“பாரிசின் மஞ்சள் சட்டைக்காரர்கள்” -வீரியம்பெறும் மக்கள் திரள் அரசியல்-

ஜனவரி மாதம் 2011 உலக அரசியலின் போக்கில் மாபெரும் திருப்பங்களது பருவமாகும். தூனிசியாவில் ஆரம்பித்த மக்கள் தன்னெழுச்சிப் போராட்டங்கள் பாரிய மாற்றங்களுக்கு வித்திட்ட அரபு வசந்தமாகப் பரிணமித்தது. தூனிசியாவில் பூ அசீஸியின் மரணத்துடன் வடக்கு ஆபிரிக்க அரபு நாடுகள், மத்திய கிழக்கு அரபு நாடுகளெங்கும் மக்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு வந்தனர். மக்களது எழுச்சி பல தேசங்களில் ஆட்சி மாற்றங்களாகியது. பல்லாண்டு காலம் மக்கள் விருப்பத்துக்குப் புறம்பாக ஆண்டுகொண்டிருந்த கொடுங்கோலர்கள் தூக்கி வீசப்பட்டு மக்கள் தெரிவுகள் தூனிசியாவிலும் எகிப்திலும் ஆட்சிக்கு வந்தன. இன்னும் சில நாடுகளில் விளைவுகளாக உள்நாட்டு யுத்தம் மூட்டிவிடப்பட்டு பிராந்திய வல்லாதிக்கங்களின் போட்டா போட்டிக் களமாகவும் தமது புதிய ஆயுதக் கண்டுபிடிப்புக்களைப் பரீட்சிக்கும் களமாகவும் ஆக்கிக் கொண்டன. அதில் யேமன், சிரியா, லிபியா முற்றாக சிதைக்கப்பட்டு துகளாக்கப்பட்டிருக்கிறது.

எகிப்தில் நிகழ்ந்த எதிர்ப்புரட்சியின் விளைவுகள் அங்கே முன்னின்று போராடிய முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை முற்றாக முடக்கிப் போட வேண்டுமென்ற கங்கணத்துடன் இன்னும் தீவிரமான கொடுங்கோன்மைக்கு அம்மக்களை ஆளாக்கியிருக்கின்றது. ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பாத்திரம் களத்துக்குக் கொண்டுவரப்பட்டு மக்கள் விருப்பங்களுக்குத் தூக்குக் கயிறு இடப்பட்டது.

இன்றும் முழுமை பெறாது தொடர்ந்துகொண்டிருக்கும் அரபு வசந்தம் விரும்பியும் விரும்பாமலும் குறிப்பாக மத்தியகிழக்கிலும் பொதுவாக உலக ஒழுங்கிலும் சாதகமானதும் பாதகமானதுமான பல மாற்றங்களுக்கு வித்திட்டிருக்கின்றது.
அரபு வசந்தம் லிபியா, யேமன், சிரியா போன்ற நாடுகளில் வன்முறையாக மாற்றம் பெறுவதற்கு முன்னரும் துனிசியா, எகிப்து உள்ளிட்ட நாடுகளது மக்கள் மேற்கொண்ட போராட்ட முறைமையும் உலகின் கவனத்தை ஈர்த்தது. மக்கள் தன்னெழுச்சியாகத் தமது உரிமைகளைக் கோரியவர்களாக போராட்டத்தை நோக்கி உந்தப்பட்டுக் களத்துக்கு வந்தனர். அங்கு களத்தில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் போன்ற சமூக அடிமட்டம் வரைக்கும் ஆழமாக ஊடுருவிய பலமான அமைப்பொன்று இருந்தது போராட்டத்தை இன்னும் கச்சிதமாக்கியது.

போராட்டத்தை நோக்கி உந்தப்பட்ட மக்கள் திரளாக ஒன்று குவிந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஆர்ப்பாட்டம், ஹர்த்தால் போன்றவற்றுக்கு அப்பால் வித்தியாசமானதொரு போராட்ட சிந்தனையை இது உலகுக்குத் தந்தது. மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளைக் கூட போராட்டத் திடலில் மேற்கொள்ளும் சூழல் காணப்பட்டது. உணவு உட்கொள்ளல் துவக்கம் இறை வணக்கம் வரைக்கும் போராட்ட மைதானத்திலேயே மேற்கொண்டனர். இதனையும் தாண்டி சில திருமண நிகழ்வுகளும் கூட போராட்ட மைதானத்திலேயே மேற்கொள்ளும் அளவு மக்கள் போராட்டமயப்பட்டனர். பெண்களுக்கு அசௌகரியமான எந்த நிகழ்வும் போராட்ட மைதானத்தில் காணப்படவில்லை.

திரண்ட மக்களது கோரிக்கைக்கு முன்னால் அரசுகள் அடிபணிந்து கவிழ்ந்தன. மக்கள் திரளின் பலம் பிரமாண்டமானது.

இதே வகையில் மக்கள் திரளை ஒன்று சேர்த்த தன்னெழுச்சிப் போராட்டங்கள் தொடர்ந்து வோல் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்புப் போராட்டம் என அமெரிக்கா உட்பட மேற்குலகில், நமக்கு அண்மித்த தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் என பல்வேறு வடிவங்களில் மக்களது விருப்பங்களை நோக்கி அதிகார மையங்களைப் பணிந்து வரச்செய்தது.

மக்கள் திரள் அரசியல் போராட்டத்தின் இன்னொரு வடிவமாக பலஸ்தீனத்தின் The Great Return March என்ற சுலோகத்துடன் நீண்ட நாட்களாகத் தொடர்ந்துவரும் தம் தாயகத்துக்கு மீளத் திரும்பும் உரிமையை மீட்டெடுப்பதற்கான மாபெரும் நடைப் பயணத்தை நாம் பார்க்க முடியும். அங்கே பலஸ்தீனின் இன்றைய தலைமுறை வரைக்கும் அந்த நிலத்தை மீட்டெடுக்க வேண்டுமென்ற உணர்வு கடத்தப்பட்டு வந்திருப்பதைக் காண்கிறோம். அந்த மக்கள் திரளின் சக்திக்கு முன்னால் சியோனிஸத்தின் முன்னேற்றகரமிக்க ஆயுதங்கள் செய்வதறியாது தவிக்கிறது. சில மரணங்களை நிகழ்த்த முடிந்ததல்லாது போராட்ட உணர்வை சியோனிஸத்தால் தோற்கடிக்க முடியவில்லை.

இன்று மக்கள் திரள் அரசியல் போராட்ட வடிவம் வெற்றிகரமாக பிரான்சிலே நிலைகொண்டிருக்கின்றது. இடதுசாரி-வலதுசாரி கோஷங்களுக்கு அப்பால் புதிய கோஷங்களுடன் இமானுவேல் மக்ரோன் பதவிக்கு வந்தார். ஐரோப்பாவின் இளம் தலைவராக அறியப்பட்ட அவர் இன்று போராட்டங்களைக் கட்டுப்படுத்தி, தீர்வுகளைக் கொடுக்கும் இயலுமையை இழந்து பல தரப்புக்களிலிருந்தும் கண்டனங்களை சம்பாதித்தும் அவரது அரசியல் ஆளுமையை, இன்று மக்கள் திரளொன்று கேள்விக்குள்ளாகியும் இருக்கின்றது. பிரச்சினைகள் தீர்க்கப்படாது இரண்டு மாதங்களாகியும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

பிரான்சின் மக்கள் திரள் அரசியல் போராட்டத்தை முன்னெடுக்கும் “மஞ்சள் சட்டை இயக்கம்” உருவான பின்னணி விசித்திரமானது. (பிரெஞ்சில் Les gilets jaunes, ஆங்கிலத்தில்: The yellow vests) 2018 அக்டோபரில் இணையத்தில் எரிபொருள் விலைக்குறைப்புக்கும் வாழ்க்கைச் செலவுக் குறைப்புக் கோரிக்கைக்குமான மகஜரொன்று கையொப்பத்திற்கு விடப்பட்டது. அது எதிர்பாராதளவில் 300,000 கையெழுத்துக்களை எட்டியதும் ஆர்ப்பாட்டத்தை நோக்கி அழைப்புக்கள் விடுக்கப்படத் தொடங்கின. ஆரம்பத்தில் எரிபொருள் விலைக் குறைப்பு, வாழ்க்கைச் செலவுக் குறைப்பு, வரி அதிகரிப்புக்களை எதிர்த்தும் குழுமிய மக்கள் இன்று அதிபர் இமானுவேல் மக்ரோன் பதவி விலகும் வரைக்கும் ஓயப்போவதில்லை என அறிவித்திருக்கின்றனர்.

முதலில் நூறுகளாகவும் பின் ஆயிரங்களிலும் இருந்த எதிர்ப்பாளர்கள் நவம்பர் 17 துவக்கம் இலட்சக் கணக்கிலான மக்கள் திரளாகியிருக்ன்றனர். குழுமியுள்ள மக்கள் தீவிர வலது – தீவிர இடது அரசியலுக்கு அப்பாலானவர்கள் என பிரெஞ்சு அரசியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதிலும் அநேகர் கடந்த அதிபர் தேர்தலில் புதிய கோஷத்தோடு வந்த மக்ரோனுக்கு வாக்களித்தவர்களாக அல்லது எத்தரப்புக்கும் வாக்களிக்காதோராக இருக்கின்றனர். இதுவரையிலும் பல்வேறு கட்சி, அமைப்புப் பின்னணிகளை உடையோர் போராட்டத்தில் இணைந்த வண்ணமே உள்ளனர். சனத்தொகையின் பெரும் பகுதியை உள்ளடக்கிய நடுத்தர வர்க்கத்தினரே போராட்டக்காரர்களாக காணப்படுகின்றனர். மக்கள் திரளின் போராட்டம் அடிமட்ட மக்களையும் உயர்வர்க்கத்தினரையுமே அதிகம் பாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இற்றை வரைக்கும் போராட்டத்தில் 10 ஐத் தாண்டிய இறப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன. நூற்றுக் கணக்கில் கைதுகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. ஆரம்பத்தில் சூழல் மாசடைதலைத் தவிர்க்க எரிபொருள் விலையைக் கூட்டியதாகத் தெரிவித்த மக்ரோன் இப்போது எதிர்ப்பாளர்களின் கோரிக்கைகளை அநேகமாக ஏற்றுக் கொண்டும் விட்டார். இருந்த போதிலும் இன்னும் பல கோரிக்கைகளை அடையப்பெறும் வரைக்கும் போராடுவதற்கு போராட்டக்காரர்கள் தீர்மானித்திருக்கிறார்கள்.

மஞ்சள் சட்டைக்காரர்கள் இப்போதும் வார இறுதியில் பிரான்சின் பல நகரங்களிலும் இலட்சங்களில் ஒன்றுகூடுகிறார்கள். ஆரம்பத்தில் சாத்வீக அணுகுமுறைகளில் பெரிதும் சார்ந்திருந்த மக்கள் திரள் போராட்டம் வன்முறை சார்ந்ததாக மாறியிருக்கின்றது. ஒன்று சேரும் மக்கள் பொதுச் சொத்துக்களை, குறிப்பாக பொலிஸ் வாகனங்கள் போன்றவற்றை முற்றாக எரித்தும் சேதப்படுத்தியுமிருக்கிறார்கள்; பாதைகளை மறித்தும் வாகனத் தடைகளை ஏற்படுத்தியும் தம் எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள். மஞ்சள் ஜாக்கெட்களை அணிவதைத் தமது எதிர்ப்பின் அடையாளமாகக் காண்பிக்கின்றனர். ஐரோப்பாவின் இரண்டாவது பெரும் பொருளாதாரமான பிரான்ஸ் நெருக்கடியிலிருந்து மீளாமல் தவிக்க பெரும் மக்கள் திரள் காரணமாகியிருக்கின்றது.

வன்முறைகளாக நிகழ்வுகள் மாறியதற்கு அரசு, ஆர்ப்பாட்டக்காரர்கள் என இரு தரப்புமே பொறுப்பேற்க வேண்டுமெனப்படுகிறது. மஞ்சள் சட்டை இயக்கத்தவர் தமது போராட்ட ஒழுங்குகளை நியாயப்படுத்துவதோடு அதிபர் மக்ரோன் தமது டிவிட்டரில் குடியரசுக்கும் அதன் பாதுகாவலர்கள், பிரதிநிதிகள், அதன் அடையாளச் சின்னங்களுக்கும் எதிரான மிகுந்த வன்முறை இது எனக் குறிப்பிட்டிருந்தார். பிரான்ஸினதும் ஐரோப்பாவினதும் அண்மைய வரலாற்றில் சமூக ஏற்றத் தாழ்வுகளை எதிர்த்து சமூக நீதிக்காக மாபெரும் மக்கள் தொகையினர் திரண்டுள்ளதை கடந்த வாரங்களில் காணமுடிகின்றது.

2017 இல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் 40 வயதான இமானுவேல் மக்ரோன் இளம் தலைமுறையின் பிரதிநிதி என்ற சுலோகத்துடனும் புதிய கொள்கைகளுடன் பிரான்சின் சுபீட்சத்துக்கான ஒரே வழியாக தான் உருவாக்கிய தமது புது பிராண்ட் கட்சியை (La République En Marche – முற்போக்குக் குடியரசு என்பது மக்ரோன் 2016 இல் ஆரம்பித்து குறுகிய காலத்தில் பிரான்சில் ஆட்சிக்கு வந்தது) முன்வைத்து பிரசாரம் மேற்கொண்டார். புளித்துப் போன பொருளாதாரக் கொள்கைகள், ஆட்சி முறைகளில் சோர்ந்து போயிருந்த பிரான்சியருக்கு புதிய உத்வேகத்தைத் இவர் தருவாரென்ற பிரசாரத்தை ஊடகங்கள் கச்சிதமாகச் செய்தன. இமானுவேல் மக்ரோனின் அணி மேற்கொண்ட சமூக ஊடகப் பிரசாரமும் பிறநாட்டு உளவு அமைப்புக்களது பிரசாரத் திட்டங்களை முறியடிப்பதில் மேற்கொண்ட வியூகங்களும் அன்று பரபரப்பாகப் பேசப்பட்டன.

மாற்றங்களின் தேவதூதனாகப் பார்க்கப்பட்ட இமானுவேல் மக்ரோன் விரைவிலேயே தனது சுயரூபத்தைக் காட்டத் துவங்கினார். மக்ரோன் மக்களுக்கானவரல்ல; பெருமுதலாளிகளுக்கான அரசியல்வாதியாகவே இருப்பதாக வீதிகளில் திரளும் எதிர்ப்பாளர்ககள் கோஷமிடுகின்றனர். அதிபராகிய குறுகிய காலத்திலேயே பிரான்சில் ISF எனப்பட்ட பணக்காரர்களிடம் பெறப்பட்ட வரியை சில துறைகளுக்கு மட்டுப்படுத்தி தான் பணக்காரர்களின் ஜனாதிபதியென நிரூபித்தார்.

அதிபர் மக்ரோன் வாக்களித்தபடி மாற்றங்களும் நிகழவில்லை; தொழில்வாய்ப்புக்கள் உருவாகவுமில்லை; வாழ்க்கைத்தர உயர்வும் இல்லை. மக்ரோன் செய்தது மக்களை மாற்றம் என்ற மந்திரத்தால் இலகுவில் போதையூட்டி வெற்றியைத் தட்டிக் கொண்டது மட்டும்தான். அவர் பாரீஸின் மேட்டுக் குடிகளை விட்டும் தன்னை வித்தியாசமானவராகக் காட்டிக் கொள்ளவே பெரிதும் உழைத்தார்; புதிய உலக ஒழுங்கொன்றின் முகவராகத் தன்னை அடையாளம் செய்தார். ஆனால் அவை எதுவுமே நடக்கவில்லை என்பதை விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். முன்னாள் அதிபர் பிரான்சிஸ் ஹொலாண்டே துவக்கிவைத்த மக்களுக்குப் பாதகமான திட்டங்களைக் கூட பெருமுதலாளிகளின் வேண்டுகோளின்படி தொடர்ந்தும் முன்னெடுத்தார்.

மக்ரோன் அரசியல்வாதி என்பதற்கு முன்பு பெரும் இலாபமீட்டும் கார்ப்பரேட் கம்பனிகளின் தனிப்பெரும் உரிமையாளர். அவர் தனது வர்க்க நலனை செயற்படுத்துவதிலேயே குறியாக இருந்து இன்று சாயம் வெளுத்து மக்கள் திரளின் சக்திக்கு முன் கையாலாகா நிலையிலிருக்கின்றார்.

வரலாற்றின் மாபெரும் திருப்பங்களில் பாரீஸின் தெருக்களும் பிரான்ஸிய மக்களது உதிரங்களும் பெரும் பங்களிப்புக்களை நல்கியிருக்கின்றன. ஏழு கோடியை அண்மித்த மக்கள் தொகை கொண்ட பிரான்ஸ் தனது ஐந்தாவது குடியரசைப் பிரசவிக்கும் போராட்டமாக இது வலுவடையலாம் என அரசியல் வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். ஐரோப்பாவின் இரண்டாவது பெரும் பொருளாதார சக்தியை ஆட்டங்காண வைத்திருக்கும் மஞ்சள் சட்டை இயக்கம் ஆரோக்கியமான மாற்றங்களை உலகுக்குத் தரவேண்டும். அப்படியாயின் அது மேற்கொள்ள வேண்டிய பயணம் நெடியது. மக்கள் திரளொன்றின் அரசியல் போராட்டத்துக்கு இன்னும் புதிய அர்த்தங்களைத் தரும்.

நன்றி: சர்வதேசப்பார்வை

அர்துகான் கடந்த ஞாயிறன்று ஆற்றிய உரை மிகச்சுருக்கமாக…

 

53620

“மக்களாட்சி, ஜனநாயகத்துக்கான மில்லியன்களில் மக்கள்” திரண்ட இப்பிரமாண்ட அணிதிரள்வு இஸ்தான்பூலின் யனி காபி சதுக்கத்தில் இடம்பெற்றது.

 

> உரையை அர்துகான் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லாஹ் குல் அவர்களை வாழ்த்தித் துவங்குகிறார்.

> கடந்த ஜூலை 15 அன்று ஜனநாயகத்தைப் பாதுகாக்க வீறுகொண்டெழுந்து வீதிக்கு வந்த மக்களுட்பட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறார்.

அர்துகான்> அன்றைய தினம் 178 பொதுமக்களும் இன்னும் பல பாதுகாப்புப் பிரிவினர்களும் ஷஹாதத் அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டனர். மேலும் 2000 பேர் அளவான காயமுற்றவர்கள் வரலாற்றில் தம் பெயரைப் பதிந்துவிட்டனர்.

அர்துகான்> ஜனநாயகத்தைப் பாதுகாக்க வீதிக்கு இறங்கிய இறங்கிய ஒவ்வொருவரது உழைப்பும் முக்கியமானது. இந்த வெற்றி துருக்கியின் 79 மில்லியன் மக்களுக்கும் சமர்ப்பணம். உலகத்துக்கே நாம் முன்மாதிரி.

அர்துகான்> நம் மூதாதையர்கள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக நின்ற அதே உத்வேகத்துடன் நீங்களும் இருக்கிறீர்கள். எமது பலம் என்பது அரசியலுடனும் பொருளாதாரத்துடனும் சுருக்கப்பட்டதல்ல.

அர்துகான்> இன்று நம் மக்களவைத் தலைவர், பாதுகாப்புத் துறைத் தலைவர் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இங்கு கூடியிருக்கிறோம். இதன் மூலம் நம் எதிரிகளுக்கு உறுதியான செய்தியை முன்வைத்திருக்கிறோம்.

அர்துகான்> நாம் 1000 வருடங்களுக்கும் மேலான பெருமைமிகு பாரம்பரியம் கொண்டவர்கள். நம் இலக்கு நம்மை அனைத்துத் துறைகளிலும் முதல் தரத்திற்குக் கொண்டுவருவதே.

அர்துகான்> நம்மை அச்சுறுத்த நினைக்கும் ஒவ்வொரு சக்திக்கெதிராகவும் நாம் ஒன்றுபட்டு எழுவோம். அல்லாஹ்வின் முன்னிலையில்… அவனைப் புகழ்ந்தவர்களாக… பணிந்தவர்களாக… கண்ணியமிகு மக்களே! இத்தருணம் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.

அர்துகான்> அத்தா துர்க் ஒரு முறை ‘நம் மக்கள் ஒரு போதும் தலைகுனிவையும் இழிவையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்’ என்றார். நான் 96 வருடங்களின் பின் மீண்டு உங்களிடம் கேட்கிறேன் “தலைகுனிவையும் இழிவையும் நீங்கள் ஏற்றுக்-கள்வீர்களா?”

ஐந்து மில்லியன் ஜனத்திரளும் ஒரே குரலில் “இல்லை…இல்லை” என ஆர்ப்பரிக்கிறது.

அர்துகான்> இங்குள்ள கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவரும் மக்களாகிய உங்களது வேண்டுகோள் என்னவென்பதை நன்கு அறிந்திருப்பார்கள். மரண தண்டனை அமுல்படுத்தப்பட வேண்டுமா என்பதை துருக்கியப் பாராளுமன்றம் முடிவு செய்யும்.

அர்துகான்> துருக்கிக்கும் அதன் மக்களுக்கும் சதிகாரர்கள் செய்யப் பார்த்த அநியாயம் எதனையும் நான் சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

அர்துகான்> தியாகிகளின் உடம்புக்கு மேலால் டாங்கிகளை ஓட்டிச் சென்று சிதைத்தவர்களை நம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

அர்துகான்> நமது மரண தண்டனை அமுலாக்கம் குறித்து விமர்சிக்க முற்படுவோர் அமெரிக்கா, சீனா, மேலும் நாடுகளிலும் அது இருப்பதை அறிந்திடட்டும்.

அர்துகான்> தம்மை டாங்கிகளுக்கு முன்னால் அர்ப்பணம் செய்து கொண்ட நம் மக்கள் பலரைக் கண்ணுற்று இருப்பீர்கள். சிலர் நினைத்துக்கொண்டிருந்தனர் நம் மக்கள் நிமிர்ந்த நெஞ்சுடன் டாங்கிககள் முன்னால் வரமாட்டர் என்று..

அர்துகான்> அதன் போது தேசத்தின் பக்கம் நின்ற இராணுவத்தை நான் தூய்மைப்படுத்துகிறேன்.

அர்துகான்> நாம் சில பாடசாலைகளை மூடிய போது விமர்சித்தவர்களுக்குக் கூறுகிறேன். அந்த பாடசாலைகளே இந்த சதிகாரர்களை உருவாக்கின.

அர்துகான்> நம் நண்பர்களையும் எதிரிகளையும் நன்கறிந்த ஒரு தலைமுறையை நாம் உருவாக்கிக் காட்டுவோம்.

அர்துகான்> ஹராம்-ஹலாலை நன்கறிந்த ஒரு தலைமுறையை நாம் உருவாக்கிக் காட்டுவோம்.

அர்துகான்> இச்சதிக்கு மூல காரணமாக இருந்தோரையும் உடந்தையானோரையும் அடையாளம் செய்கிறோம். அந்த குலன் இயக்கத்தை மோசடி இயக்கம் எனக் கூறாதோரும் உள்ளனர். இத்தகையோரின் பின்னணி, அஜண்டாக்களை எடுத்துரைப்பது நம் கடமை.

அர்துகான்> நம் பாதுகாப்பு, சிவில், இராணுவத் துறைகளை இம்மோசடிக்காரர்களிடமிருந்து தூய்மையாக்க வேண்டும். குலன் அமைப்பு, தாஇஷ் அனைத்துப் பயங்கரவாதிகளும் துருக்கியின் எதிரிகளே.

அர்துகான்> இச்சதிக்கு ஆதரவளித்து துருக்கிக்கு எதிராக நின்ற வெளிச் சக்திகள், பிற நாடுகளும் உள்ளன.

அர்துகான்> சதிகாரர்களுக்கு எதிராக நாம் சட்டபூர்வமாகவே நடவடிக்கைகள் எடுப்போம்.

அர்துகான்> கடந்த 15 நிகழ்வின் பின் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரே மக்களாக.. ஒரே கொடியின் கீழ் ஆகிவிட்டீர்கள்.

அர்துகான்> நமது மக்கள் ஜூலை 15 சதி முயற்சியின் போது துருக்கியர், குர்தியர், அரபியர், பொஸ்னியர் என அனைத்து இனத்தினரும் ஒன்றாகக் கைகோர்த்து இருந்தீர்கள்.

அர்துகான்> அன்று நமது மின்பர்களும், அதான் கூறும் இடங்களும் தம் பணியை மிகச் சிறப்பாக செய்தன.

அர்துகான்> நம் மக்களின் விருப்பம் ஜனநாயக ஆட்சி என்பதை பல வருடங்களுக்கு சொல்லி வைக்கிறோம்.

அர்துகான்> நம் மக்கள் துணிச்சல் அற்றவர்கள் எனக் கண்டவர்களுக்கு நாம் சாதித்துக் காட்டிவிட்டோம். நமது மக்கள் வீரத்தினதும் துணிச்சலினதும் அடையாளம்.

அர்துகான்> எமது உள்ளங்கள் எல்லையற்று விசாலமானது.

அர்துகான்> அநியாயமிழைக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கச் செய்வதில் நாம் துரோகம் இழைத்திட மாட்டோம்.

அர்துகான்> இவ்விடத்துக்கு வருகை தந்த அனைத்துத் தரப்பாருக்கும் தனித்தனியே மிகுந்த நன்றிகளைத் தெரிவிக்கிறேன். அனைவரும் இச்சதியை தோல்வியடையச் செய்வதில் பங்காற்றியவர்கள்.

அர்துகான்> உலகின் பல பாகங்களிலும் இருந்த நம் மக்கள் ஒவ்வொருவருக்கும் நன்றிகள். மேற்கு ஊடகங்கள் பயங்கரவாத இயக்கங்களுக்கு வால்பிடித்து செய்தி வெளியிட்ட போது உலகிற்கு உண்மையை எடுத்துச் சென்றவர்கள்.

 

M.S.M. Siaaf Naleemi

siaafmq@gmail.com

10082016 – 06.00 AM

அர்துகான் – குலான் முரண்பாடுகள்

 

BUSINESS-GULEN-ERDOGAN

துருக்கிய சதி முயற்சிகள் நிகழ்ந்து ஒரு வாரம் கடந்து விட்டது. சதி முயற்சிகள் முற்றாக முறியடிக்கப்பட்டு விட்டன. எனினும் ஜூலை 20 அன்று துருக்கிய அரசியலமைப்பின் 120வது உறுப்புரைக்கமைய பிரகடனம் செய்யப்பட்டிருக்கும் மூன்று மாதங்களுக்கான அவசர காலநிலைச் சட்டமானது இன்னும் பாரிய களையெடுப்பு, சுத்தப்படுத்தல் வேலையொன்று காத்திருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது.

இச்சதி முயற்சிகள் தொடர்பில் ஆரம்பத்திலிருந்தே பிரதான சூத்திரதாரியாக பத்ஹுல்லாஹ் குலான் விரல் நீட்டப்படுகிறார்.

இவர் அமெரிக்கா, பென்சில்வேனியாவைத் தளமாகக் கொண்டு செயல்படும் துருக்கிய மதகுரு ஆவார். துருக்கிய இஸ்லாமிய மறுமலர்ச்சியின் பிதாமகரான பதீஉஸ் ஸமான் ஸஈத் நூர்ஸி வழிவந்த ஸூபித்துவ முகாமின், ஹனபி மத்ஹப் சார்ந்தவராகத் தன்னை அறிவித்துக் கொண்டிருக்கும் பத்ஹுல்லாஹ் குலான் மதத் தலைவர் தவிர்த்து மிகப் பெரும் வர்த்தக ஜாம்பவான், கல்விக் கூடங்களின் சர்வதேச வலைப்பின்னல், பெரும் ஊடக சாம்ராஜ்ஜியம் என பல்வேறு முகங்கள் கொண்ட உலகின் டாப் வரிசை பில்லியனர்களுள் ஒருவர்.

இத்தனைக்கும் அவர் ஸஈத் நூர்ஸியின் இயக்கத்தின் வழிவந்த ‘நூர்ஜு’ பாரம்பரிய மதப் பிரசாரகராக அடையாளம் செய்யப்படுகிறார். இத்தகையோர் திருமணம் புரியாமல் மார்க்க சேவைக்காகவே தம்மை அர்ப்பணம் செய்துகொள்பவர்களாவர். உலகின் முதல்தர வரிசைக் கோடீஸ்வரர்களில் ஒருவரான பத்ஹுல்லாஹ் குலான் கூட திருமணம் செய்யாத குடும்பம், குழந்தைகள் ஏதும் அற்றவர் என்பது வியப்பளிக்கிறது.

துருக்கிய சதிப் புரட்சி முயற்சிகளுக்குப் பின்பு அதிபர் அர்துகான் அளித்த முதல் பேட்டியிலேயே குலான் இச்சதிக்குப் பின்னால் இருப்பதாகக் குற்றம்சாட்டியிருந்தார். பிரதமர் பின் அலி யில்திரிம் “யாரும் பென்சில்வேனியாவிலிருந்து துருக்கிய இராணுவத்துக்குக் கட்டளையிட முடியாது.” என்று சாடியிருந்தார். துருக்கி சார்பில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் ‘குலானை துருக்கியிடம், அமெரிக்கா ஒப்படைக்க வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.

எவ்வாறு இருப்பினும் எகிப்து அரசியல் பத்தி எழுத்தாளர் பஹ்மி ஹுவைதி போன்றோரின் நிதானமான எழுத்துக்கள் உட்பட கணிசமானவர்களது எழுத்துக்கள் பத்ஹுல்லாஹ் குலானை நோக்கி அடிப்படை வலுவான ஆதாரங்கள் இன்றி குற்றம் சாட்ட முடியாது என்றே குறிப்பிடுகின்றன.

அமெரிக்க வெளிவிவகார செயலர் ஜோன் கெரி “இந்த சதிப் புரட்சியுடன் பத்ஹுல்லாஹ் குலானுக்கு தொடர்பிருக்கிறது தொடர்பில் துருக்கி வலுவான ஆதாரங்களை முன்வைக்கும் பட்சத்திலேயே அமெரிக்கா அவரை துருக்கியிடம் ஒப்படைக்கும்” எனத் தெரிவித்திருந்தார். (ஜோன் கெரிதான் அமெரிக்காவின் சீ.ஐ.ஏ. உளவு நிறுவனத்தின் சதித் திட்ட ப்ராஜக்டை முன்னின்று ஒருங்கிணைப்புச் செய்தவர் என்ற புலனாய்வுத் தகவல் இங்கு இன்னொரு தலைப்பு.)

முன்னணி அரசியல் எழுத்தாளர்களது கருத்துக்கள், ஜோன் கெரியின் மேற்போந்த அறிவிப்பு போன்றன துருக்கி அரசாங்கம் பத்ஹுல்லாஹ் குலான் தான் தலைமைச் சூத்திரதாரி என்பதை நிரூபிக்கும்படியான ஆதாரங்களை இன்னும் முன்வைக்கவில்லை என்ற கருத்தைத் தோற்றுவிக்கிறது. அடுத்து, அதை விடவும் முக்கியமாக துருக்கிய களநிலவரங்கள் மற்றும் மக்கள் மனோநிலையை பரிசீலிக்குமிடத்து துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டு அர்துகான் தலைமையிலான பலம் மிக்க அரசுக்கே சவால் விடுக்கும் அளவு சக்தி மிக்க குழுவொன்று இருக்குமாயின் அது பத்ஹுல்லாஹ் குலானினது அமைப்பினர்தான் என்பது மறுக்க முடியாத யதார்த்தமாகிறது. இக்கருத்தையே அல்முஜ்தமஃ போன்ற சஞ்சிகைகளின் பத்தி எழுத்தாளரான ஷஃபான் அப்துர் ரஹ்மான் போன்றவர்கள் அடித்துச் சொல்கின்றனர்.

பெருமளவு இராணுவ வீரர்கள் உட்பட துறைசார் நிபுணர்கள், அரச உயரதிகாரிகள் எனப் பலரும் குலானின் இயக்கத்தினால் கவரப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கும் மேலால் தற்போது கைது செய்யப்பட்டிருப்போரின் வாக்குமூலங்களாகக் கசிந்திருக்கும் தகவல்களின்படி குலான் இயக்கத்தவர்கள் திட்டமிட்டு அரச பரீட்சை வினாத்தாள்கள் முற்கூட்டியே வழங்கப்பட்டு அரச பதவிகளுக்குள் உள்வாங்கப்பட்டிருக்கிறார்கள். அவ்வகையில் அரசாங்கத்துக்குள் இன்னொரு நிழல் அரசாங்கத்தை நடத்திக் கொண்டு போகுமளவு வலுவுள்ள கட்டமைப்பொன்றை குலான் நிறுவியிருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதனைத்தான் அர்துகான், குலானுடனான பிரச்சினைகளின் ஆரம்ப கட்டத்தில் இரு வருடங்களுக்கு முன்பே கூறியிருந்தார்.

இப்பின்னணியில் குலானுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளின் தன்மை, குலானுக்கு இருப்பதாகக் கூறப்படும் இரகசிய அஜண்டா என்ன?, தனித்து வாழ்ந்து தனக்கென பெரும் உலகளாவிய சாம்ராஜ்ஜியமொன்றை நிறுவியிருக்கும் குலானின் உளவியலைப் புரிந்து கொள்ளலோடு இணைத்து அர்துகான்-குலான் இடையிலான உறவுகள்-முரண்கள் பற்றி அறிய முற்படல் வேண்டும்.

– ★ – ★ – ★ – ★ – ★ – ★ – ★ – ★ – ★ – ★ – ★ – ★ –

இன்றைய தேதிக்கு அர்துகான் மற்றும் அவரது அரசியல் முகாமை சேர்ந்தவர்கள் குலானிய இயக்கத்தை FETO (FEthullah Terrorist Organization – பத்ஹுல்லாஹ் பயங்கரவாத அமைப்பு) என்றுதான் விளித்து, விமர்சித்து வருகின்றனர். இந்நிலை தோன்ற முன்னால் அர்துகான் அணியினருக்கும் குலான் அணியினருக்கும் இடையில் நீண்டகால நல்லுறவே இருந்துவந்தது.

துருக்கியில் நிலவிய இராணுவ அதிகார மேலாதிக்கத்தைப் போக்கி விடுவதில் ஒரு தசாப்தத்துக்கும் மேலாக குலான் இயக்கம் அர்துகானுடனும் அவரது ஏ.கே.பி. கட்சியுடனும் இணைந்து பங்களித்ததாகக் கூறப்படுகிறது.

இதனை விடவும் துருக்கிய இஸ்லாமிய சிந்தனைப் பாரம்பரியத்தில் அர்துகான், குலான் இருவருக்கும் தலைமகனாக பதீஉஸ் ஸமான் ஸஈத் நூர்ஸி கருதப்படுகிறார். அரசியல் பாசறையில் அர்துகான் நஜ்முத்தீன் அர்பகானின் மாணவராவார். நூர்ஸியின் சிந்தனைகளில் வித்திட்டு எழுந்த எண்ணற்ற இயக்க வழிமுறைகளில் முக்கியமானது நஜ்முத்தீன் அர்பகான் தோற்றுவித்த அரசியல், மத இயக்கமான மில்லி கோரஸ் ஆகும். இதன் வழியாகவே ஆரம்பத்தில் ரஃபாஹ் கட்சி, ஸஆதா கட்சி எனத்துவங்கியதன் இன்றைய வடிவமே அர்துகானின் AKP எனப்படும் நீதிக்கும் அபிவிருத்துக்குமான கட்சியாகும்.

சம நேரத்தில் நூர்ஸி வழியில் பிரசாரங்களை செய்து வந்த குலான் பின்னர் தனக்கென தனிப் பாதையொன்றை வகுத்துக் கொண்டார் அவர் நூர்ஸி இயக்கத்தில் ஒரு ‘நூர்ஜு’ ஊழியராக ரிஸாலா-ஏ-நூர் சிந்தனைகளைப் பரப்புவதில் ஈடுபட்டிருந்தார். மேற்கு துருக்கிய மஸ்ஜித்கள் எண்ணற்றவற்றில் இமாமாகப் பணியாற்றியிருக்கிறார். 1971 புரட்சி காலப்பகுதியிலும் இஸ்லாமியக் கருத்துக்களைப் பரப்ப முயன்றார் என்ற குற்றச்சாட்டில் சிறைவாசம் அனுபவித்திருக்கிறார்.

என்பதுகளின் இறுதிப் பகுதியில் தனக்கான பாதையை வகுத்துக்கொள்ளத் துவங்கிய குலான் கிராமப் புறங்களிலிருந்து மேற்குத் துருக்கிய நகர்களில் கற்ற மாணவர்களைத் தன் வசம் ஈர்த்தெடுத்தார். அதன் மூலம் எதிர்கால துருக்கியின் எண்ணற்ற அரச உயரதிகாரிகள் அவரது அணிக்குள் வந்தனர். அவரது மாணவர்களது கிராமங்களுக்கும் சென்று ஆயிரக் கணக்கானோர் முன்னிலையில் தான் முன்னெடுத்த சிந்தனையை உரைகளாகப் பிரசாரம் செய்து ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களைப் பெருக்கிக் கொண்டார். அவரது சிந்தனைகள் மதச்சார்பற்ற பின்னணியில் இஸ்லாமிய விழுமியங்களைப் பிரயோகித்து வாழ்தல் என்ற அடிப்படையைக் கொண்டிருந்ததாக லோப்லொக் இணையத்தில் உமர் பாரூக் என்பவர் எழுதுகிறார்.

தம்மையே உண்மையான நூர்ஸி இயக்கத்தவர்களாக அடையாளப்படுத்த எத்தனிக்கும் குலான் அணியினருக்கு இன்றைய தேதியில் அர்துகானின் ஏ.கே.பி, உண்மையான நூர்ஸி இயக்கத்தவராகக் கருதப்படும் ஜமாஅத்துந் நூர் உட்பட துருக்கியில் செயல்படும் எந்த இஸ்லாமியப் போக்கினருடனும் நல்லுறவு இல்லை. அத்தோடு குலான் அணியினரின் மீது சியோனிஸம், மேற்குலகு உட்பட பல விவகாரங்களில் அவர்களது நிலைபாடுகள் காரணமாக பலத்த விமர்சனம் இருப்பதோடு, அவர்கள் மீது சந்தேகக் கண்கள் விழவும் காரணமாகின்றது.

அடிப்படையில் இஸ்லாமிஸ்ட்டுகளாக அடையாளப்படுத்தப்படும் அர்துகான் – குலான் இருவரும் துருக்கியின் இஸ்லாமிய அடையாளம், துருக்கியின் வரலாற்றுப் பாத்திரம் குறித்த தமது பார்வையில் வித்தியாசப்படுகின்றனர். அர்துகான் இஸ்தான்புல் மேயராக இருந்த போது 1997ம் ஆண்டளவில் “எமது மினாராக்கள் எமது ஆயுதங்கள், எமது குப்பாக்கள் எமது கவசங்கள், எமது பள்ளிவாயில்கள் எமக்கு வீடுகள்” என அறிவித்திருந்தார். இந்தப் புள்ளிகள் அர்துகான் – குலான் இடையேயான பிரிகோட்டை நமக்கு அறிமுகம் செய்கின்றன.

அர்துகான் இஸ்தான்புல்லுக்கு மேயராகத் தேர்வு செய்யப்படல், அவரது கட்சி 2002இல் ஆட்சிக்கு வருதல் போன்ற பல விடயங்களில் குலானின் அமைப்புக்குப் பெரும் பங்கு இருக்கிறது. அவற்றுக்கு நன்றிக் கடனாக அவரது இயக்கத்தினைப் பல்வேறு அரச கெடுபிடிகளிலிருந்து அர்துகான் விடுவித்திருந்தார். இவ்வாறே 2006-07 களில் அர்துகானுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட எர்கொனிக்கன் சதியை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து முறியடிக்க உதவியதும் குலான் அணியினர்தான்.

காலப் போக்கில் அர்துகானினது அஜண்டா தனது அஜண்டாவுடன் முரண்படுவதை குலான் அவதானித்திருக்கிறார். குறிப்பாக 2008 காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதலின் போது துருக்கிய அரசாங்கத்தின் நிலைப்பாடு, 2010 காஸா உதவிக் கப்பலான மாவி மர்மரா விவகாரம் என்பவற்றின் போது குலான் அர்துகானை வெளிப்படையாக விமர்சிக்கத் துவங்கினார்.

துருக்கி அரசியல் பத்தி எழுத்தாளர் முஸ்தபா அக்யொல் முன்வைக்கும் கருத்துப்படி அர்துகானின் சிந்தனையை பரவலாக இஸ்லாமிய உலகில் பேசப்படும் ‘அரசியல் இஸ்லாம்’ எனும் பிரதான வகைப்பாட்டுக்குள் உள்ளடக்க முடியும். தொடர்ந்து அவர், குலான் முன்வைக்கும் இஸ்லாத்தை ‘கலாசார இஸ்லாம்’ என அடையாளம் செய்கிறார். இப்பின்னணியிலேயே குலானுக்கென இருக்கும் அரசியல் நிகழ்ச்சி நிரல் குறித்தும் அதற்கென அவர் தனது ஆட்களை அரசு நிர்வாகம், சட்டத்துறை, இராணுவம், பொலிஸ் பகுதிகளுக்குள் நுழைவித்திருப்பது குறித்தும் சிந்திக்க வேண்டும் என்கிறார்.

இவ்வாறு எண்ணற்ற விடயங்கள் அர்துகான் – குலான் முரண்பாட்டில் பேசப்பட வேண்டியிருக்கிறது. இதில் குலான், மற்றும் அவரது பக்கங்கள் குறித்த செய்திகள் மிக மங்கலாகவே கிடைக்கின்றன. பெரும் ஊடக சாம்ராஜ்ஜியமொன்றைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அவருக்கு இது அசாத்தியமானதுமல்ல. இவ்வாறான வேளையொன்றில் தீர்க்கமான நிலைப்பாடுகளை வெளியிடாது இருக்கும் குலான் தரப்பினர் மீது விடுக்கப்படும் குற்றக்கணைகள் நியாயமானவை என்ற கருத்தும் தோன்ற ஏதுவாகின்றது. 17 வருடங்களாக அமெரிக்காவில் இருந்துகொண்டு எவ்வித குடும்ப, உறவினர் பின்னணிகளும் இன்றி துருக்கியில் பாரிய இயக்கக் கட்டமைப்பொன்றையும் உலகளாவிய கல்வி, வர்த்தக, ஊடக சாம்ராஜ்ஜியங்களையும் கட்டிக் காத்து வருகின்ற அசாத்தியப் பின்னணி அவர் மீதும் அவரோடு இருக்கும் குழுவினர் யார் என்றும் கேள்விகளை எழுப்புகின்றது. அவ்வாறு அவர் அனைத்தையும் தன் கட்டுக்குள் வைத்திருப்பவராக இருப்பின் நிச்சயம் அவரது ஆளுமை அசாத்திய ஆற்றல் கொண்டதுதான்.

இறுதியாக அர்துகான் – குலான் முரண்பாடுகள் குறித்து பரவலாக எழும்பும் சில கேள்விகள் உள்ளன:

1. அர்துகானுக்கு முன்பே துருக்கியை ஆட்சி செய்த சியோனிஸ ஆதரவு ஆட்சியாளர்கள் காலம் தொட்டு அரசுக்குள் நுழைந்து நிழல் அரசொன்றை நடாத்த முற்படுவதன் நோக்கம் என்ன?

2. குலான், அமரிக்க-இஸ்ரேலிய கூட்டுடன் சேர்ந்து அடைய விரும்பும் இலக்கு என்ன?

3. எர்கொனிக்கன் சதித் திட்டம் அர்துகான் அரசுக்கு எதிராக தீட்டப்பட்டபோது, அதனை வெளிக்கொணர்ந்து சதியை முறியடிக்க குலான் அணியினர் உதவியது ஏன்?

4. துருக்கி அரசுதான் இலக்கு என்றால் உலகளாவிய அளவில் குலானின் அமைப்பை விரிவாக்கம் செய்வதால் அவர்கள் எந்த அரசியல் இலக்கை அடைய நினைக்கிறார்கள்?

பரவலான அரசியல் மர்மங்களுக்குக் காலம்தான் பதில் சொல்லக்கூடியது. துருக்கிய அர்துகான் – குலான் விவகாரத்திலும் இவ்விடயம் பொருந்திவரும் எனலாம்.

வல்லவன் அல்லாஹ் நம்மை நல்ல விடயங்களில் நிலைத்திருக்கச் செய்வானாக!

 

M.S.M. Siaaf Naleemi

siaafmq@gmail.com

23072016 – 09.00 PM

(கட்டுரை வரைவதற்கென சொடுக்கிய அனடொலு ஏஜன்ஸி, அஸர்பைஜான் பொலிட்டிக்ஸ், அல்ஜஸீரா, அல்மொனிட்டர், சர்வதேச விவகாரங்களுக்கான லோப்லொக் இணையம், அல்வஃங்த் உட்பட்ட இணையதளங்கள் அனைத்துக்கும் நன்றிகள். முகநூல் சகோதரர் இம்ரான் ஹுஸைன் அவர்களுக்கு விஷேடமான நன்றிகள்)

துருக்கிய இராணுவ சதி முயற்சி – சில புலனாய்வுக் குறிப்புக்கள்

 

Screenshot_2016-07-23-13-03-10

 

பகுதி-01

இருள் சூழ்ந்த கடினமான இரவொன்றுக்குப் பின் துருக்கிய வீதிகள் வழமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றன. துருக்கி இராணுவத்தினரின் ஒரு பிரிவினரின் மிகப் பலமான திட்மிடலுடனும் அமெரிக்கா-இஸ்ரேல்-யூஏஈ-பத்ஹ் கூலன் கூட்டுச் சதிப் பின்னணியுடனும் மேற்கொள்ளப்பட்ட இராணுவ சதிப் புரட்சி முயற்சிகள் கிட்டத்தட்ட முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டு விட்டன. அங்காரா வான் பரப்புக்களில் பறந்துகொண்டிருந்த சதிகாரர்கள் கட்டுப்படுத்திய F-16 ரக விமானங்கள் மூன்றும் ஹெலிகப்டர் ஒன்றினதும் இரைச்சல் சப்தங்கள் முற்றாக அடங்கியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

மக்களுக்காக, ஜனநாயகத்துக்காக களமிறங்கியதாகக் கூறிக் கொண்டே எல்லோருக்கும் தெரிந்த சில பினாமிகளின் பிரதிநிதிகளான இராணுவக் கும்பல் அந்தப் பொதுமக்கள் மீதே குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்ளத் துவங்கியமை யாருடைய தேவைக்கு இவர்கள் ஆட்டம் போட முயல்கிறார்கள் என்பதற்கான பதிலாகும்.

அர்துகானின் ஒரு ஸ்கைப் அழைப்புக்கு செவியேற்று அந்த நள்ளிரவில் வீதிக்கு இறங்கி வந்த மில்லியன் கணக்கான துருக்கிய மக்கள், அர்துகானின் அபரிமித மக்கள் செல்வாக்குக்கு சான்றாகியது. இதுவரைக்கும் வீதிகளில் திரண்டு மக்கள் தமது அரசினை அவர்களாகவே பாதுகாக்கும் பிரயத்தனத்தில் இருப்பது உளப் பூரிப்பைத் தருகிறது. வீடியோக்களாக வெளிவந்து கொண்டிருக்கும் மக்கள் திரளும் பள்ளிவாசல்கள் நிரம்பி வழியும் பிரார்த்தனைகளும் எத்தனையோ செய்திகளைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. இறுதியில் பத்ஹ் கூலனும் ஒபாமாவும் நெட்டன்யாஹுவும் டுபாய் அரசன் கலீபா ஆலு நாஹியானும் மூக்குடைபட்டு திரைமறைந்து நின்றுகொண்டிருக்கின்றனர்.

அர்துகான் விடுமுறையில் இஸ்தான்பூலுக்கு வெளியே மர்மரா பகுதியில் ஓய்வெடுக்கையில் சதி நடவடிக்கைகள் துவங்குகின்றன. அர்துகானுக்குத் தகவல் பறக்க உடனடியாக இஸ்தான்பூலுக்குப் பறந்து துருக்கிய அரசின் உத்தியோகபூர்வ TRT தொலைக்காட்சி சேவை முடக்கப்பட்டிருந்ததால் ஹபர் துர்க்கியா மூலமாக முதன் முதலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். அவ்வுரை பென்சில்வேனியாவிலிருக்கும் பத்ஹ் கூலனுடன் மேற்கு, அரபு சியோனிஸ்டுகளை சாடியிருந்ததோடு சதிகாரர்கள் எதிர்கொள்ளவிருக்கும் மிகப் பாரிய பின்விளைவுகள் பற்றியும் எச்சரித்திருந்தது. மேலும் மக்களைப் பாதுகாக்க வேண்டிய இராணுவ ஆயுதங்கள் மக்களுக்கு எதிராகத் திரும்பக் கூடாது என்ற காட்டமான எச்சரிக்கையையும் முன்வைத்திருந்தார். அதற்கிடையில் மர்மரா ஹோட்டலுக்குள் அர்துகானை சிறைப்படுத்தும் முயற்சிகள் மற்றும் அவர் பயணிக்க இருந்த விமானத்தை முடக்கும் முயற்சிகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டிருந்தன.

கேர்ணல் முஹாரம் கோஷா என்பவர் சதிக்கான சூத்திரதாரியாக அடையாளம் காணப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரைக்கும் ஜெனரல், கேர்ணல் தர தளபதிகள் உட்பட 800 வரையான இராணுவத்தினர் கைதாக்கப்பட்டுள்ளனர். சதிகாரர்களால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த முப்படைகளின் ஆலோசகரும் பொலிஸாரின் நடவடிக்கை மூலம் மீட்கப்பட்டிருக்கிறார்.

முழுமையான பொலிஸ் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு புரட்சியை முறியடிப்பதில் பங்காற்றியது. இராணுவத்தின் கணிசமான பகுதி மற்றும் கடற்படை என்பன சதிப் புரட்சியை புறக்கணித்திருந்தன. இராணுவத் தளபதியும் தான் புரட்சியில் பங்கெடுக்கவில்லை என அறிவித்திருந்தார். அத்தோடு எதிர்க்கட்சிகளும் புரட்சியை தாம் ஏற்பதில்லை என அறிவித்திருந்தது ஆரோக்கியமான ஜனநாயகத்தைப் பிரதிபலித்திருந்தது. எனினும் இச்சதி நடவடிக்கையை முற்கூட்டியே அறிந்திருந்தவர்கள் யாவர்? மற்றும் சதி வெற்றி பெறுமிடத்து இணைந்துகொள்ளச் சித்தமாயிருந்த துரோகத் தரப்புக்கள் எவை போன்ற புலனாய்வுத் தகவல்கள் எதிர்காலத் துருக்கியின் அமைதிக்கு மிகுந்த முக்கியமானவை.

சதி நடவடிக்கைகள் ஆரம்பித்து சில மணிநேரங்களுக்குள்ளேயே பாதுகாப்புத் தரப்புகள், ராஜதந்திர நடவடிக்கைகள், நேரடியாகவே மக்களை வழிநடாத்துதல் என துருக்கிய அதிபர் ரஜப் தையிப் அர்துகான் மிக்க செயலாற்றலுடன் களத்திலிருந்தார். மக்கள் முன் 5 தடவைகளுக்கும் மேலால் தோன்றி சதியை முறியடிக்கும் பணியை நேரடியாகவே மேற்கொண்டார். ஃபஜ்ர் அதானுக்கு 3 மணி நேரங்கள் முன்பதாக அதான் மற்றும் தக்பீர் மூலம் மக்கள் வீதிகளில் திரண்டிருந்தனர். ஃபஜ்ர் அதானுடன் பெருநாள் தக்பீர்கள் துருக்கி முழுதும் ஓங்கி ஒலித்து சதிப் முயற்சி தோல்வியடையச் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டன. காஸா உட்பட பல பிரதேசங்களில் கொண்டாடப்பட்ட சதிப் புரட்சி முறியடிப்பின் வெற்றியானது முஸ்லிம் உலகுக்கு துருக்கியின் ஸ்திரத் தன்மை எவ்வளவு முக்கியமானது என்பதனைக் குறிக்கின்றது.

இச்சதி முயற்சிகளின் பின்னணிகள் குறித்து அரபுலகின் அல்முஜ்தமஃ சஞ்சிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் ஷஃபான் அப்துர்ரஹ்மான் சில தகவல்களைத் தனது முகநூலில் பதிவிட்டிருந்தார். அவை:

1. துருக்கியிலுள்ள பிரான்ஸ் தூதரகங்கள் இரண்டும் (இஸ்தான்பூல்/அங்காரா) மூடப்படுவதாக கடந்த வியாழனன்று பிரெஞ்சு அதிபர் அறிவித்திருந்தார். இவ்விரண்டு கட்டடங்களும் சதி முயற்சிகளின் முக்கிய தளங்களாக செயற்பட வாய்ப்புக்கள் மிக அதிகம்.

இங்கு, பிரான்ஸ் இதுவரைக்கும் சதி முயற்சி குறித்து மௌனம் காக்கின்றமை கவனிக்கத்தக்கது. இதன் மூலம் துருக்கிக்கும் தமக்கும் இடையில் எவ்விதக் கொடுக்கல்-வாங்கல்களும் இல்லாதது போல் காட்ட முயற்சிக்கிறது.

2. அடுத்து நேற்றைய தினம் அமெரிக்க வெளியுறவு செயலர் ஜோன் கெரி ரஷ்யாவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். அதன் இறுதியில் துருக்கிய சதி நடவடிக்கைகளுக்கு சிலமணிநேரங்கள் முன்பு தாம் சிரியாவில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து பேச்சுவார்த்தைகள் நிகழ்த்தியதாகக் குறிப்பிட்டிருந்தார்.

பல்வேறு தரப்புக்களுக்கு இடையிலும் யுத்தங்களை ஏற்படுத்தி சிரிய மக்களைக் கொலை செய்து பஷர் அல்அஸதைப் பாதுகாப்பது தவிர வேறு எந்த அஜண்டா அமெரிக்கா-ரஷ்யாவுக்கு இருக்கப் போகிறது எனக் கேள்வி எழுப்பும் ஷஃபான் அப்துர் ரஹ்மான், நிச்சயமாக நேற்று நிகழ்ந்த பேச்சுவார்த்தைகள் துருக்கிய இராணுவ சதிப் புரட்சி வெற்றிபெறுமிடத்து மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தைகளே அங்கு நிகழ்ந்திருக்கும் என அடித்துக் கூறுகிறார்.

உலகில் எந்த அநியாயம்-அக்கிரமம்-குள்ளநரித்தனம் நிகழ்ந்தாலும் அங்கு அமெரிக்காவுக்கு நிச்சயம் ஒரு கை இருக்கும் என்பது பொது விதியாகவே உலக வரலாறு உள்ளெடுத்துக் கொண்டுவிட்டது. இப்பின்னணியில் அமெரிக்காவும் ஐரோப்பியப் பெருச்சாளிகளும் துருக்கிய சதி தோல்வியடையப் போகிறது என்றவுடன் அரசுக்கும் மக்களுக்கும் ஜனநாயகத்துக்கும் ஆதரவு என்ற தொனியில் பச்சோந்தி ஸ்டேட்டஸ்மன்ட் ஒன்றைத் தெறிக்கவிட்டது.

நிகழ்வுகளுக்கெல்லாம் அப்பால் தோன்றிக் கொண்டிருக்கும் புதிய உலக ஒழுங்கொன்றுக்கான முக்கிய மைல் கல்லாக நிச்சயம் நள்ளிரவுடன் நிகழ்ந்து முடிந்த துருக்கிய நிகழ்வுகள் இருக்கும் என்பது சர்வ நிச்சயம்… இன்ஷா அல்லாஹ்.

அத்தோடு துருக்கியின் தேசிய நீரோட்டம், முஸ்லிம் உலக அரசியல், சர்வதேச அரசியலில் முதலாளித்துவக் கார்ப்பரேட்டுகள், கம்யூனிஸ இடதுசாரிகள், ஸலபிப் போக்குகள் கொண்டவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இந்நிகழ்வுகளோடு எத்தகைய கொடுக்கல்-வாங்கல் செய்தனர் என்பதிலும் எதிர்கால இஸ்லாமின் எழுச்சிக்கு நிறையவே பாடங்கள் படிப்பினைகள் இருக்கின்றன. அதற்கென பிறிதொரு பத்தியை ஒதுக்குவோம்… இன்ஷா அல்லாஹ். அல்லாஹ் நம் அனைவரது பணிகளையும் ஏற்று அருள்புரியட்டும்.

16072016 – 11.30 AM

 

பகுதி-02

 

துருக்கிய தலைநகர் இஸ்தான்பூலிலிருந்து எழுதுகிறேன் என தொடர்ந்தும் தன் முகநூலை அப்டேட் பண்ணிக் கொண்டே இருக்கிறார் அரபுலக பிரபல அல்முஜ்தமஃ சஞ்சிகை ஆசிரியர் ஷஃபான் அப்துர் ரஹ்மான் அவர்கள்.

நேரடியாகக் களத்திலிருந்தே அவர் தரும் தகவல்கள் அல்ஜஸீரா உட்பட அனைத்து ஊடகங்களையும் விட விரைந்து செய்திகளையும் தகவல்களையும் புலனாய்வு நோக்கிலான பார்வைகளையும் தந்துகொண்டே இருக்கிறது.

நேற்று காலை ஒரு பிரபல எழுத்தாளர் கூறியது போன்று 10,000 சொற்களுக்கு கட்டுரை எழுதலாம் என்பது நேரம் செல்லச் செல்ல 40,000-50,000 என ஆய்வுக் கட்டுரைகளே எழுதலாம் எனும் அளவுக்கு திடுக்கிடும் பின்னணிகள் நிறைந்தும் முக்கிய பல தலைகளின் சதி முகங்கள் அம்பலப்பட்டும் வருகின்றன. கட்டுரை எழுதத் துவங்கி தட்டச்சு செய்துவிடுவதற்கிடையில் பலப்பல புது விடயங்கள் கட்டுரையைக் காலாவதியாக்கிடும் என்ற அளவு வீச்சுக் கொண்ட நிகழ்ச்சிகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.

உண்மைத் தகவல் எதுவெனில் இன்னும் சதிப் புரட்சி முழுமையாக முறியடிக்கப்படவே இல்லை. Plan-B யாக மீள் சதியொன்று நிகழ்வதற்கான சாத்தியப்பாடுள்ள நிகழ்வுகள் பற்றியும் துருக்கிய புலனாய்வுத் துறையினர் எச்சரிக்கையோடு கருமமாற்றுகின்றனர். மக்கள் இப்போது வரைக்கும் வீதிகளில் இருக்குமாறு வேண்டப்பட்டிருக்கின்றனர்.

மக்களில் சுமார் 161 பேர் இரத்தம் சிந்தி ஷஹீதுகளாகவும், 1440 க்கும் மேற்பட்டோர் காயம்பட்டும் தம் தேசத்திற்குத் தாங்கள் தெரிவு செய்த அரசைப் பாதுகாத்தனர்.

இதுவரைக்கும் சதித்திட்டத்தில் பங்கேற்ற, துணைபோன இராணுவத் தலைகள் 8,000 க்கும் மேல் நேற்றிரவு வரைக்கும் கைதாக்கப்பட்டுள்ளதாக துருக்கிய பாதுகாப்பு வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. மேலும் கைதுகள் பல மடங்காவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன.

நீதிபதிகள் 2,745 பேர் துருக்கிய நீதித் துறை நீக்கியுள்ளது. இவர்களில் இருவர் அரசியலமைப்பு நீதிமன்ற நீதிபதிகள் மற்றவர்களில் பத்து பேர் துருக்கியின் உச்ச நீதித் துறை அமைப்பான HSYK (Supreme Board of Judges and Prosecutors) ஐச் சேர்ந்தவர்களாவர். பல்வேறு துறைகளையும் சார்ந்து மொத்தமான பதவி நீக்கங்கள் 20,000 வரை அதிகரிக்குமென தகவல்கள் கூறுகின்றன.

இது இன்னும் பாரிய ‘கிளீனிங்’ திட்டமொன்று இருக்கிறது என்பதைக் காட்டுகின்றது. துருக்கியை நாசகாரிகளிடமிருந்து இன்னும் சுத்தப்படுத்த பாரிய வாய்ப்பொன்று கிடைத்திருக்கிறது என அடித்துச் சொல்லலாம்.

தொடர்ந்து கொண்டிருக்கும் மக்கள் கொண்டாட்டங்கள் இந்த வெற்றி மக்களுக்கேயானது என்பதை உரத்துச் சொல்லிக் கொண்டிருக்கின்றது.

மறுபுறமாக ஏற்கனவே நான்கு (1960-1971-1980-1997) பிரதான இராணுவப் புரட்சிகளுக்கு முகம்கொடுத்து பலமுறை பலவீனப்பட்ட துருக்கிய மக்கள் இம்முறை இராணுவக் கேடிகளுக்கு இடம் வைத்துவிடவில்லை.

இன்னொரு பார்வைக் கோணத்தில் சொல்வதாயின் துருக்கி அதிபர் ரஜப் தையிப் அர்துகான் தொடரும் தனது பதினான்கு வருட (2002-இன்றுவரை) சுபீட்ச ஆட்சிக் காலப் பகுதியில் மக்களை நன்றாகவே பலப்படுத்தியிருக்கிறார். தடியெடுத்தவன் தண்டல்காரன் போல் ரவுடித்தனம் மிக்க இராணுவம் அதன் நச்சுப் பற்கள் பலவும் பிடுங்கப்பட்டே இருக்கின்றது. மக்கள் தலை நிமிர்ந்து வாழும் சூழல் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது.

நேற்று முன்தினம் ஷஹீதுகளின் ஜனாஸா நல்லடக்கத்திற்கு முன்னர் மக்களிடத்தில் பேசிய துருக்கிய பிரதமர் பினாலி யில்திரிம் துருக்கிய மக்களின் வீரத்தை மெச்சியதோடு சதிகாரர்களின் சொதப்பல் திட்டத்தையும் சாடினார்.

அல்ஜஸீரா, அல்முஜ்தமஃ போன்ற இணையப் பக்கங்களின் கருத்துக்களின்படி பிரதான சூத்திரதாரியாக துருக்கியக் கார்ப்பரேட் மதகுரு பத்ஹ் குலான் மற்றும் அவரது ஹிஸ்மத் நோக்கி ஏகோபித்த பார்வை நீள்கிறது. கிளர்ச்சியில் ஈடுபட்டோர் அதன் இரகசிய இயக்க உறுப்பினர்களாகவே உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதற்குப் பின்னணியில் திட்டம் வகுத்து சதியை சர்வதேச வல்லூறு அமெரிக்காவே முற்றாக இயக்கியது. அதன் பிரதான பாத்திரத்தை கனவான் ஜோன் கெர்ரி சதியின் தோல்விப் படலம் வரைக்கும் ஏற்று வழிநடாத்தியுள்ளான்.

தக்க நேரத்தில் ரஷ்யாவுடன் சதிக்கூட்டு ஆலோசனை செய்தமை, அமெரிக்க தூதரக (துருக்கியில் மக்கள் புரட்சி நடப்பதாக வெளியிட்டுப் பின் வாபஸ் பெற்ற) அறிக்கை, காலம் தாழ்த்தி அர்துகான் அரசுக்கு அங்கீகாரமளித்து வெளியாகும் அறிக்கைகள் என்பன அந்த அதிகார ஆணவங்களை கேட்டு வாங்கிக் குட்டுப்பட்டுத் தலை குனிந்து விடச் செய்துவிட்டன.

அமெரிக்கக் குறுமதியாளன் ஜோன் கெரி சதி தோல்வியடைந்த விரக்தியில் வெட்கமின்றிப் பிதற்றித் திரிகிறான். இராக்கிலும், சிரியாவிலும் நரித்தனங்கள் செய்துவிட்டு ‘சட்டத்தின் ஆட்சி நடக்க வேண்டும்’ என்று அர்துகானுக்கே பாடமெடுக்கப் புறப்பட்டிருக்கிறான்.

அமெரிக்கப் பின்னணியோடு பத்ஹ் குலானின் இயக்கத்தவரைப் பயன்படுத்தி செய்யப்பட்ட இந்த மெகா சதி ப்ராஜக்டுக்கென சுமார் மூன்று ட்ரில்லியன் டாலர்கள் வரைக்கும் செலவிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இறுதி தினத்தன்று மேலும் ஒரு ட்ரில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டிருந்தது.

இதன் பெரும்பகுதியை டுபாய் அரசன் கலீபா ஆலு நாஹியான் தான் சுரண்டும் பணத்திலிருந்து வகைதொகையின்றிக் கொடுத்து மறுமைக்கான தனது ஏட்டில் பெருந்தொகையை வரவு வைத்துப் பல்லிளித்துக் கொண்டு இருக்கிறார். (இது அல்முஜ்தமஃ முன்னாள் பிரதம ஆசிரியர் ஷஃபான் அப்துர் ரஹ்மான் கலாநிதி முஹம்மத் ஜவாதியை மற்றும், agelpost இணையம் கலாநிதி அப்துல்லாஹ் நபீஸியையும் மேற்கோள் காட்டி நம்பகத்தன்மையோடு பதிவு செய்திருந்த தகவல்)

துருக்கியில் இருக்கும் சுபீட்ச ஆட்சி பிடுங்கப்படுவதனூடாக முஸ்லிம் உலகு மேலும் மீட்சி பெறாது தாமதப்படுத்தப்பட வேண்டும் என்பதே துருக்கியில் நிகழ்ந்த களேபரங்களின் மொத்த இலக்காகும். அதற்காகவே அந்த நான்கு ட்ரில்லியன் என்ற மெகா பட்ஜட் ஒதுக்கப்பட்டது.

எனவே பத்ஹ் குலான் என்ற கார்ப்பரேட் மதகுருவைப் பொறுத்தவரைக்கும் அர்துகானின் அதிருப்தியாளர் என்ற வகையிலான துருப்புச் சீட்டோ அல்லது பகடைக் காயோ மாத்திரம்தான்.

இதற்குப் பின்னால் அமெரிக்காவின் மெகா பங்கு இருப்பது போலவே தனது வீழ்ச்சிப்படிகளை எண்ணத் துவங்கியிருக்கும் இஸ்ரேலியப் பயங்கரவாதக் கும்பலும் இருக்கின்றது. இஸ்ரேலை இராணுவ-அரசியல்-ராஜதந்திர ரீதியில் பலவீனப்படுத்துவதில் அண்மைக் காலத்தில் துருக்கி பெற்ற வெற்றிகள் இங்கு குறிப்பிடத்தக்கவை.

அதுபோன்றே நீண்ட காலத்தில் தம் மன்னராட்சியைத் தமக்கும் தம் பரம்பரைகளுக்கும் பாதுகாக்கவும் தாம் வாக்களித்துள்ள படி சியோனிஸத்தைப் பாதுகாக்கவுமே டுபாய் அரசன் ட்ரில்லியன் கணக்கில் கொட்டிக் கொண்டிருக்கிறான்.

இந்த சதியின் பின்னணியில் இருக்கும் அமெரிக்கா-இஸ்ரேல்-யுஏஈ கூட்டுக் குறித்த இன்னும் பல புலனாய்வுத் தகவல்களை காலம் தன்னுள் வைத்திருக்காது நிச்சயம் வெளித்தள்ளிவிடும்.

துருக்கிய தேசத்தைப் பொறுத்தமட்டில் முஸ்தபா கமால் பாஷா என்ற இயற்பெயர் கொண்ட அத்தா துர்க் மூலமாக நயவஞ்சகத்தனமாக கிலாபத் வீழ்த்தப்பட்டதன் பிற்பாடு இராணுவத்தின் கரம் எப்போதும் மேலோங்கி இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ளப்பட்டது.

மேற்குலகின் இஸ்லாமிய எதிர்ப்பு நலன்களுக்கு பாதகம் விளையப் பார்த்த போதெல்லாம் அங்கு இராணுவப் புரட்சிகள் நிகழ்ந்தன.

ரஜப் தையிப் அர்துகான் ஆட்சிக் காலம் ஆரம்பம் தொட்டு இந்த அபாயம் இருந்த போதும் அவர் கவனமாகத் திட்டமிட்டு இராணுவ ஆதிக்கம்-அதிகாரம்-பலத்தை விட்டும் தேசத்தையும் மக்களையும் விடுவித்தார்.

கடைசியாக 2013ம் ஆண்டளவில் இராணுவ சதியொன்றுக்கான ஏற்பாடுகள் நிகழ்ந்த போது பல அதிரடிக் கைதுகள் நிகழ்ந்து பாரிய களையெடுப்புகள் இடம் பெற்றன.

2014ம் ஆண்டு இறுதியாகும் போது பத்ஹ் குலான் இயக்கத்தின் அதிகார ருசிகள் அம்பலப்பட்டதிலிருந்து மீளவும் சதிகளுக்கான சாத்தியங்கள் தோன்றின.

இந்த ஆண்டு(2016) ஜனவரியில் குவைத் இஸ்லாமிய அறிஞர் கலாநிதி அப்துல்லாஹ் நபீஸி தனது ட்விட்டரில் ரஷ்யா-ஈரான் கூட்டுச் சதியுடனும் வளைகுடா நாடொன்றின் நிதியளிப்பில் எகிப்திய பாணியில் சதியொன்றுக்குத் திட்டமிடல்கள் இருப்பதாக முதன்முதலில் அறிவித்திருந்தார்.

எகிப்திய சதிக்கும் வாரி வழங்கிய யூஏஈதான் அந்த வளைகுடா நாடு என்பதும் டுபாய் டுபாக்கூர் ராஜா கலீபா ஆலு நாஹியான் தான் அந்த அற்புதப் பிறவி என்பதும் வெட்டவெளிச்சமான உண்மை.

இவ்விடத்தில் சிலர் அர்துகான் சதிப் புரட்சிக்கு எதிராகப் பெற்ற வெற்றியையும் எகிப்தில் கலாநிதி முர்ஸியின் பதவி கவிழ்ப்பையும் ஒப்பிட்டு நோக்குகின்றனர்.

14 வருடங்கள் தொடர்ந்தேர்ச்சியான ஆளும் வாய்ப்புப் பெற்றுப் பல மாற்றங்களையும் சாதனைகளையும் நிகழ்த்திக் காட்டிய அர்துகானின் சூழலும் அணுகுமுறைகளும் கலாநிதி முர்ஸி எகிப்தில் எதிர்கொண்ட சூழலும் வெவ்வேறானவை.

துருக்கியில் மதச்சார்பற்றோர், எதிர்க்கட்சிகளும் அர்துகானுடன் ஒன்றாக கைகோர்த்திருக்கும் சூழல் இருந்தது. அத்தோடு அங்கே எகிப்து ஹிஸ்புந்நூர் போன்று ஸலபி, வஹாபிகளும் இல்லை. கிலாபத் உடைப்பை பிரிட்டனுடன் இணைந்து செய்த துரோகம் துருக்கியில் வஹாபிஸ வெறுப்பை விதைத்து அங்கு அதன் பரவலைத் தடுத்திருக்கின்றது.

கலாநிதி முர்ஸியின் ஒரு வருட கடினப் பயணத்தில் அவரைச் சூழ இருந்த அரசு நிர்வாகத் துறையினர், இராணுவம் என முழுதும் முபாரக் யுகத்தைச் சேர்ந்த இஸ்லாமிய எதிர்ப்புப் போக்குக் கொண்டவர்கள். அடுத்து மதச்சார்பற்றோருடன் இணைந்து அரசியல் ஞானசூனியங்களான ஹிஸ்புந்நூர் ஸலபி, வஹாபிகளும் கலாநிதி முர்ஸிக்கு எதிராகப் போராட்டங்களில் குதித்திருந்தனர். எகிப்திலே முஹம்மத் முர்ஸிக்கும் இஃக்வான்களுக்கும் எதிராக நின்றது போல் துருக்கி தொடர்பில் உலகளாவிய ஸலபிக்கள் எதிர் நிலைப்பாட்டை எடுக்காமைக்கு பல்வேறு அரசியல் நலக் காரணிகள் உள்ளன என்பது முக்கியமானது.

துருக்கிய சதிப் புரட்சியின் தோல்விக்குப் பின்பாக இஸ்லாமிய உலகின் முக்கிய அறிஞர்கள் பலரும் துருக்கிய அதிபர் அர்துகானைப் பலப்படுத்தும் உறுதிமிக்க வாசகங்கள் கொண்ட கடிதங்களை அனுப்பி வைத்திருந்தனர். சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் பேரவைத் தலைவர் ஷெய்க் யூஸுப் அல்கர்ளாவி ‘அல்லாஹ்வின் உதவியும் உலக முஸ்லிம்களின் பேராதரவும் எப்போதும் உண்டு’ என்ற கருத்தை மிக வலியுறுத்தியிருந்தார். ஷெய்க் அலி கரதாகியின் கடிதம் பிரார்த்தனைகளால் நிரம்பியிருந்தது. கடிதத்தின் இறுதியில் அவர் “மேலும், அவர்கள் அவருக்குச் சதி செய்ய நாடினார்கள், ஆனால் நாம் அவர்களையே நஷ்டவாளிகளாய் ஆக்கினோம்!” என்ற அல்குர்ஆனிய வசனத்தை இணைத்திருந்தமை மெய் கூச்செறியச் செய்தது. ஆம்… சதிப் புரட்சிக்கான திட்டமிடல்கள் பலரும் நினைப்பது போலன்றி மிகப் பாரியதாக, நுணுக்கமானதாக, ஆழமானதாக, முழுமையானதாக, நேர்த்தியானதாக இருந்தன.

பௌதிக ரீதியில் மிகத் திறம்பட திட்டமிடப்பட்ட இச்சதி தோல்வியடைவது சாத்தியம் குறைந்ததாக கருதப்பட்டது.

எனவே மக்கள் இதனை வெற்றி கொண்டமை ஒரு வகை அற்புதம் என்றே கொள்ளப் படவேண்டும்.

முழு இஸ்லாமிய உலகும் அர்துகானோடும் அர்துகானுக்காகவும் துருக்கியோடும் துருக்கிக்காகவும் எழுந்து நிற்கின்றது. வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் நன்மைகளில் ஒன்று சேர்த்து விடட்டும்!!!

 

M.S.M. Siaaf Naleemi

siaafmq@gmail.com

19072016 – 08.00 AM

(கட்டுரையை வரைய அல்ஜஸீரா, அல்முஜ்தமஃ, agelpost இணைய தளங்களையும் உசாவினேன். மேலும் அல்முஜ்தமஃ பிரதம ஆசிரியர் ஷஃபான் அப்துர் ரஹ்மான், ஷெய்க் முஹம்மத் பகிஹுத்தீன், ஷெய்க் பைரூஸ் மஹாத், சகோ. அஷ்கர் தஸ்லீம் ஆகியோரின் முகநூல் தகவல்கள் உதவின; அத்தோடு துருக்கிய நண்பர் ஒர்ஹான் கராகிஸ் களத்திலிருந்து நேரடியாகவே தகவல் பரிமாற்றம் செய்தார். அனைவருக்கும் நன்றிகள்.)