஆலாவினது அத்தாட்சியாகும். காலங்கள் சுழன்று வருவதில் அல்லாஹ் பல்வேறு சிறப்புக்களை வைத்திருக்கிறான். நாட்களுக்கிடையில், மாதங்களுக்கிடையில் ஒவ்வொன்றுக்கும் என அல்லாஹ் விசேட அம்சங்களைக் கொடுத்திருக்கிறான். அவற்றில் சில அல்லாஹ்வை நெருங்குவதற்கான பருவகாலங்களாகும். இன்னும் சிலவற்றில் மனிதர்கள் தாமாகவே உருவாக்கிய அல்லாஹ் காட்டித் தராதவற்றால் படைத்தவனை நெருங்கப் பார்க்கின்றனர். இவற்றை நாம் பித்அத் என்கிறோம்.

தற்போது ரஜப் மாதம் நம்மை அடைந்திருக்கின்றது. அப்படியாயின் நன்மைகளின் பருவகாலமாகிய ரமழான் நம்மை அடைவதற்கு ஐம்பத்து சொச்சம் நாட்களே உள்ளன எனும் எண்ணம் நம் மனத்தில் உதித்து உள்ளம் பேருவகை பூண்டுவிடும்.

ரஜப் என்ற அறபுமொழிச் சொல்லுக்கு மகத்துவப்படுத்தல் என்ற கருத்திருப்பதை அகராதிகளைப் புரட்டும் போது தெரிந்துகொள்ள முடிகிறது. ரஜப் என்ற சொல் நாம் இருக்கும் இம்மாதத்துக்கு சூட்டப்பட்டதில் அன்றைய நபிகளார் (ஸல்) அவர்களது காலத்தின் முழர் கோத்திரத்தாருடன் தொடர்பான நிகழ்வுகள் சம்பந்தப்படுகின்றன. ஒருவருக்கொருவர் கண்ணியப்படுத்தவும் மகத்துவம் செய்யவும் இந்நாட்களை அவர்கள் ஒதுக்கி வைத்திருந்தனர். ரஜப் மாதம் அரபிகள் தமக்கிடையில் யுத்தம் செய்வதைத் தடைசெய்து புனிதப்படுத்தியிருந்த நான்கு மாதங்களில் ஒன்று என்பது முக்கியமானது.

ரஜப் அடைந்துவிடும் போது இன்றைய சமூகவலைத்தள யுகத்தில் வாட்சப், பேஸ்புக் எங்கும் பல செய்திகள் பரப்பப்படும். “ரமழான் வரும் செய்தியை யார் இன்னொருவருக்கு முதலில் அறிவிப்பாரோ, அவரை நரகம் தீண்டாது” என்ற செய்தி இவற்றில் பிரபலமானது. ஆனால் இது நபியவர்களது பேரில் இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்தியாகும். நபியவர்களது பெயரில் இட்டுக்கட்டுவது நபிகளார் (ஸல்) நரகத்தை நோக்கி இட்டுச் செல்லுமென எச்சரித்ததாகும்.

நம்மில் சிலர் ரஜப் மாதமடைந்ததும் உம்ரா பயணத்துக்கான முஸ்தீபுகளில் ஈடுபடுகிறார்கள். உம்ரா பயணத்துக்கான நிறுவனங்களும் அதிகம் உம்ராவை விளம்பரம் செய்யும் காலமாகவும் இது உள்ளது. எனினும் இதுவும் ஆதாரப்பூர்வமற்றதாகும். “ரமழானிலே உம்ரா செய்வது ஹஜ்ஜுக்கு இணையானது” என்பது போல ரஜப் மாதத்திலே உம்ரா செய்வதற்கென எவ்வித ஹதீஸும் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டதில்லை.

இவ்வாறுதான் ரஜப் மாதத்திலே எந்த விதமான விசேட தொழுகைகளும் இல்லை. இதுதொடர்பில் சமுதாயங்களிடத்தே பரவிப் போயிருக்கும் சில நம்பிக்கைகளுக்கும் தூதர் (ஸல்) அவர்களது பேரில் இட்டுக்கட்டப்பட்டவற்றுக்குமுரிய பதில்களை நமது ஆரம்பகால இமாம்கள் அளித்துவிட்டார்கள். இமாம் இப்னு ஹஜர் , இமாம் நவவி, இமாம் இப்னு தைமியா ஆகியோர் இதற்கான விளக்கங்களை அவர்களது கிரந்தங்களில் சுட்டிக் காட்டியுள்ளனர்.

தொழுகையை விடுத்து ரஜப் மாதம் விஷேட நோன்புகள் நோற்பதற்கான அல்லது ஸகாத் கணக்கிட்டுக் கொடுப்பதற்கான விஷேட பருவமோ அல்ல.

ஷரீஅத் வகுத்துத்தராத எந்தவொரு இபாதத்துக்கும் நாம் நேரம் வகுத்துக்கொள்ள முடியாது. இபாதத்துக்கள் விடயத்திலோ அல்லது ஏனைய நற்காரியங்கள் விடயத்திலோ ஷரீஅத் நேரம் குறித்து சிறப்பாக்கித் தந்தாலேயொழிய ஒரு நேரத்திற்கும் இன்னொரு நேரத்திற்குமிடையில் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது.

எனவே ரஜப் மாதத்தில் உம்ரா மேற்கொள்வது ஏனைய மாதங்களில் உம்ரா நிறைவேற்றுவது போன்ற கடமைதான். ஆகவே இதே நோக்கில், வருடத்தின் எல்லா நாட்களிலும் உம்ரா செய்வது போன்று கருதி வேறேதும்சிறப்புக்கள் கொடுக்காது உம்ராவை மேற்கொள்வது பிரச்சினைக்குரியதாகாது. அவ்வாறுதான் தொழுகைகளும் ஏனைய நாட்கள் போல உபரியானவற்றைத் தொழுவது நன்மைக்குரியதுதான். ஆனால் அவற்றுக்கென விஷேட சிறப்புக்கள் கிடையாது. வழமையான திங்கள், வியாழன் மற்றும் அய்யாமுல் பீழ் மூன்று நாட்களும் என நோன்புகளும் நோற்றுக்கொள்ள முடியும்; வருடம் பூர்த்தியான செல்வங்களுக்கு ஸகாத்தையும் கணக்கிட்டுக் கொடுக்கலாம்; ஸதகாக்களும் கொடுக்க முடியும். ஆனால் ரஜப் மாதம் என்ற காரணத்தால் இவற்றுக்கென விஷேட சிறப்பு ஏதுமில்லை என்பதை நாம் மனங்கொள்ளவேண்டும்.

பலவீனமான அறிவிப்புக்களுக்கும் பல கருத்து முரண்களுக்கும் இடையில் ரஜப் மாதத்தில் தான் இஸ்ரா-மிஃராஜ் பயணம் நிகழ்ந்தது என்பது பொதுமக்கள் மத்தியில் மிகப் பிரபலமானது. இந்நாட்களை விசேடமான கொண்டாட்டமாகக் கழிப்பதில் பொதுமக்கள் ஈடுபடுவர். இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடம் ரஜபைக் கொண்டாடுவது குறித்து வினவப்பட்ட போது “அது வெறுப்புக்குரியது” என சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். அத்தோடு பலஸ்தீன நிலத்தை மையப்படுத்தி நிகழும் சியோனிஸ பயங்கரவாதத்தின் வெறியாட்டங்களினது மையப்புள்ளி “இஸ்ரா” பயணத்தில் தான் உள்ளது என்பதை நாம் இந்தத் தலைமுறைக்கு சொல்லிக் கொடுக்க மறக்கக் கூடாது. மிஃராஜ் இடம்பெற்ற காலம் பற்றிய கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் மிஃராஜை நினைவுபடுத்துவதைப் போலவே இஸ்ராவை நினைவூட்டி இந்த உம்மத்தை விழிப்பூட்டுவது அத்தியாவசியம் என்பதை சமகால அறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ரஜப் மாதம் போர் செய்வது தடுக்கப்பட்டு அரபிகள் கண்ணியப்படுத்திய மாதம் என்பதை முன்னர் நினைவூட்டியிருந்தோம். ஜாஹிலிய்ய காலத்தில் இருந்த இந்த நல்ல அம்சத்தை இஸ்லாம் அங்கீகரித்தது. இஸ்லாத்தின் வருகையின் பின்பும் தொடர்ந்தும் அந்த வழக்கம் நிலைபெற்றது.

வல்ல அல்லாஹ் கூறுகிறான்:
“நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் – அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை; இது தான் நேரான மார்க்கமாகும். ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்” (அத்தவ்பா: 36)

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
“ஒரு வருடம் என்பது பன்னிரெண்டு மாதங்கள் ஆகும். அவற்றில் நான்கு புனிதமானவை. மூன்று தொடர்ந்து வருவன, அவை: துல்கஃதா, துல்ஹிஜ்ஜா, முஹர்ரம் ஆகும். நான்காவது மாதம் ஜுமாதுல் ஆகிராவுக்கும் ஷஃபானுக்கும் இடைப்பட்ட ரஜப் ஆகும்.” (புகாரி, முஸ்லிம்)

நம்மைப் பொருத்தவரைக்கும் அல்லாஹ்வை நெருங்கும் வணக்கங்களுக்கான விஷேட காலமாக ரஜப் மாதம் ஆக்கித்தரப்படவில்லை என்பதை அறிந்து கொண்டோம். ஆனால் ஏனைய நாட்களில், மாதங்களில் போல ரஜப் மாதத்தில் இபாதத்களில் ஈடுபடுவதில் தவறில்லை.

ரமழான் நெருங்கியிருக்கிறது. எனவே நம்மை ரமழானுக்கென தயார்படுத்த முடியும். ரமழான் நன்மைகளது பருவகாலம். ரமழான் உபரியான தொழுகைகளுக்கும் ஃபர்ழுக்குரிய நன்மைகளை பெற்றுத் தரும். ரமழான் அதிகமதிகம் குர்ஆன் ஓதப்பட வேண்டிய மாதம். எனவே அதற்குரிய பயிற்சியை இப்போதே ஆரம்பிக்கலாம். குர்ஆனை அதிகமதிகம் ஓதிக்கொள்ளவும் உபரியான தொழுகைகளை தொழுவதும் ரமழானை வினைத்திறனாக்கக் கூடிய பயிற்சியாக அமையும்.

அறிவிப்புப் பலவீனமான ஒரு நபிமொழி வந்திருக்கிறது. எனினும் அதன் கருத்து அழகியது. நபி (ஸல்) அவர்கள் ரஜப் மாதத்தை அடைந்துவிட்டால் கீழ்வரும் பிரார்த்தனையைப் புரிபவர்களாக இருந்தார்கள் என அந்த செய்தி தெரிவிக்கின்றது. “அல்லாஹும்ம பாரிக் லனா ஃபி ரஜப வ ஷஃபான் வ பல்லிஃங்னா ரமழான்” (கருத்து: இறைவா! ரஜபிலும் ஷஃபானில் நமக்கு அருள் சொரிவாயாக! மேலும் ரமழானை அடையச் செய்வாயாக!)

இந்த செய்தி ஒரு பலவீனமான அறிவிப்புத்தான். எனினும் இக்கருத்திலே துஆ கேட்பது சரியானதே. தூதர் (ஸல்) அவர்கள், ஸஹாபாக்கள் உட்பட மற்றுமுண்டான முன்சென்ற சான்றோர்களான ஸலபுஸ் ஸாலிஹீன்களது வாழ்வியல் ஒழுங்குகளை நோக்கினால் ரமழானுக்கென எந்தளவு தயாராகியுள்ளனர் என்பது புரியும். நபியவர்களது சீறாவை இன்றே புரட்டிப் பாருங்கள். ரமழானுக்கென தம்மை சிறப்பாக முன்னமேயே தயார்படுத்திக் கொண்டிருப்பதை நாம் காண முடியும். சில ஸலப்களின் வாழ்வில் ஆறு மாதங்கள் ரமழானுக்குத் தயாராவதற்காய் எடுத்துக்கொண்டதாக வாசிக்கிறோம். எனவே நாமும் இப்போதே, வரப்போகும் ஆன்மீகப் பருவகாலத்துக்கு நம்மைத் தயார்செய்ய ஆயத்தமாவதே மதிநுட்பமானது.

உங்களுக்கு மாற்றுக் கருத்து தோன்றினால்…

Two Businessmen Holding Contrasting Arrows Making Seperate Ways

 

“அவர்கள் அர்த்தமில்லாதவற்றை புறக்கணித்துவிடுவார்கள்” (அல்முஃமினூன்:3)

இறைவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் ஒரே சிந்தனைகள் கொண்டவர்களாகவும், ஒரே மார்க்கத்தைப் பின்பற்றுபவர்களாகவும் படைத்திருக்க முடியும். அப்போது பலர் கனவு காணுவது போல் ஒரு சுபீட்சமான உலகு இருக்குமென நாமும் கற்பனையில் மிதக்கலாம். ஆனால், இறை நியதி அவ்வாறல்ல அவனே எம்மைப் பல சிந்தனைகள் கொண்டவர்களாகவும் வேறுபாடுகள் நிறைந்தவர்களாகவும் படைத்திருக்கிறான். அவ்வாறல்லாது விட்டால் பூமி குழப்பங்கள் நிறைந்ததாகி விடுமென்பது இறைவாக்கு.

இவ்வாறு பலதரப்பட்ட அமைப்புக்களில் மனிதனைப் படைத்து குறித்த சிலருக்கு தெளிவான பாதையைக் காட்டி உலகை வளப்படுத்தும் பணிக்குத் தேர்ந்தெடுத்திருக்கிறான். அவ்வகையில் உலகை வளப்படுத்தி அதன் சுபீட்சத்துக்காக உழைப்போர் காலம் காலமாக இருந்து வருகின்றனர்.
அவ்வாறு இவ்வுலகில் நன்மையை ஏவித் தீமையைத் தடுக்கும் பாக்கியம் கிடைக்கப்பெற்றோர் உலகிலும் மறுமையிலும் அதிர்ஷ்டம் பெற்றோர்தான்…
ஆனாலும், நபியவர்கள் கூறினார்கள்: நேர்வழி கிடைக்கப்பெற்றதன் பின்னர் ஒரு சமூகம் வழிகெடும் எனின், அது வாதாட்டத்தின் காரணமாகவே அமையும். (திர்மிதி)

மனிதர்கள் பலதரப்பட்ட சிந்தனையுடையவர்கள். மனிதர்களில் ஒவ்வொருத்தருடையதும் கைரேகைகள் எவ்வளவுக்கெவ்வளவு வித்தியாசமானதோ அதனைவிடவும் ஒவ்வொருத்தருடைய சிந்தனைகள் வித்தியாசமானது.
இன்று ஃபிக்ஹுல் இஃக்திலாஃப்(முரண்பாடுகள் குறித்த கற்கை) குறித்துப் பேசுகிறோம். முரண்பாடுகளை முகாமை செய்வது குறித்துக் கல்வி முகாம்களே நடத்துகிறோம்… ஆனாலும் ஏதோ கருத்து வேறுபாடுகள் ஃபிக்ஹுத்துறைக்குள் மட்டும்தான் என்பதுபோல் மற்றமைகள் அனைத்தையும் வசதியாய் மறந்துவிடுகிறோம். சமூக மாற்ற சிந்தனைகள் ஃபிக்ஹுத் துறையை விட அகன்று விரிந்தது. அங்கு தான் கருத்து வேறுபாடுகளுக்கான வாயில்கள் விசாலமாகத் திறந்து கிடக்கின்றன. ஆனாலும், நம் சிந்தனை மட்டும் தான் சரியானது என மார்தட்டி மற்றவர்கள் மீது அதிகாரம் செய்ய முனைகின்றோம். ஆதிக்க வெறிகொண்டு அலைகின்றோம்…
அபூ உமாமா அல்பாஹிலி(றழி) அவர்கள், நபியவர்கள் கூறியதாக கூறினார்கள்: சுவர்க்கத்தின் ஓரத்தில் இருக்கும் ஒரு வீட்டுக்குத் தலைவனாக நான் இருப்பேன். அந்த வீடு தன் பக்கம் நியாயமிருக்கின்ற போதும் வாதாட்டத்தை விட்டு விட்டவர்களுக்குரியதாகும். (அபூதாவுத்)
நபியவர்கள் முதற்கொண்டு, ஸஹாபாக்கள் – இமாம்கள் வரைக்கும் அனைவரும் வாதாட்டங்களைத் தவிர்த்து வந்தார்கள்.
இமாம் மாலிக்(ரஹ்) கூறுகிறார்கள்: வாதாட்டம் உள்ளத்தை கடினமாக்கும்.
‘அதில் குரோதத்தை விதைத்து விடும். தொடர்ந்தும் வாதாடிக் கொண்டிருப்பதுவே நீ பாவி என்பதற்குப் போதுமானது…’ இது அபு தர்தா(றழி) அவர்களது கூற்று.
நபியவர்களுக்கு வெறுப்புக்குரியவர் கூட “உங்களில் எனக்கு மிகவும் வெறுப்புக்குரியவர்களும், மறுமையில் என்னை விட்டு மிகவும் தூரமானவர்களும் யார் எனின், வலிந்து தேவையற்ற கதைகளில் ஈடுபடுபவர்களும், மக்களைப் பற்றி எல்லை மீறிப் பேசுபவர்களும், அடுத்தவர்களைத் தாழ்த்தி, தன்னைப் பற்றி வாய் நிறையப் பெருமை பேசுபவர்களும் ஆவர்” (திர்மிதி)

இது தவிர்த்து நம் காலம் குறித்து தூதர்(ஸல்) அவர்களின் முன்னறிவிப்பைப் பாருங்கள்: “ஒரு காலம் வரும் அதில் மக்கள், மாடு தான் சாப்பிட்டதை அசைபோடுவது போல் தொடர்ந்தும் அர்த்தமற்ற கதைகளைப் பேசிக்கொண்டிருப்பர்” (அஹ்மத்)

இறுதியாக நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்… இஸ்லாமிய சட்டத் துறையிலே எவ்வாறு கருத்துபேதங்கள் உள்ளனவோ அவ்வாறே சமூக மாற்றத்தை அடிநாதமாய்க் கொண்டு எழும் கோட்பாடுகளிலேயும் வேறுபாடுகள் மனிதருக்கு மனிதர் வேறுபட்டுச் சிந்திக்கும் போக்குகள் கட்டாயம் இருக்கும். இவை அனைத்தும் இஸ்லாம் வரவேற்கும் அம்சங்களே… எனவே அவற்றுக்கு மத்தியில் உடன்பாடு கண்டு ஒத்த இலக்குகளில் ஒற்றுமை கண்டு செயற்பாட்டாளர்களாய் இருக்க நாம் திடசங்கற்பம் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் எல்லம் முடிந்த பின்பு நாம் சாதித்தவை ‘பூச்சியம்’ ஆகத்தான் இருக்கும்.
இமாம் ஹஸனுல் பஸரி(ரஹ்) அவர்கள் கூறுவார்கள்: அடியார்களில் மிக மோசமானவர்கள் யார் எனின் மோசமான விவகாரங்களைத் தெரிவு செய்து மக்கள் மத்தியில் பொதுப் படையாகப் பரப்பி விடுபவர்களாவர்.
அல்லாஹ் எமது சிந்தனைகளையும் எமது வார்த்தைகளையும் அவன் ஒருவனுக்கேயானதாக ஆக்கி எம்மை அவன் அருள் பெற்றோர் கூட்டத்தில் ஆக்கியருள வேண்டும்.

இறைவனிடம் கையேந்துங்கள்!!!

dua

எமது இறை நம்பிக்கையின் வலுவான அடையாளம்தான் நம் பிரார்த்தனைகள். நாம் எமது தேவைகளை, தேட்டங்களை அல்லாஹ்விடத்தில் முன்வைக்கும் தருணங்கள் அவை… எமது மன்றாட்டங்கள், பச்சாதாபங்கள் ஏக இறையிடத்தில் எதிர்பார்ப்போடு முன்வைக்கப்படும் பொழுதுகள் அவை… அந்தப் பொழுதுகள் பெறுமானம் மிகுந்ததாய், வினைத்திறனும் விளைதிறனும் மிகுந்ததாய் ஆக்கிக் கொள்ள நாம் சில விடயங்களைக் கைக்கொள்வது சாலப்பொருத்தமானது:

1_ இஃக்லாஸ் – அல்லாஹ்வுக்கு மாத்திரமே என்ற அதிதூய எண்ணம்.

2_ தூதர்(ஸல்) அவர்களது வழியைத் துயர்ந்ததாக அமைதல்.

3_ அல்லாஹ் மீது ஆழ்ந்த நம்பிக்கையும் அவன் நம் வேண்டுதல்களுக்குப் பதிலளிப்பானென்ற உறுதியான மனோநிலையும் இருத்தல். நலவுகளினதும் பரக்கத்துக்களினதும் அனைத்துப் பொக்கிஷங்களும் அல்லாஹ்விடமே உள்ளன என்பதை ஒரு முஸ்லிம் அறிவதுதான் தனது இரட்சகன் மீதான அவனது ஆழ்ந்த நம்பிக்கையை அதிகரிப்பதாகும்.

4_ உள்ளத்தை அந்தப் பொழுதுகளுடன் சங்கமிக்கச் செய்தல்… ஆழ்ந்த இறையச்சம்… அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் நன்மைகளின்பால் அதீத விருப்பம்… அவனிடமிருந்து வரக்கூடிய தண்டனைகளை விட்டும் அஞ்சிக்கொள்ளல்.

5_ இறுதியாக துஆவிலே உறுதியோடு மிகுந்த வினைமையுடன் (சீரியஸாக) ஈடுபடல்.

சுயவிசாரணை

www-st-takla-org___self-discipline

சுயவிசாரணை என்பது நாம் தூங்கும் போது அன்று கண் விழித்ததிலிருந்து தூங்கச் செல்லும் வரை நடந்தவற்றையெல்லாம் ஒரு முறை நினைத்துப் பார்த்து அசைபோட்டுவிட்டு… பின்பு தூங்குவதும் அல்ல. அல்லது ஒரு பட்டியலை வைத்துக் கொண்டு நாளாந்தம் அடையாளமிட்டு வருவதும் அல்ல.

மேற் கூறியவையெல்லாம் சுயவிசாரணை செய்வதற்கான முறைவழிகளாக இருக்க முடியும்.
எனினும், சுயவிசாரணை என்பது ஓர் உணர்வு… அது எம்மிலே இயல்பாகக் கணத்துக்குக் கணம் மேலெழ வேண்டிய இயைபாக்கம்…

தூதர்(ஸல்) அவர்கள் ஒருநாளைக்கு 70-100 முறைகள் இஸ்திஃங்பார் செய்வார்கள் என அறிகிறோம்… ஒவ்வொரு முறையும் தன்னை ஆழ்ந்து சுயவிசாரணை செய்துகொண்டுதான் அல்லாஹ்விடம் இஸ்திஃங்பார் செய்திருப்பார்கள்…

சுயவிசாரணை என்பது எம்மால் மிக இலகுவாகச் செய்ய முடியுமானது… கஷ்டமான விடயமொன்றல்ல அது… ஒவ்வொரு காரியத்தையும் செய்யும் முன்பும்… செய்த பின்பும் நம் மனதை ஒரு முறை கேட்டுக் கொள்வதே சுயவிசாரணைக்குப் போதுமானது…

செய்யப் போகும் செயலை நேர்த்தியாகச் செய்வதற்கும்… செய்த செயலொன்று அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்பட்டதா என எம்மை ஒரு தடவை கேட்டுப் பார்ப்பதற்கும் பழக்கப்பட்டவர்களாக நாம் இல்லை என்பது கசப்பான உண்மையே…

நம் வாழ்வில் ஒரு தொழுகையை… ஒரு நோன்பை அவ்வாறு நினைத்துப் பார்த்திருப்போமா? அதற்காக, அது ஏற்கப்பட்டதாக அமைய வேண்டும் என்பதற்காகப் பிரார்த்தித்திருப்போமா?
சுயவிசாரணை என்பது இலகுவான செயல்முறைதான்… ஒவ்வொரு கணமும் எம்முள் அது நிகழ்ந்து கொண்டிருக்கும் போது நாம் படிப்படியே முன்னேறிக்கொண்டே இருப்போம்… அல்லாஹ்வை நெருங்கிக் கொண்டிருப்போம்.

ஒரு முறை சுயவிசாரணை தொடர்பில் தலையைப் பிய்த்துக் கொண்ட ஒருவருக்கு ‘டயறி எழுதுங்களேன்…’ என்று இலகுவாக்கிக் கொடுத்து அவர் திருப்தியோடு ஏற்றுக் கொண்ட அனுபவமும் இருக்கிறது.

சுய விசாரணையை அருமையானதாகவும் வினைத்திறனும் பயனும் மிக்கதாக ஆக்குவதற்கு மரண சிந்தனையும் மறுமை சிந்தனையும் இன்றியமையாதது.

அல்லாஹ்வை நெருங்க துல்ஹிஜ்ஜாவின் முதல் பத்து…

10-1

 

மனிதனின் இரத்தம் ஓட்டும் இயல்பினால் பாவங்களிலும் குழப்பங்களிலும் சீர்குலைவுகளிலும் மூழ்கிப் போகும் இவ்வுலகிலே தன்னைவிசுவாசிப்போருக்கு மீட்சிக் காலமாக அல்லாஹுத் தஆலா சில காலப்பகுதிகளை அவனை மேலும் நெருங்கிக் கொள்வதற்கான வாய்ப்புக் காலமாகக் கொடுக்கிறான். அதனை அவனை விசுவாசிப்போருள் புத்திசாலிகளான அடியார்கள் நன்கு பயன்படுத்திக் கொள்வர்.

 

அவ்வகையில்தான் இரு மாதங்களுக்கு முன்னால் ரமழான் எனும் அருட்பேறு பெற்ற மாதத்தை நாம் பெற்றோம். அதிலும் குறிப்பாக அதன்கடைசிப் பத்து இரவுகளை எம்மைப் படைத்த ரப்போடு மிக நெருக்கத்தைப் பெறுவதற்காகவும் லைலத்துல் கத்ர் என்ற ஆயிரம் மாதங்களைவிட சிறந்த ஓர் இரவை அடைந்து கொள்ளவும் இரவு வணக்கங்களிலும் இஃதிகாப் அமர்வுகளிலும் அதிகம் பயன்படுத்தியிருப்போம்.

 

அதன் தொடர்ச்சியாக நாம் கிட்டிய காலத்தில் அது போன்ற சிறப்பு வாய்ந்த இன்னும் பத்து இரவுகளை அல்லாஹ்விடமிருந்து அன்பளிப்பாகப் பெறப்போகின்றோம். ஆம்… இன்னும் ஒரு சில நாட்களுக்குள்ளால் இஸ்லாம் எமக்குத் தந்திருக்கும் இருபெரும் பெருநாட்களில் மற்றொன்றாகிய ஈதுல் அழ்ஹாவை உள்ளடக்கியிருக்கும் துல்ஹிஜ்ஜா மாதத்தை அடையப்போகின்றோம். அதிலேதான் இஸ்லாம் கட்டியெழுப்பப்பட்டிருக்கும் ஐந்தாவது தூணான ஹஜ் இருக்கின்றது. தஃவாவை உலகமயப்படுத்திய இப்ராஹீம்(அலை) அவர்களின் தியாகங்கள் நினைவுகூரப்படும் மாதம் இது. உழ்ஹிய்யா கடமை நிறைவேற்றப்பட்டு பல்லாயிரம் தேவையுடையோரின் தேவைகள் மனம் நிரம்பப் பூர்த்தி செய்யப்படும் மாதமும் இதுவே.

 

இத்தகைய சிறப்புக்கள் மிக்க துல்ஹிஜ்ஜா மாதத்தின் அறுவடையை ஓர் இறைவிசுவாசி அடைந்துகொள்வதற்கான மிகச் சிறப்பான காலம் அதன் முதல் பத்து நாட்களிலேயே இருக்கின்றது. ஆனாலும் அது பற்றிய அறிவுப் பரவல் நம்மிடத்தில் வெகு குறைவாகவே இருந்து கொண்டிருக்கின்றது. ரமழானின் இறுதிப் பத்தினைப் போன்றே நன்மைகளைக் கொள்ளையடிக்கக் கூடியதாகவே துல்ஹிஜ்ஜாவின் முதல் பத்து நாட்களும் அல்லாஹ்வால் எமக்குத் தரப்பட்டிருக்கின்றன.

 

துல்ஹிஜ்ஜா முதல் பத்து நாட்களின் சிறப்புக்கள்:

இப்னு அப்பாஸ்(ரழி) தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்: “நல்லமல்கள் புரியக் கூடிய நாட்களில் இந்தப் பத்து நாட்கள் போன்று அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான நாட்கள் எதுவும் இல்லை.” அப்போது, ‘யாரஸூலுல்லாஹ்… அல்லாஹ்வின் பாதையில் போரடுவதைவிடவுமா?’எனக் கேட்கப்படுகிறது. அதற்கு தூதரவர்கள் “அல்லாஹ்வின் பாதையில் போராடுவதைவிடவும்தான்… எனினும் தனது உயிரையும் உடமைகளையும்அல்லாஹ்வின் பாதையில் கொண்டுசென்று அவற்றில் எதனையும் மீளக்கொண்டுவராத ஒரு மனிதரைத் தவிர…” எனப் பதிலளித்தார்கள். (ஆதாரம்: புகாரி)

 

பைஹக்கியில் வந்துள்ள அறிவிப்பொன்றின்படி “செய்யப்படும் நல்லமல்களில் அல்லாஹ்விடத்தில் மிகத் தூய்மையானதும் மகத்தானதுமான அமலாக அழ்ஹாவுடைய பத்து நாட்களைப் போன்று இல்லை.”

 

பஸ்ஸாரில் வருகின்ற அறிவிப்பொன்றின்படி “உலகின் நாட்களிலே சிறந்த நாட்கள் இவையாகும்.” என தூதர்(ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

 

அல்லாஹ் தன் திருமறையில் ஸூரத்துல் ஃபஜ்ரின் ஆரம்ப வசனங்களில் வைகறைப் பொழுதின் மீது சத்தியம் செய்துவிட்டு பத்து இரவுகள் மீதுசத்தியம் செய்கிறான்.

( وَالْفَجْرِ * وَلَيَالٍ عَشْرٍ ) [الفجر:2]

பெரும்பாலான தப்ஸீர் ஆசிரியர்களின் கருத்துப்படி மேற்கூறப்பட்ட பத்து இரவுகளும் துல்ஹிஜ்ஜாவின் பத்து நாட்களின் இரவுகளாகும்.

 

இந்தப் பத்து நாட்களுக்குள்ளே தான் அறபாவுடைய நாள் வருகின்றது. “அல்லாஹ்விடத்தில் அறபா தினத்தைவிடவும் நாட்களில் சிறந்த நாள் எதுவும் இல்லை. அந்நாளில் அல்லாஹ் கீழ்வானத்துக்கு இறங்கிவந்துமலக்குமார்களிடம் இதோ எனக்காக ஒன்றுகூடியிருக்கும் எனதுஅடியார்களைப் பாருங்கள் என தன் அடியார்களைப் பெருமையோடுகாட்டுகிறான்.” என்பது நபிமொழியாகும்.

 

மேலும் இப்பத்து நாட்களுக்குள்ளேதான் ஈதுல் அழ்ஹா பெருநாள் தினமும்உள்ளடங்குகிறது. யவ்முந் நஹ்ர் என்றும் அழைக்கப்படும் குர்பான் துவங்கும் தினமும் அதுதான்.

 

எம் முன் சென்ற நல்லடியார்களான ஸலபுஸ் ஸாலிஹீன்களும் இப்பத்துநாட்களையும் கண்ணியமாகப் பயன்படுத்தி அல்லாஹ்வை நெருங்கக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள். லதாஇஃபுல் மஆரிஃப் நூலிலே அபூஉஸ்மான் நஹ்தி என்பவர் ஸலபுஸ் ஸாலிஹீன்கள் பற்றி இவ்வாறுகூறுகிறார்: ‘ஸலபுஸ் ஸாலிஹீன்கள் மூன்று பத்து இரவுப் பொழுதுகளைக்கண்ணியப்படுத்தினார்கள். ரமழானின் இறுதிப் பத்து, துல்ஹிஜ்ஜாவின் முதல்பத்து, முஹர்ரம் மாத்த்தின் முதல் பத்துநாட்களே அவையாகும்.’ நபித் தோழர்அனஸ் இப்னு மாலிக்(ரழி) அவர்கள் ‘துல் ஹிஜ்ஜாவின் முதல் பத்துதின்ங்களில் ஒவ்வொரு நாளும் ஆயிரம் நாட்களின் சிறப்புக் கொண்ட்தாகும்.அறபா தினம் பத்தாயிரம் நாட்கள் சிறப்புக் கொண்ட்தாகும்.” எனஅறிவிக்கிறார்.

 

இமாம் அவ்ஸாஈ அவர்களும் மேற்குறித்த பத்து தினங்களிலும் நோன்பு நோற்று இரவுகளில் விழித்திருந்து நல்லமல்களிலும் ஈடுபடுவது இறைபாதையில் போராடுவதற்கொப்பானது என்கிறார்.

அபூதாவூத் மற்றும் நஸாஈயில் வருகின்ற ஹுனைதா பின் காலித்(ரழி) அவர்களது அறிவிப்பொன்றின் பிரகாரம் ரஸூல்(ஸல்) அவர்கள் துல்ஹிஜ்ஜாவின் ஓன்பது ஆரம்ப நாட்களிலும் நோன்பு நோற்பவர்களாக இருந்திருக்கிறார்கள். தொடரும் அந்த அறிவிப்பிலே ஆஷூரா மற்றும் ஒவ்வொரு மாத்த்திலும் மூன்று நாட்களும் தூதரவர்கள் நோன்பு நோற்பவர்களாக இருந்திருக்கிறார்கள்.

அல்லாஹ் தன்னுடையதென உரிமையுடன் கூறும் நோன்பினை அவனுக்காக நோற்று அவனை நெருங்க முயற்சிக்கவேண்டும்.

 

இந்தச் சிறப்பு மிக்க பத்து நாட்களையும் பயன்மிக்கதாக்கிக் கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்?

1.  நன்மை செய்யும் நாட்களில் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான இந்நாட்களை ரமழானின் இறுதிப் பத்தில் செயற்படுவதைப் போன்று மும்முரமாகச் செயற்படுங்கள்.

2.  எம்மைத் தூய்மைப்படுத்தி; அவனுடனான தொடர்பைப் புதுப்பித்துக் கொள்ளத் அல்லாஹ் தந்திருக்கும் இன்னொரு அவகாசம் இது என்பதை மனத்தில் உள்வாங்கிக்கொள்ளுங்கள்.

3.  அல்லாஹ்வின் பாதையில் போராடிவிட்டுத் திரும்புவதை விடவும் சிறப்பானவர்களாக உங்களை ஆக்கிக்கொள்ள ஓர் அரிய வாய்ப்பு இது என்பதை மறந்துவிடாதீர்கள்.

4.  இந்தப் பத்து நாட்களும் முடிகின்ற போது அல்லாஹ் அளித்த சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி வெற்றிபெற்ற அதிர்ஷ்டசாலிகளாக நீங்கள் மாறுவதற்கான மிகச் சரியான திட்டமிடல்கள் எவ்வாறு உங்களிடம் இருக்கின்றன என்பதை ஒருகணம் சிந்தித்துப்பாருங்கள்.

5.  அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறுவதற்கான அழகிய வாய்ப்பொன்று கிடைத்திருக்கின்றது. இதற்கு முன்னர் நாம் பெரும்பாலும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தியவர்களாக இல்லை. எனவே இதுமுதல் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தத் தேவையான திட்டமிடல்களை மேற்கொள்ளுங்கள். அதிலே உங்கள் இலக்கினை மிகச் சரியாக வரையறுத்துக் கொள்ளுங்கள்.

6.  தொழுகைகளை ஜமாஅத்தோடு முழுமையாகத் தொழுவதற்கு முயற்சியுங்கள். அல்லாஹ் உங்களுக்கு ஒவ்வொரு தொழுகைக்கும் வலீமா ஒன்றைத் தயார்படுத்துவதாக தூதர்(ஸல்) அவர்கள் உத்தரவாதம் தந்திருக்கிறார்கள்.

7.  தூதர்(ஸல்) அவர்களது சுன்னாவைப் பின்பற்றி ஒழுகி அல்லாஹ்விடமிருந்து நேரடியாகவே கூலிகளைப் பெற்றுக் கொள்ள உயர்ந்தபட்ச முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

8.   இப்பத்து நாட்களிலும் அல்குர்ஆனை ஒரு முறையோ அல்லது அதற்கு மேலதிகமாகவோ முழுமையாக ஓதிவிடத் திட்டமிடுங்கள். அல்லாஹுத் தஆலா நீங்கள் ஓதும் ஒவ்வோர் எழுத்துக்கும் பத்து நன்மைகளைத் தந்திடப் போதுமானவன். ஒரு நாளுக்கு மூன்று ஜுஸ்உக்கள் ஓத முடியுமாயின் உங்களால் ஒரு குர்ஆனை முழுமையாக ஓதிமுடிக்கலாம். அப்போது அல்குர்ஆனின் மூலம் மாத்திரம் ஒரு நாளைக்கு அரை மில்லியனுக்கு மேலால் நன்மைகளை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்.

9.  இந்நாட்களில் தக்பீரை சத்தமாக வீடுகளிலும் பாதைகளிலும் சொல்வது ஸுன்னாவாகும். அதனையும் முடிந்தளவு நடைமுறைப்படுத்த முயற்சியுங்கள்.

10.மேலும் திக்ருகளை – அவ்ராதுகளை – பிரார்த்தனைகளை – ஸுன்னத்துத் தொழுகைகளை – ரஸூல்(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துக் கூறுவதை – ஈமானிய அமர்வுகளை – இஸ்லாமிய அறிவுப் பரிமாற்ற அமர்வுகளை இந்த நாட்களில் திட்டமிட்டு அதிகமாக்கிக் கொள்ளுங்கள்.

 

அல்லாஹ் நம் அனைவரையும் நல்லருள்பெற்றோர் கூட்டத்தில் சேர்த்தருள்வானாக!

நம் தொழுகைகளின் விளைவைக் கொஞ்சம் உரசிப் பார்க்க…

salath

நாம் தொழுகிறோம். அதன் சிறப்புக்களை, அதன் முக்கியத்துவங்களை அறிந்து தொழுகிறோம். தொழுகையின் பிக்ஹ் சட்டங்களை அதன் மிகச் சிறு கருத்து வேறுபாடுகள் முதற்கொண்டு அறிந்துகொள்ள விழைகிறோம்… எனினும் நாம் நமது தொழுகைகள் எத்தகைய விளைவுகளை நம்முள் ஏற்படுத்தியிருக்கின்றது? தொழுகையின் நோக்கங்கள் அடையப் பெற்றிருக்கின்றனவா? என்பவற்றை மதிப்பிட்டு அல்லாஹ்வுடன் நம் தொடர்புகளை இன்னும் வலுவாக்கிக் கொள்வதில் பின்தங்கியிருக்கிறோம்.

இது பற்றி, சில சகோதரர்களுடன் உரையாடி நாம் எமக்குள் மதிப்பிட்ட சிலதை இங்கு பகிர்ந்துகொள்கிறோம். அல்லாஹ், அல்குர்ஆனிலும் அவனது தூதர்(ஸல்) அவர்கள்தம் பொன்மொழிகளிலும் கூறியுள்ள பல அம்சங்களோடு நமது அறிவும் நம் தொழுகைகளின் விளைவுகள் சரியாக உள்ளனவா என்பதைக் காட்டித்தர உதவுகின்றன.

1. அல்குர்ஆன் கூறுகிறது: “நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் (வெறுக்கத்தக்க) தீமையையும் விட்டும் தடுக்கும்.” -அன்கபூத்:45

மானக்கேடான வெறுக்கத்தக்கதை விட்டும் தவிர்ந்து சீரிய நற்குணங்களோடு வாழ்வது தொழுகையின் முழு முதல் விளைவாக அல்குர்ஆன் மூலம் அடையாளப்படுத்தப்படுகிறது. நாம் நற்குணங்களை விட்டும் வழுவுகின்றமை நமது தொழுகைகளை மீள்பரிசீலித்து சீரமைத்துக் கொள்வதற்கான முதலாவது உரைகல்லாகும்.

2. மேலும் அல்குர்ஆன் சொல்கிறது: “நிச்சயமாக தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு நேரங்குறிக்கப்பட்ட கடமையாக உள்ளது.” -அந்நிஸா:103

முஃமின் மிகச் சிறப்பான முறையில் நேரத்துக்கு இயங்க பயிற்றுவிக்கப்படுகின்றான். அதில் அவனது நாளாந்த நேரம் குறிக்கப்பட்ட கடமையான தொழுகை காத்திரமான பங்கினை வகிக்கும். இதனையே இமாம் ஹஸன் அல்பன்னா(ரஹ்) ஒரு முழுமையான, சிறந்த முஸ்லிமுக்குரிய பத்துப் பண்புகளை அடையாளப்படுத்துகையில் ‘தனது நேரத்தை வேட்கையோடு பயன்படுத்திக் கொள்பவன்’ என்றார்கள். நேரத்துக்கு இயங்குவது தொழுகை விளைவுகாட்டும் அடுத்த உரைகல்லாகும்.

3. அல்லாஹ்வுக்கு பூரணமாக அடிமைப்பட்ட மனநிலையை உருவாக்குவதில் ஸுஜூத் என்ற செயற்பாடு பெரும் பங்கு வகிக்கும். ஸுஜூத் அல்லாஹ் தவிர்த்து வேறு எவருக்கும் செய்ய முடியாத வணக்கமாகும். அந்த வணக்க நிலை அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமான நிலை. அது பூரணமாக அவனுக்கு அடிமைப்பட்டதை பறைசாற்றும் நிலையாகும்.

“ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்யுங்கள், அவனையே வணங்குங்கள்.” -அந்நஜ்ம்:62

4. தொழுகை ஒவ்வொன்றின் போதும் வுழூ முக்கியம் பெறுகிறது. உடல் சுத்தம் பெறுவதற்கான ஒரு சந்தர்ப்பம் அங்கு உருவாக்கிவிடப்படுகிறது. அத்தோடு ஒவ்வொரு முறை பள்ளிவாசல் செல்லும் போதும் ஆடைகளாலும் நறுமணப் பொருட்களாலும் நாம் நம்மை அழகாக்கிக் கொள்வது நபிகளாரது ஏவலாகும். எனவே நமது தூய்மை, சுகாதாரம், நேர்த்தி என ஒவ்வொன்றிலும் நம் தொழுகையின் விளைவு வெளிப்படும்.

அவ்வாறே, நபியவர்களது திருமொழிகளின் பிரகாரம் ஒவ்வொரு தொழுகையின் போதும் பற்கள் சுத்தம் செய்யப்படுவது அத்தியாவசியம் என்றளவுக்கு பற்சுகாதாரம் குறித்துக் கூறப்பட்டுள்ளது. அங்கு ‘அஸ்ஸிவாக்/அல்மிஸ்வாக்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பது, பற்களை எந்தவித உபகரணம் கொண்டு சரி சுத்தம் செய்து கொள்வதாகும். நமது சூழல்களில் தவறாக விளங்கப்பட்டுள்ளவாறு ‘மிஸ்வாக்’ என்ற பெயர் சொல்லப்படும் குறித்த ஒருவகைக் குச்சியை வாயினுள் இட்டு விட்டு அதனைக் கழுவாமல் சுகாதாரமற்ற, அசுத்தமான முறையில் பாக்கெட்டினுள் இட்டுக் கொள்வது அல்ல.

5. தொடர்ந்தேர்ச்சியாக இருத்தல். ஒருவரது நன்மைகள் ஏற்கப்பட்டுவிட்டன என்பதற்கான பிரதான அடையாளம் என்பது ஸலபுஸ் ஸாலிஹீன்கள் பலரும் வலியுறுத்திக் கூறியுள்ள கருத்தாகும்.

“குறைவாக இருப்பினும் தொடர்ந்தேர்ச்சியாகச் செய்வதனை அல்லாஹ் விரும்புகிறான்.” என்பது நபிமொழியாகும்.

இவ்வாறு, நாம் எம்மை தினமும் நம்- நற்குணப் பகுதிகள், நேரத்துக்கு இயங்குதல், அல்லாஹ்வுக்குப் பூரணமான அடிமைப்பட்ட மனநிலையோடு இருத்தல், சுகாதாரம்/அழகியல் பகுதிகளில் கவனமெடுத்தல் -போன்றவற்றில் சுயவிசாரணை செய்து கொள்வதன் மூலம் நம் தொழுகை பலனைத் தருகிறதா என்பதை நம்மில் உரசிப் பார்ப்பவர்களாக இருக்கவேண்டும்.

தொழுகை இஸ்லாத்தின் தூண்; இரண்டாம் கடமை; முஸ்லிமுக்கும் காபிருக்கும் இடையான பிரிகோடு; மறுமையில் முதலில் விசாரிக்கப்படுவது; சுவனத்தின் திறவுகோல்; அமல்களில் சிறந்தது எனப் பல்வேறு கோணங்களில் சிறப்புப் பெறுகிறது. அது நம்மை உடல், அறிவு, ஆன்மா என முழுமையாகப் பயிற்றுவிக்கும் உள்ளீடுகள் கொண்டது. தொழுகையில் ஃகுஷூஃ என்ற பண்பு இருந்தாலே முஃமின்கள் வெற்றிபெறுவார்கள் என்கிறது ஸூரத்துல் முஃமினூன்.

அல்லாஹ் நம் தொழுகைகளை ஏற்று அருள்புரிவானாக! நம் தொழுகைகள் இன்னும் இறைநெருக்கத்தை நமக்குத் தருபவையாக ஆகிட நமது முயற்சிகளை இன்னும் அதிகப்படுத்திடுவோம்!

M.S.M. Siaaf Naleemi

siaafmq@gmail.com

28072016 – 10.00 PM

உள்ளங்களைக் கழுவுதல்

நல்ல எழுத்துக்களை வாசிப்பதென்பது எப்போதுமே மனதுக்கு உற்சாகம்தான். நல்ல விடயமொன்றை வாசித்து அதை இன்னொருவருக்குக் கொடுக்கவிழைவது அதிலும் உற்சாகம் கூடியதே…
நீண்ட நாட்களுக்கு முன் அப்துல் ஹமீத் பிலாலியின் “உள்ளங்களைக் கழுவுதல்என்றதொரு ஆக்கத்தை வாசிக்கக் கிடைத்தது. அப்போது உள்ளத்தில் தோன்றிய சில விடயங்களை பின்வரும் வரிகளில் வார்த்தைகளாக வடித்திருக்கிறேன். நல்ல உள்ளங்கள் கொண்டவர்களால் தான் உலகம் எப்போதும் பசுமையாக இருக்கிறது. அவர்கள் மக்களுக்காக சிந்திப்பவைதான் சாந்தியாகத் தவழ்கின்றது. அத்தகைய நல்ல உள்ளங்கள்…
 
எமது உடல்கள், எமது ஆடைகள், எமது வாகனாதிகள்… இவை அனைத்தும் மாசுபட்டால் அவற்றை நீராலும் சவர்க்காரம் போன்றவற்றாலும் கழுவி சுத்தம் செய்து கொள்வோம். பின்பு அவை பரிசுத்தமானதாகவும் தூய்மைமிக்கதாகவும் மாறிவிடுகின்றன. என்றாலும் உள்ளங்கள் மாசுபட்டால்… அவற்றை தூய்மைப்படுத்துவதற்கான வழிதான் என்ன? இதனையே அரபுக் கவிஞர் ஒருவர் இவ்வாறு கூறுகிறார்:
நீரினால் ஆடைகளை அசுத்தத்திலிருந்து மீட்டுவிடலாம்
பாவப்பட்ட உள்ளம் நீரினால் தூய்மையாக்கப்பட்டு விடாது.
எனவே, உள்ளம் மாசுபடின் அதனைத் தூய்மையாக்க நீர் தவிர்ந்த வேறேதும் இருக்கக் கூடும். ஆம், நாம் உடைகளைத் தூய்மையாக்கப்பயன்படுத்தும் வழியல்லாத இன்னோர் வழிமுறை உள்ளங்களைக் கழுவுவதற்கென இருக்கின்றது.
அந்த தூய்மைப்படுத்தும் வழியைத் தெரிந்துகொள்ள தொழுகைகளின் ஆரம்பத்தில் தூதர் (ஸல்) அவர்கள் ஓதிவந்த ஒரு துஆவினை நாம் நோக்குவோம்:
“இறைவா! வெண்மைமிகு ஆடைகள் அழுக்குகளிலிருந்து சுத்தம் பெறுவது போன்று பாவங்களை விட்டும் என்னைத் தூய்மைப்படுத்துவாயாக… இறைவனே எனது பாவங்களை நீரைக்கொண்டும் பனிகட்டியைக் கொண்டும் குளிரைக்கொண்டும் கழுவி விடுவாயாக…”     (புகாரி)
 
இங்கு பாவங்களை நீர், பனிக்கட்டி என்பன கொண்டு கழுவுதல் என்பதன் மூலம் என்ன நாடப்படுகின்றது? இப்னு தகீக் அல்ஈதி என்பவர் பாவங்களை விட்டும் உயர்ந்தளவான பாதுகாப்புத்தான் இதன் மூலம் நாடப்படுகின்றது என்கிறார்.
இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் தனது ஃபத்ஹுல் பாரியில் மூன்று விடயங்களால் தொடர்ந்தும் தூய்மையாக்கப்படும் ஓர் ஆடையானது மிக உயர்ந்தளவிலான அதிதூய்மை கொண்டதாக இருக்கும்என இந்த ஹதீஸை விளக்கும் போது கூறிச் செல்கிறார்.
 
இமாம் அல்தீபி அவர்கள் இங்கு நீருக்குப் பின்பு பனிக்கட்டி மற்றும் குளிர் என்பன குறிப்பிடப்படுவதன் நோக்கம் பாவமீட்சியின் பின்னர் பூரணமான மக்ஃபிரத் மற்றும் ரஹ்மத்தைக் குறிப்பிடலாம் எனவும், உயர்ந்த எண்ணங்களே நரக நெருப்பின் வேதனையிலிருந்தும் அதன் கொடூரங்களிலிருந்தும் பாதுகாப்பதாகவும் இருக்கும் என்கிறார்.
நாம், பாவங்களால் மாசுபட்ட எமதுள்ளங்களை ஏதோவொரு வகையில் மன்னிப்பையும் ரஹ்மத்தையும் அருளையும் பெறவேண்டியிருக்கிறது.
இந்த தூய்மைப்படுத்தல்தான் நாம் “தௌபதுன் நஸூஹாஎன அழைக்கும் உயர்ந்த தரத்திலான பாவமன்னிப்புக் கோரலாகும். இது பாவங்களின் மீது கை சேதப்படுதல் என்ற புள்ளியிலிருந்து ஆரம்பம் பெறும். அப்பாவங்கள்பால் மீள்வதில்லை, அந்தப்பக்கமே மீண்டும் செல்வதிலை என்ற உயர்ந்த உறுதியுடனேயே ஆரம்பிக்கும். அப்பாவங்கள்பால் இனி மீள மாட்டேன். என்ற உயர் இலட்சியம் உள்ளத்தில் குடிகொண்டிருக்கும். அதனை எவ்விதத் தயக்கமும் இன்றி உடனடியாகவே மிகத் திருப்தியுடன் கூடிய தீர்மானமாக செயலில் காட்டவும் வேண்டும்.
 
எல்லாவற்றுக்கும் பின், உள்ளங்களைக் கழுவுவதை ஃபர்ழான வணக்கங்களை நிறைவேற்றுதல் பின்பு அதனை நபிலான வணக்கங்கள் கொண்டு பூரணமாக்குதல் எனத் தொடர வேண்டும். இறுதியில் இறைவனுக்குக் கட்டுப்படுவதன் சகல வடிவங்களிலும் வாழ்வின் பக்கங்கள் கொழிக்கும் அளவுக்கு எமது உள்ளங்கள் மாற்றமுற வேண்டும்.
இவ்வகையான மாற்றங்கள் பலதையும் எமது ஸலபுகளிடத்தில் நாம் கண்டிருக்கிறோம், இத்தகைய உயர்ந்த உள்ளங்கள் கொண்டவர்களாகத்தான் நவீன இஸ்லாமின் முன்னோடிகளான எமது ஸஹாபாக்கள் இருந்திருக்கிறார்கள். இதன் செயல் வடிவம் தான் அவர்களை மதுவை விட்டும் விரண்டோடி தூய்மையடையச் செய்தது. மதீனத்துவீதிகளில் மதுப்பீப்பாய்களைக் குப்புறக்கவிழ்த்துவிட்டு மஸ்ஜிதுந் நபவியிலே அல்லாஹ்வுக்கு முழுதாய் சிரம் தாழ்த்த வைத்தது.
பாவங்களைச் செய்துவிட்ட போதெல்லாம் தாமாக முன்வந்து தண்டனைகளக் கேட்டுப்பெற்று மறுமையின் அல்லாஹ்வின் கௌரவத்தைப் பெறக்கூடியவர்களாக மாற்றி வைத்தது. தோழர் ஸஃலபா (ரழி) அவர்கள் தன் பார்வையின் மூலம் செய்துவிட்ட தவறு காரணமாக தூதர் (ஸல்) அவர்களது அவைக்கே வருவதற்கு வெட்கப்பட்டு இறுதியில் தன்னுயிரையே இழக்குமளவுக்கு பச்சாதாபப்பட்டதெல்லாம் அவர்கள் கொண்டிருந்த உயர்ந்த உள்ளங்களே… அவர்கள் தமது உள்ளங்களைத் கழுவித் தூய்மைப்படுத்தும் வேலையை எப்போதும் மேற்கொள்பவர்களாக இருந்திருக்கிறார்கள்.
குறிப்பு: இவ்வாக்கத்தின் கணிசமான பகுதிகள் அப்துல் ஹமீத் பிலாலி அவர்களின் மூல ஆக்கமொன்றிலிருந்து பெறப்பட்டுள்ளன.

அறிவைக் கற்றுக்கொள்ளல்

knowledge_in_islam_by_mogaheda-d5qgvut

மனிதன் உடல், அறிவு, ஆன்மா என முப்பாகங்களை உள்ளடக்கிப் படைக்கப்பட்டிருக்கிறான். உடல் பகுதியைக் கவனிக்காத அறிவும் ஆன்மாவும் பிரயோஜனமற்றது; அறிவு பகுதியைக் கவனிக்காத உடலும் ஆன்மாவும் மடமை நிரம்பியிருக்கும்; ஆன்மீக பகுதி கவனிக்கப்படாத உடலும் அறிவும் வெற்று முண்டம்தான்.

இவ்வகையில் மனிதன் தன்னை அல்லாஹ் படைத்த பிரதிநிதித்துவ நோக்கத்தைப் பூர்த்தியாக்குவதற்கு தன்னை முழுமையாகத் தயார் செய்யவேண்டிய கடமை அவனுக்கிருக்கிறது. அதற்காக ஒன்றோடொன்று தொடர்பான தொடர்பான மேற்கூறப்பட்ட மூன்றையும் ஏற்ற விகிதத்தில் கவனிக்க வேண்டிய தேவையும் அவனுக்கிருக்கிறது.

இவற்றுள் முற்படுத்தி மனிதன் கவனித்து வளர்க்க வேண்டிய பகுதி அறிவுப் பகுதியாகும். அப்போது ஏனையவற்றுக்கும் ஏற்ற விதத்தில் இடமளித்து ஒரு முழு ஆளுமையாகப் பரிணமிப்பான். அறிவுதான் ஆன்மீகத்தை மேம்படுத்த வழி; அறிவுதான் உடலுக்குரிய பங்கை சரியான அளவில் கொடுக்க உணர்வூட்டும்.

* * * * * * *

அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமமாகிவிட மாட்டார்கள். நிச்சயமாக அடியார்களில் அல்லாஹ்வை அதிகம் அஞ்சி நடப்போர் அறிஞர்களே… குர்ஆனிய போதனைகள் எமக்கு இவ்வாறு இறையச்சத்துக்காக அறிவினை முதலீடாக்க அழைப்புவிடுக்கின்றது.

 اِنَّمَا يَخْشَى اللّٰهَ مِنْ عِبَادِهِ الْعُلَمٰٓؤُا

இதனையே தூதர்(ஸல்) அவர்கள் தம் நாவினால் அல்லாஹ்வினால் நலவு நாடப்பெற்றவர்கள் என அடையாளம் செய்கிறார்கள். ஆம்… யாருக்கு அல்லாஹ் நலவினை நாடுகிறானோ அவருக்கு மார்க்கத்தில் ஆழ்ந்த அறிவைக் கொடுக்கிறான்.

(من يرد الله به خيرا يفقهه في الدين” (الحديث

எவர், தான் பெற்ற அறிவின் மூலம், செயல்படுகிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் அறியாதவற்றையெல்லாம் அனந்தரமாக அளிக்கிறான்.

அறிவுஞானம், சிந்திக்கும் திறன் பெற்ற மனிதனுக்கு அதனை படிப்படியாக அதிகரித்துக் கொள்வது கடமையாகின்றது. சிந்தனைச் சறுக்கல்கள், அல்லாஹ்வை விட்டும் தூரமாதல் என அடிக்கடி பாதிக்கப்படும் மனித மனத்துக்குப் பல்வேறு விதங்களில் அறிவூட்டல் அவசியப்படுகின்றது.

இது கூட்டான அமைப்பிலும் இடம்பெற முடியும்… தனித்தனியே சுயமாகவும் இடம்பெறலாம். ஆனால், கட்டாயம் இது தொடர்ந்தேர்ச்சியாக இடம்பெற்றுக்கொண்டே இருக்கவேண்டியதாகும்.

இதுவே அல்லாஹ்வால் தூய்மை உத்தரவாதப்படுத்தப்பட்ட நபிமார்களும் அறிவினைப் பெருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தித்து நின்றமையின் இரகசியமாகும். இதுவே அல்குர்ஆனில் அல்லாஹ், நபி முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு அறிவுரை பகரும் போது பிரார்த்திக்கக் காட்டிக்கொடுத்த வழிமுறையுமாகும்:

 “وَقُلْ رَّبِّ زِدْنِىْ عِلْمًا

இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!” என்றும் நீர் பிரார்த்தனை செய்வீராக!” (தாஹா:114)

ஈமான் கொண்டவர்களுக்கு அல்லாஹ்விடத்திலிருக்கும் அந்தஸ்து தனியானதாகும். அவ்வாறு ஈமான் கொண்டவர்களுக்குரியது போன்றே அல்லாஹ் சம அந்தஸ்தை அல்லாஹ் கல்வி ஞானம் உடையோருக்கும் வழங்குகின்றான். இன்னொரு வகையில் பார்த்தால் ஈமான் பூரணமடைவது அறிவு இணைவதன் மூலமாகத்தான் எனலாம்.

يَرْفَعِ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ وَالَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ دَرَجٰتٍ‌

“அன்றியும், உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும்; கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான்.” (முஜாதலா: 11)

கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்கள் பற்றி தனது கருத்தொன்றை ஷெய்க் முஹம்மத் அல்கஸ்ஸாலி அவர்கள் பின்வருமாறு பதிவுசெய்கிறார்கள்:

வழிகேட்டிலிருந்தும் சிந்திப்பவர்கள் பற்றி நான் அச்சமடையவில்லை… ஏனெனில் அவர்கள் சத்தியத்தின்பால் மீண்டுவிடுவார்கள். ஆனாலும் நான் நேர்வழியிலிருந்து கொண்டும் சிந்திக்காமலிருக்கும் மனிதன் குறித்துத் தான் அச்சப்படுகிறேன்… ஏனெனில் அவர்கள் காற்றில் அடிபட்டுச் செல்லும் சருகுகள் போல் ஆகிவிடுவார்கள்.”

சிந்தனை தரும் கல்வியே நம்மை உயரத்திற்கு இட்டுச் செல்லக்கூடியது. அது இல்லாத போது நமது அன்றாட செயற்பாடுகள் முதல் நேரடியாக நன்மைகளைப் பெற்றுத் தரும் வணக்க வழிபாடுகள் வரைக்கும் வீணாகிப் போய்விடலாம்.

கல்வி ஞானம் பெறுதலே இஸ்லாமின் முதல் அம்சமாக இருக்க முடியும். ‘இக்ரஃ’ என்ற வாசகத்தை அடிப்படையாகக் கொண்டே இஸ்லாம் அத்திவாரமிடப்பட்டது. இஸ்லாமில் அறிவின் சிறப்புக்கள் பற்றி அதிகம் கூறித்தான் தெரியவேண்டிய அவசியம் இல்லை. அறிவே இஸ்லாமாக இருந்துகொண்டிருக்கிறது; இஸ்லாமே அறிவாகவும் இருந்துகொண்டிருக்கிறது.

பல நபிமொழிகள் அறிவைப் பெறுவது இபாதத்துக்களை விடவும், நபிலான வணக்கங்களை விடவும், ஜிஹாதைவிடவும் மேலோங்கி நிற்கும் சந்தர்ப்பங்கள் பலதையும் சுட்டிக்காட்டுகின்றன. அறிவு மறுமைப் பயனோடு இணைத்து இம்மையிலேயே பயன்தரும் என்பது அதன் சிறப்பம்சமாகும்.

‘ரப்பனா ஆத்தினா ஃபித் துன்யா ஹஸனத்தன்’ எனும் பிரபலமான குர்ஆனிய வசனத்துக்கு விளக்கம் சொன்ன இமாம் ஹஸனுள் பஸரி(ரஹ்) அவர்கள்: ‘அது இல்ம்-அறிவு மற்றும் இபாதா-வணக்கமும் ஆகும்’ என்கிறார்.

* * * * * * *

ஒரு முஸ்லிம் என்ற வகையில், அறிவைப் பெரும் ஒருவர் திட்டமிட்டுக் கற்பதும் கற்றலுக்குரிய பண்பாடுகளைப் பேணுவதும் உணர்வோடு கற்றலும் அவற்றை வாழ்வில் அழகிய முறையில் நடைமுறைப்படுத்துவதும் அதற்குரிய ஒழுங்குகளைப் பேணி நடப்பதும் அவர் மீது கடமையாகிறது. கற்றலை வினைத்திறனாக்க நாம் சில ஒழுங்குகளைக் கடைப்பிடிப்பது அவற்றை இபாதத்தாகவும் மறுமைப் பயன் மிக்கதாகவும் ஆக்கிக் கொள்ள உதவும்:

  • அறிவைத் தேடிக் கற்றுக் கொள்வது ஒவ்வொரு முஸ்லிமினதும் கட்டாயக் கடமை என்ற உணர்வோடு இருப்பது கூடிய வினைத்திரனைத் தரும். இது நபியவர்கள் தமது பொன் மொழியொன்றிலும் ஏவியுள்ள அம்சமொன்றாகும்.

(طلب العلم فريضة على كل مسلم” (الحديث”

  • காலத்துகேற்ற வகையில் பல கலைகளைக் கற்பது பர்ளு கிபாயாவாக மாறியுள்ளது. அத்தகைய கலைகளை கற்றுக்கொண்டு சமூகத்துக்கான எமது பங்கை உரிய முறையில் நிறைவேற்றல்.

(فَلَوْلَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ مِنْهُمْ طَائِفَةٌ لِيَتَفَقَّهُوا فِي الدِّينِ وَلِيُنْذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ” (التوبة :122″

  • அல்லாஹ்வுக்காகக் கற்றல் என்ற எண்ணத்தை அடிக்கடி வரவழைத்துக் கொள்வது என்பது அறிவைத் தேடும் ஒவ்வொருவரும் தம்மைத் தூய்மையாக்கிக் கொள்ள மேற்கொள்ளவேண்டிய செயற்பாடாகும்.
  • அறிவைத் தேடுதல் என்பது இடையில் நின்றுபோவதல்ல. அது முடிவின்றி இறுதிவரைக்கும் தொடர்ந்துகொண்டிருக்க வேண்டிய செயற்பாடாகும். இதுவே அல்லாஹ்வால் ஸுரத்து தாஹாவில் ‘ரப்பி ஸித்னி இல்மா’ எனும் பிரார்த்தனையூடாக சொல்ல வரும் செய்தியாகும்.
  • அறிவைத் தேடும் பனி பலமடங்கு பொறுமைகளை வேண்டி நிற்பதாகும். அதன் விளைவு மறுமை நாள்வரை தாமதிக்கக் கூடியதாகும். பொருளாதார முன்னேற்றம் என்பது அறிவைத் தேடலின் இலக்கல்ல போன்ற அடிப்படை உண்மைகள் ஒரு முஸ்லிம் அறிவை கற்றுக் கொள்ளும் போது ஆழமாக மனத்தில் உள்வாங்கிக் கொள்ளவேண்டும்.
  • ஆசிரியரை மதிப்பதும் உரிய கண்ணியத்தை இறுதிவரையும் கொடுப்பதும் அறிவை கற்றுக் கொள்பவன் முக்கியமாகக் கவனம்கொள்ள வேண்டிய விடயமாகும். ஆசிரியர் இன்றிய அறிவுதேடலும், ஆசிரியரை மதிக்காத அறிவுதீடலும் பெரும் மனித இழிவுக்கு இட்டுஸ் செல்லும் என்பது கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்கள் அடிக்கடி வலியுறுத்தி வரும் விடயம்.

அல்லாஹ் நம் அனைவரையும் நல் அருள் பெற்றோர் கூட்டத்தில் சேர்த்தருள் புரிய வேண்டும்!